மக்கள் துயர் துடைக்கக் கரம் கோர்ப்போம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:27

தமிழக வரலாற்றில் என்றும் காணாத அளவிற்கு பெரு மழையும், வெள்ளமும் பெருக்கெடுத்து பேரிழப்பை ஏற்படுத்திவிட்டன. சென்னை மாநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மூன்று கோடி மக்கள் வாழும் வட தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.


மேற்கண்ட மாவட்டங்களில் பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றின் சேதம் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆறு இலட்சம் ஏக்கரில் சம்பா பயிர் அழுகிவிட்டது.

மொத்தத்தில் 15 இலட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாகி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், உற்பத்தியான பொருட்கள் முதலியவை வெள்ளத்தால் சேதத்திற்குள்ளாகியுள்ளது. கடைகளிலும் உள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சீரழிந்துள்ளன. குத்து மதிப்பாக 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என கணித்துள்ளார்கள்.

சென்னை நகரில் நடுத்தர மக்கள் வாழும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அவர்கள் கடனாக வாங்கி வைத்திருந்த பிரிட்ஜ், தொலைக்காட்சிப் பெட்டி, மின் அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் மின் சாதனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கார்களும் இருசக்கர வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கி குப்பைக் கூலங்களாக காட்சி தருகின்றன.

மொத்தத்தில் தமிழகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது வெள்ளம். இந்தியப் பிரதமர் மோடி வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு உடனடியாக 1000 கோடி ரூபாய் அளிக்க முன்வந்ததைப் பாராட்டுகிறோம். தமிழக அரசு கேட்டிருக்கும் தொகையை அப்படியே தருமாறு வேண்டிக்கொள்கிறோம். பிறமாநில அரசுகளும் பல வகையிலும் உதவுவதற்கு முன்வந்துள்ளன. தமிழகம் முழுவதிலுமுள்ள தன்னார்வலர் களும், தொண்டு நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடிஓடி தொண்டாற்றுவதைப் பார்க்கும் போது வெள்ளத் தினால் ஏற்பட்ட இழப்பை மறந்து புத்துணர்வும் புதுநம்பிக்கையும் முளைவிடுகின்றன.

தமிழக வரலாறு காணாத அவலம் சூழ்ந்திருக்கிற நிலையில் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடவேண்டும்.

பிற மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வழங்க முன்வந்துள்ள நிவாரணப் பொருட்களை ஓரிடத்தில் குவித்து அங்கிருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பவேண்டும்.

தன்னார்வ அமைப்புகளையும் தொண்டர்களையும் உதவும் பணியில் பயன்படுத்திக் கொள்ளும்படி கட்சிகள் விளம்பரம் தேடாமல் மக்களின் துயர் துடைப்பதில் முழு மூச்சாக ஈடுபடவேண்டும். யார் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறி ஒருவருக்கொருவர் வாதமிடும் நேரம் இதுவல்ல.
இயற்கை பேரிடரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படி நேரிடாமல் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் ஒருவர் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழு அமைக்கப்பட்டு அனைத்து நிவாரணப் பணிகளும் அதன் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

சென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரித்து அமைச்சர் ஒருவர் தலைமையில் சர்வ கட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.