அம்பேத்கர் வெளியேறியது ஏன்? - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:24

அறிஞர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாகவும் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதின் நினைவாக வும் அரசியலமைப்புச் சட்ட நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங்-


"அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் வகுத்தபோது பல விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் சமூகம் பற்றிய கருத்துக்களுக்காக அம்பேத்கருக்கு வாழ்க்கையில் பல நெருக்கடிகள் அவமதிப்புகள், அவமானங்கள் நேர்ந்தன. பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், "இந்தியாவை விட்டு வெளியேறுவேன்' என அம்பேத்கர் ஒருபோதும் கூறவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி நடிகர் அமீர்கான் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாதநிலை நிலவுவதாகவும் இதன் காரணமாக அச்சமடைந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடலாமா? என தன் மனைவி கிரன் கேட்டார் என பேசியதைச் சாடும் வகையில் இராஜ்நாத்சிங் இவ்வாறு குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைவிட்டு வெளியேறுவதைப்பற்றி அம்பேத்கர் ஒருபோதும் சிந்தித்ததில்லை என ராஜ்நாத்சிங் கூறியிருப்பது உண்மைதான். ஆனால், அவர் இந்துமதத்தைவிட்டே வெளியேறினார் என்பது அதைவிடப் பெரிய உண்மையாகும்.

1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் இந்து திருத்த, சட்ட முடிவினை சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்வைத்தார். இந்து சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சி அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டது. 1941ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் - இந்திய அரசு சர்.பி.எல். இராவ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துக் களையும் அறிந்து இந்து சட்ட திருத்த முன்வடிவை தயாரித்தனர். 1946ஆம் ஆண்டு இந்தச் சட்ட முன் வடிவு மத்திய சட்டசபையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டது.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1948ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அவையில் இதற்கென ஒரு தேர்வுக்குழு அம்பேத்கர் தலைமையில் அமைக்கப் பட்டது. பி.என்.இராவ் குழு தயாரித்த இந்துத் திருத்தச் சட்ட முன்வடிவு நன்கு ஆராயப்பட்டு சில திருத்தங்களுடன் இறுதி வடிவம் பெற்றது. இந்து திருத்தச் சட்டம் என்று சொல்லப்பட்டாலும் சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் இந்து சமயத்தில் உள்ள அனைத்துச் சாதியினர் மற்றும் பிரிவினர் ஆகிய அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டது.

பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வியுரிமை, விதவை மறுமண உரிமை, வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை, ஜீவனாம்ச உரிமை, தத்து எடுக்கும் உரிமை, ஆணுக்கு நிகரான சமத்துவ உரிமை போன்றவை களுக்குச் சட்ட அங்கீகாரம் இதன் மூலம் கொடுக்கப்பட்டது.

இச்சட்ட முன்வடிவை அவைமுன் வைத்து பேசுகையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார். "இது புரட்சிகரமான நடவடிக்கை என கூறமுடியாது. திருமண உரிமைகள், திருமண இரத்து, தத்து எடுத்தல், வாரிசு இன்மை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்த வரையில் எந்தவகையான திணிப்பும் இல்லை. இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்புவீர்களானால் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள். இந்தச் சட்ட முன்வடிவு சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே கொண்டுவரப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.

மேலும் தனது வாதத்திற்கு ஆதரவாக வேதங்கள், இந்து சாஸ்திரங்கள் ஆகியவற்றிலிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டிப் பேசினார்.

ஆனால், சமூகப் பிற்போக்குவாதிகள் மதத்தின் பெயரால் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் திரட்டினார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 1945ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்துச் சட்டத் திருத்தம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே அடுத்த தேர்தலில் மக்களின் சம்மதம்பெற்றே கொண்டுவரவேண்டும் என்று பொருந்தாத வாதம் செய்தார்கள். இச்சட்டத்தினைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அரசியல் யாப்பு அவையின் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், துணைப் பிரதமரான வல்லபாய் படேல் ஆகியோரும் அடங்குவர்.

நாட்டைப் பிரிப்பது குறித்தும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. மக்களின் சம்மதத்தைப் பெறவில்லை. அப்படி யிருக்கும்போது நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர்களால் விடைசொல்ல முடியவில்லை.

1949ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தில்லியில் உள்ள ராம்லீலா திடலில் கண்டன கூட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்தியது. இக்கூட்டத்தில் பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோரின் உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தில் 3 நாட்கள் காரசாரமாக விவாதம் நடந்தது. பா.ஜ.க.வின் முன்னோடியான பாரத ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவரான சியாம பிரசாத் முகர்ஜி இச்சட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசுகையில் "பல நூற்றாண்டு காலமாக எவ்விதமாற்றமும் இல்லாமல் பின்பற்றப்படும் இந்துக் கலாச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்தச் சட்ட முன்முடிவு அடியோடு தகர்த்துவிடும்'' என குற்றம்சாட்டினார். ஆனால் அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அனைவரும் இச்சட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள்.

இவ்வாறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரதமர் நேரு குறுக்கிட்டு ஒரு சமரசத் திட்டத்தை வெளியிட்டார். இச்சட்ட முன்வடிவில் திருமணம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை தனியாக நிறை வேற்றலாம் என்று கூறினார். எனவே அப்பகுதி மட்டும் செப்டம்பர் 19ஆம் தேதி நிறைவேற்றப் பட்டது. ஆனால், மற்ற பகுதிகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் ஒத்திவைக்கப்பட்டன. இதைக்கண்ட அம்பேத்கர் பெரும் ஏமாற்றம் அடைந்தார். உடனடியாகப் பதவி விலகுவதாக கூறினார். இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற அரசுப் பணிகளை நிறைவேற்றும் வகையில் நாடாளு மன்றத்தின் நடப்புக் கூட்டம் முடியும்வரையில் பதவி வகிக்க ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராசேந்திரபிரசாத் பிரதமர் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் "நாடாளுமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அங்கீகாரம் அளிப்பதற்குமுன் அதனுடைய தகுதியை ஆராயும் உரிமை தனக்குண்டு'' என குறிப்பிட்டார். குடியரசுத் தலைவருடன் ஒரு மோதல் ஏற்படுவதை நேரு விரும்பவில்லை. ஆனாலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்பினார்.

1951ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது தனது பதவி விலகலுக்கான காரணத்தை நாடாளுமன்றத்தில் அறிவிக்க அம்பேத்கர் எழுந்தபோது அவருடைய பேச்சின் பிரதியை தனக்கு முன்னதாகவே கொடுக்க வேண்டும் என துணை அவைத்தலைவர் அறிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பேத்கர் வெளிநடப்புச் செய்தபோது அவையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

வெளியேறிய அம்பேத்கர் செய்தியாளர்களிடம் "இச்சட்டத்திருத்த முன்வடிவைப் பொருத்தவரையில் பிரதமர் நேரு இரண்டும் கெட்டான் கொள்கையைக் கடைப்பிடித்ததாக குற்றம் சாட்டினார். மேலும் "நமது நாட்டில் எந்த சட்டமன்றத்திலும் மேற்கொள்ளப்படாத மிகப்பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கையே இந்துச் சட்ட திருத்த முன்வடிவாகும். இந்து சமுதாயத்தின் ஆன்மாவாக விளங்கும் சாதி ஏற்றத் தாழ்வுகள், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் போக்காமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க சட்டங்கள் இயற்றுவது நமது அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். சாணிக் குவியல்கள் மீது மாளிகை கட்டுவதற்கு ஒப்பாகும்'' என வேதனையுடன் கூறினார்.

இந்து மதத்திற்குள் பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத் தனம், காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றை சட்டப்பூர்வமாகவும் அமைதியான வழியிலும் திருத்துவதற்கு அம்பேத்கர் செய்த முயற்சி பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பின் விளைவாக வெற்றிபெறவில்லை. எனவே, மன வேதனையுடன் அவர் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் 1956ஆம் ஆண்டு. அக்டோபர் 16ஆம் தேதி அன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தனது தாழ்த்தப்பட்ட இன மக்களுடன் புத்த மதத்தை அவர் தழுவினார். அதற்குப் பின் 1956 டிசம்பர் 6இல் அவர் காலமானார்.

1954 முதல் 1956 வரையிலான காலக்கட்டத் தில். இந்து திருத்தச் சட்டம் அதன் பழைய வடிவில் நிறைவேற்றப்படாமல் சாரம் குறைந்த நிலையில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பிற்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதியரசர் கஜேந்திர கட்கர் கருநாடக பல்கலைக் கழகத்தில் பேசும் போது "இந்துக்களுக்கு அம்பேத்கர் வழங்கிய சட்ட முன்வடிவு வரலாற்றில் என்றும் அழியாத இடம்பெற வேண்டிய சாதனையாகும். ஆனால் சட்ட அமைச்சர் ஒரு நவீன மனு என்று பாராட்டப்படும் நிலையை விதி அவருக்கு வழங்க மறுத்துவிட்டது'' என்று குறிப்பிட்டது வரலாற்றில் என்றும் அழியாதவாறு பதிந்துவிட்ட உண்மையாகும்.

நன்றி : "தினமணி' 09-12-15

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.