இனப்படுகொலை குறித்து தொடர்ந்து பேசுவோம் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:18

29--11--2015அன்று பிரான்சு நாட்டின், பாரிஸ் நகரில் நடைபெற்ற ்தமிழீழம் – சர்வதேச நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கான செயற் திட்ட கருத்தரங்க்த்தில் இணையம் வழியாக பூங்குழலி ஆற்றிய உரை.

தமிழீழம் – சர்வதேச நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கான செயற் திட்டத்தை உருவாக்க இங்கு கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

2009-க்குப் பிறகான காலக்கட்டத்தில், உலக நாடுகள் நமது சிக்கலை பற்றி பேசுகின்றன. அய்க்கிய நாடுகள் அவையும் பேசுகிறது. உலகின் கவனத்தை நம்பக்கம் ஈர்த்து விட்டது போல் தோன்றுகிறது. ஆனால், நாம் விரும்பும் திசை நோக்கி உலகம் செல்கிறதா, அல்லது உலகம் நமது சிக்கலை கொண்டு செல்லும் திசையில் நாமும் செல்கிறோமா? என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

நாம் தொடர்ந்து இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். இலங்கையில் நடந்தது தமிழர்கள் மீதான இனப் படுகொலை. அது இன்னமும் தொடர்கிறது என்பதை நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் உலகில் எந்த ஒருநாடும், அல்லது, அய்க்கிய நாடுகள் அவையின் எந்த ஒரு விவாதத்திலும் இனப்படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படவே இல்லை. அவை தொடர்ந்து போர்க் குற்றங்கள் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றன.

போர்க் குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இலங்கையில் நடந்துள்ளன என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் உலக சமூகம் இனப் படுகொலை என்ற சொல்லை மட்டும் முற்றிலுமாக தவிர்ப்பது ஏன்?

மறுபுறம், நாம் போர்க் குற்றங்கள் என்ற அளவோடு நின்று விடாமல் நடந்தது இனப்படுகொலை என்பதை வலியுறுத்த வேண்டிய தேவை என்ன? இந்த இரண்டு கேள்விகளும் இன்றைய காலக் கட்டத்தில் மிக முக்கியமானவை என்று நான் கருதுகிறேன்.

உலகை பொருத்தவரையில் ஒரு தற்காலிக தீர்வை நோக்கியே அது பயணப்படுகிறது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டங்கள் இரண்டும் போர்க் காலத்தில் நடந்து கொள்ளவேண்டியமுறை குறித்தவை. அவை போர் இல்லாத காலங்களில் நடக்கும் இம் மாதிரியான குற்றங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

ஈழச் சிக்கலைப் பொருத்த அளவில் உலகம் 2009-இல் உறைந்து நிற்கிறது. அதற்கு முன்பு நடந்தவையும் பேசப்படுவதில்லை. அதற்கு பின் இன்று வரை நடப்பவையும் பேசப்படவில்லை. 2009-இல் போர் நடந்த காலத்தில் நடந்த குற்றங்கள், அதாவது, போர்க் குற்றங்கள் குறித்து மட்டுமே பேசப்படுகிறது. அதற்கும் முன்பு தொடங்கி அதற்கு பின்பும் இன்று வரையிலும் தொடரும் இனப் படுகொலை குறித்து உலகம் பாராமுகமாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

எந்த ஒரு உரிமை மீறலுக்கும் சட்டம் மூன்று வகையான நிவாரணங்களை அளிக்கிறது. இழப்பீடு, மீட்பு மற்றும் தண்டனை. இது உலக அளவில் எந்த சட்டத்திற்கும் பொருந்தக் கூடியது. அந்த வகையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரிந்தது என்பது உறுதிப் படுத்தப்பட்டால் அதற்கான நிவாரணமாக, குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு, அம்மக்கள் இழந்த வாழ்வை மீட்டெடுத்து அவர்களுக்கு திரும்ப அளிப்பது பன்னாட்டுச் சமூகத்தின் கடமையாகிறது

அதாவது போர்க் குற்றம் நடந்த காலத்தில் இருந்த அரசையும், அந்த அரசிற்கு தலைமையேற்ற அரசியல் வாதிகளையும், பொறுப்பில் இருந்த அதிகாரிகளையும் தண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை செயற்படுத்துவது, அதாவது இராஜபக்சே மற்றும் அவர் கூட்டாளிகளை தண்டிப்பது என்ற அளவோடு நின்றுவிடும். இது தமிழர்களின் சிக்கலை நிரந்தரமாக தீர்க்கப் போவதில்லை. ஈழத்தமிழர்களின் போராட்டம் எந்த ஒரு தனி மனிதருக்கு எதிரான போராட்டம் அல்ல. ஆக தனி மனிதர்களை அடையாளப்படுத்தி அவர் களைத் தண்டிப்பதினால் எவ்வித தீர்வும் கிட்டி விடப் போவதில்லை. அதே போன்று மறுவாழ்வு என்ற பெயரில் மிகப்பெரும் வியாபார சந்தை திறந்து விடப்படுவதைக் கடந்து அதனாலும் தமிழர்களின் சிக்கல் தீரப்போவதில்லை.

இனப் படுகொலையும் ஒரு குற்றச்செயலே. ஆனால் அது வரலாற்று நோக்கில் தமிழர்களின் சிக்கலை முழுமையாக தெளிவாக்கும். "பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற முழக்கத்தின்அடிப்படையில், உலகில் உள்ள ஒவ்வொருநாடும், உலகின் எந்தப் பகுதியிலும் இனப்படு கொலை நடக்காமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன. அதனால் நடந்தது இனப் படுகொலை என்பது உறுதியானால் ஒவ்வொரு நாடும் அதற்கான பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டும். அதற்கான தீர்வு என்னவாக இருக்கவேண்டும் என்பதை குறித்த விவாதம் முன்னெடுக்கப் படும். அண்மையில் இனப்படுகொலை நடந்த நாடுகளான கிழக்குத் தைமூர், மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளில் இத்தகைய விவாதமே பொது வாக்கெடுப்புக்கு இட்டுச்சென்று அந்நாடுகளின் விடுதலைக்கு வழிவகுத்தது. அதுபோன்றதொரு வழி நமக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று சொல்லும்போது, இரு தரப்பினரையும் சமமாக வைத்தே உலகம் பேசுகிறது. இதுவரை வெளியான அய்.நா.வின் அறிக்கைகள் அனைத்திலும் இவ்வாறே இருதரப்பினரும் சமமாகவே கருதப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் போர்க் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அளவில் வேறுபாடு இருப்பினும் இருவருமே குற்றம் புரிந்துள்ளனர் என்றே சொல்லப் பட்டுவருகிறது.

ஆனால் இனப்படுகொலை எனும்போது, அது முழுமையாக சிங்கள அரசு தரப்பின் மீது சுமத்தப்படும் குற்றமாக இருக்கும். அந்நிலையில் இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே ஈழத்தமிழ் மக்களின் விடியலுக்கான முதல் படியாக நம்முன் உள்ளது அங்கு நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்பதை நிறுவுவதே ஆகும்.

இதனை உணர்ந்து நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். போர்க் காலத்தில் மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும், போருக்குப் பின்னும், இன்று வரையிலும் தமிழர்கள் மீது நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் நாம் திட்டமிட்டு வேலை செய்யவேண்டும். இதன் மூலம் மட்டுமே உலக அளவில் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தும் வாய்ப்பை நாம்பெற முடியும்.

அதிலும் குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பல மாயங்களை செய்து விடும் என்று தமிழர்கள் சிலரே நம்பத் தொடங்கி உள்ளனர். இதுவும் இலங்கை அரசின் உளவியல் போரின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அங்கே இன்னமும் ஓர் இனப்படுகொலை தொடர்கிறது என்பதை நாம் உலகம்அறிய செய்யவேண்டும். இதை குறித்த கருத்துருவாக்கத்தில் நாம் ஈடுபடவேண்டும்.

இதுவரை தமிழர்கள் நாம் மட்டுமே பேசி வந்ததை தமிழர்அல்லாத வர்களும் பேசும்படி செய்ய வேண்டும். ஈழத்தமிழர் போராட்டத்தை 30 ஆண்டுகால அறவழிப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் என்று நாம் பிரித்துக் கூறுகிறோம். முதல் முப்பதாண்டு காலம் ஈழத்தமிழர்கள் மட்டுமே போராடினார்கள். தமிழ்நாட்டில்கூட அவர்கள் போராட்டம் பற்றி பெரிதாக எவரும் அறிந்திருக்கவில்லை. அடுத்த முப்பதாண்டு காலத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது. 2009-க்கு பிறகு உலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும். ஒன்றரை இலட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்து இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்தி உள்ளனர் என்ற பொறுப்புணர்வோடு நாம் செயல்படவேண்டும்.

உலகம் என்பது அரசுகள் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள குடிமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை நாம் அணுகி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களைக் கொண்டு இலங்கையில் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்கிறது என்பதை பேசவைக்க வேண்டும்.

வல்லாதிக்க நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விடாதுதான். ஆனால் இப்படியான கருத்துருவாக்கத்தின் மூலமாக நாம் ஏற்படுத்தும் அழுத்தமே, அந்நாட்டின் அரசுகள் தமிழருக்கு எதிராக செயல்படும் வேகத்தை கொஞ்சமேனும் மட்டுப்படுத்த உதவும்.

மேலும் சர்வதேச நாடுகள் என்பது வல்லாதிக்க நாடுகளான அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் மட்டும்அல்ல. அய்க்கிய நாடுகள் அவையைப் பொருத்த அளவில் அமெரிக்காவுக்கும் உலகின் சின்னஞ் சிறிய நாட்டுக்கும் வாக்கு மதிப்பு ஒன்றுதான். மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரமுடியுமானால் அதே போன்று பராகுவே போன்ற சிறிய நாடும் கொண்டு வரமுடியும். அதற்கான வாக்கெடுப்பில் சின்னஞ்சிறிய நாடுகள் ஒவ்வொன்றின் வாக்கும் மதிப்புப்பெறும். எனவே நமது பிரச்சார களத்தை நாம் விரிவுபடுத்த வேண்டும்.

இந்த தளத்தில் நாம் தொடர்ந்து, உறுதியுடன் செயல்படவேண்டும்.

இதுதான் நமக்கான இறுதி தீர்வுக்கு, நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.