உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 17:49
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். மறைந்த தனிநாயகம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியின் விளைவாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து தமிழின் ஏற்றத்திற்கு வழிகாணவும் இந்த அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளில் அரசியல் கலப்பு என்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது.
ஆனால் இந்த அமைப்பினையும் அது நடத்தும் ஆய்வு மாநாடுகளையும் தேவையற்ற வகையில் சர்ச்சைக்குள்ளாக்கி ஓர் போட்டி அமைப்பை உருவாக்குவதில் முதலமைச்சர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரின் இந்த முயற்சி உலகத் தமிழ் அறிஞர்களைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாடு நடத்தும் அறிவிப்பை இவர் தன்னிச்சையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வெளியிட்டதே தவறாகும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக உள்ள ஜப்பானிய அறிஞர் நொபுரு கரசிமா உலகத் தமிழ் அறிஞர்கள் ஆழமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அளிப்பதற்கு வசதியாக போதிய அவகாசம் கொடுத்து இம்மாநாட்டினை 2011 ஜனவரியில் நடத்தலாம் என தெரிவித்த கருத்தை ஏற்க மறுத்து முதலமைச்சர் காட்டியுள்ள காரணம் நகைப்புக்குரியது. அந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் இருப்பதால் இம்மாநாட்டினை நடத்த இயலாது என்று கூறியிருக்கிறார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கும் தமிழகத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிலும் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாநாடு நடைபெறும் போது எந்தச் சிக்கலும் வந்துவிடப்போவதில்லை. அல்லது இந்தத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாநாட்டை நடத்துவதால் குடிமுழுகிப் போய்விடப்போவதில்லை. அவ்வாறு செய்வது தனது அரசியல் நோக்கங்களுக்கு உதவாது என்பதால் முதலமைச்சர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை புறக்கணித்துவிட்டு, போட்டி மாநாட்டினை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்புகளில் உள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் தனக்கு இசைவு அளித்திருப்பதாவும் தெரிவித்திருக்கிறார். உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தை தனது அதிகாரப் பலத்தைக் கொண்டு இரண்டாக்குவதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார் என்பது வெளிப்படையானது.
அண்மைக்கால தொல்லியல், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் உலகளாவிய நிலையில் தமிழ் மொழி இலக்கியப் பண்பாடு தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி சிந்திப்பதற்கும் இந்த மாநாடு நடத்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது. இதே நோக்கங்களுக்காகத்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோற்றுவிக்கப்பட்டு. இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி அரிய சாதனை புரிந்திருக்கிறது. இப்போது அதற்குப் போட்டியாக ஓர் அமைப்பை நிறுவுவதற்கும் மாநாட்டினை நடத்துவதற்கும் என்ன அவசியம் நேர்ந்திருக்கிறது?
இலங்கைப் போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்து நிறுத்தி அவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாத முதலமைச்சர் கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை மாற்றுவதற்கு உலகத் தமிழர் மாநாட்டினை அவசர அவசரமாக நடத்துவதற்கு அவர் முற்படுகிறார். உலகம் முழுவதும் வேரூன்றி நிற்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்துவதற்கும் புறக்கணிப்பதற்கும் பொறுப்பற்ற வகையில் கருணாநிதி செயல்படத் துணிந்திருப்பதை இவர் முற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக தமிழ் ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஒப்பற்றத் தொண்டினை செய்துவரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இருப்பதால் தான் விரும்புகிறபடி செயல்பட அவர்கள் மறுக்கிறார்கள் எனவே, தான் சொல்கிறபடி செயல்படுகிற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு போட்டி அமைப்பை நிறுவி போட்டி மாநாட்டினை நடத்துவதற்கு கருணாநிதி செய்கிற முயற்சிகளை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் நீங்காத கடமையாகும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.