நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 14:57

இன்று தமிழகத்தில் அப்பழுக்கற்ற நேர்மையாளர்களாக விளங்கும், ஒருசில அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் பழ.நெடுமாறன். அவரது சில கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்து இருக்கலாமே தவிர, அவரது நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. மதுரை கி. பழநியப்பனார் - பிரமு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இன்று 85 வயதாகும் நெடுமாறன், தமது நீண்ட அரசியல் பயணத்தில், தமிழகத்தின் ஆகச் சிறந்த தலைவர்களோடு நெருங்கிப் பழகியது மட்டுமல்லாமல் தேசியத் தலைவர்களுடனும் பழகியிருக்கிறார். தமிழர், மற்றும் ஈழத் தமிழர் நலன்சார்ந்த போராட்டங்கள் காரணமாக, "பொடா' சட்டத்தின் கீழ் சிறை சென்றது உட்பட, ஐம்பது முறைக்கு மேல் சிறை சென்றிருக்கிறார். இலக்கியம், வரலாறு, அரசியல், ஈழப்பிரச்சினை, நெடுங்கதைகள் என பல்வேறு அலகுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். என்றென்றும் தன் நெஞ்சில் நிழலாடும் தலைவர்களுடன் பழகிய அனுபவங்களை இங்கே சொல்கிறார் பழ.நெடுமாறன்.

"1975ஆம் ஆண்டு அவசர நிலையை அமல்படுத்தினார் இந்திரா காந்தி. 1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஆனால் தென் இந்தியாவில் காங்கிரஸ் கணிசமான வெற்றிபெற்றது. அதே ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். அந்தக் காலக்கட்டம் காங்கிரசுக்குச் சோதனையான காலக்கட்டம். அவசர நிலை, அதிகார துஷ்பிரயோகங்கள், முறைகேடுகளுக்காக, விசாரணைக் கமிசன்கள், வழக்குகள் என்று இந்திரா காந்தி மீது போடப்பட்டன. நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் பொதுச் செயலாளர்.

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்திரா மதுரைக்கு வருகை தந்தார். அவசர நிலை முறைகேடுகளுக்காக அவருக்குச் செல்லுமிடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டப் போவதாக தி.மு.க. அறிவித்தது. ஆனால் உண்மையான காரணம், இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதன் மூலம் பிரதமர் மொரார்ஜியை திருப்திப்படுத்தி சர்க்காரியா கமிசன் விசாரணை பின்விளைவுகளிலிருந்து தப்பிப்பதுதான்.

இந்திரா அன்று மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பேசுவதாக இருந்தது. தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்ட மிக "பலமான' ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நகரமே கொந்தளிப்பாக இருந்தது. விமான நிலையத்துக்கு இந்திராவை வரவேற்கப்போனபோதே, நான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். அவரை வரவேற்று திறந்த காரில் பின்சீட்டுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் தலையணைகளைப் போட்டு, இந்திராவை அமர வைத்தோம். காரில் நான், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி. சுவாமிநாதன், சித்தன் ஆகியோர் இருந்தோம். வழியெங்கும் மக்களைப் பார்த்துக் கையாட்டிக்கொண்டே வந்தார் இந்திரா. கார், தெற்கு வெளி வீதிக்குள் திரும்பியது.

திடீரென்று, நாங்கள் வைத்திருந்த வரவேற்பு வளைவு கீழே தள்ளப்பட்டது. கார் மேலே போக முடியாமல் நின்றது. கறுப்புக் கொடி (தடி)களுடன் திரண்டிருந்த தி.மு.க.வினர் இந்திராவைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள். ஆபத்தை உணர்ந்த நான் சில நொடிகளுக்குள் இந்திராவை பின்சீட்டில் படுக்க வைத்து அவர் மீது தலையணைகளை அமுக்கி, மேலே நான் படுத்துக் கொண்டேன். தடிகளுடன் பாய்ந்து வந்த தி.மு.க.வினர், தாக்கத் தொடங்கினர். தலையணைகளுக்கு அடியில் இருந்த இந்திரா மீது ஒரு அடி கூட விழாமல் அனைத்தையும் நான் வாங்கிக் கொண்டேன்.
காவல் துறையினர் கூட காப்பாற்ற நெருங்க முடியாத வகையில், தி.மு.க.வினர் காரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். பல நிமிடங்கள் என்மீது

தாக்குதல் நீடித்தது. முதலில் திகைத்துப்போன ஓட்டுநர் ஜான், அப்புறம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த ஆபத்தான சூழலிலும், காரை நடைமேடை மீது ஏற்றி, தி.மு.க.வினருக்கு இடையில் காரை விரைவாகச் செலுத்தி, சம்பவ இடத்திலிருந்து, புத்திசாலித்தனமாக வெளியே வந்தார்.

ஆபத்தில்லாத இடத்துக்கு கார் வந்த பிறகு, "இந்திராவுக்கு என்ன ஆயிற்று?'' என்று பார்க்க தலையணைகளை நீக்கி விட்டு அவரை எழுந்து உட்காரச் சொன்னேன். அவரது புடைவையில் ஒரே ரத்தம். இவ்வளவு பாதுகாப்புக் கொடுத்தும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற பதைபதைப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், இந்திராவுக்கு அடி எதுவும் படவில்லை. எனது தலையில்தான் பலத்த தாக்குதல் நடந்திருக்கிறது. அதிலிருந்து வழிந்த ரத்தமே இந்திராவின் புடைவையை நனைத்திருந்தது.

எனக்கு அடிபட்டிருக்கிறது என்பதைப் பார்த்ததும் இந்திரா மிகவும் கவலைப்பட்டுப் போய்விட்டார். "ஆஸ்பத்திரிக்குப் போங்க' என்று ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். ஆனால் இந்திராவை வைத்துக்கொண்டு மேலும் தெருக்களில் பயணம் போவது ஆபத்து என்பதால், "நீ சர்க்கியூட் ஹவுஸ் போப்பா'' என்று ஓட்டுநரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். இந்திராவை சர்க்கியூட் ஹவுசில் பத்திரமாகச் சேர்த்துவிட்டு மருத்துவமனைக்குப் போய் கட்டுப்போட்டுக்கொண்டு மீண்டும் அவரைச் சந்தித்து கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். "ஏன் ஓய்வு எடுக்கவில்லை'' என்று அவர் என்னைக் கண்டித்தார்.

மதுரை கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சிக்குப் போவதாகத் திட்டம். காரில் திருச்சிக்குப் புறப்பட்டோம். கொட்டாம்பட்டியில் காவல்துறை எங்களைத் தடுத்து நிறுத்தியது. "திருச்சியில் கலவரம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும், அங்கு போக வேண்டாம்'' என்றும் கேட்டுக்கொண்டது. இந்திரா காவல்துறை ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் சென்றோம். அங்கிருந்து ரயிலில் சென்னை புறப்பட்டார் இந்திரா. ரயில் கிளம்ப இருந்தது. கதவருகில் உட்கார்ந்திருந்தார் இந்திரா. என்னைக் கூப்பிட்டார். கைகளைப் பிடித்துக்கொண்டார். "My son you have saved my life" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். அவர் கண்களில் கண்ணீர். என் நெஞ்சமும் கனத்துப்போனது. ஒரு சில விநாடிகளில் இந்திரா சுதாரித்துக்கொண்டு இதழோர புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டார்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இது எனக்கு படு அதிர்ச்சி. இந்திராவை தில்லியில் சந்தித்து என் எதிர்ப்பைப் பதிவுசெய்து, கட்சியிலிருந்து விலகினேன். 1983-இல் அவர் மெய்க்காப்பாளர்களால் கொலை செய்யப்பட்டது எனக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு மரியாதை செலுத்த தில்லிக்கு விரைந்தேன்.

முதல்வர் எம்.ஜி.ஆர். நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோரும் வந்திருந்தார்கள். இந்திராவைக் கொன்ற மெய்க்காப்பாளர் சீக்கியர் என்பதால் தில்லி முழுவதும் அவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு இல்லத்திலிருந்து நாங்கள் மூன்று பேரும் இந்திரா வீட்டுக்குச் செல்லத் தயாராக இருந்தோம். அப்போது தில்லிவாழ் தமிழர் ஒருவர், வணக்கம் செலுத்தி, என் கையைப் பிடித்துக்கொண்டார்.

"ஐந்து வருடத்துக்கு முன்பு, தமிழகத்துக்கு வெளியே - குறிப்பாக தில்லியில் வசிக்கும் தமிழர்களைக் காப்பாற்றியது நீங்கள்தான்'' என உருகிய குரலில் சொன்னார். உடனே எம்.ஜி.ஆர். "இவர் சொல்வது புரிகிறதா? நல்லவேளையாக 1978இல் மதுரையில் இந்திரா காந்தி உயிரை நீங்கள் காப்பாற்றினீர்கள். அங்கு அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால், தில்லியில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்களோ'' என்று கவலை தெறிக்கச் சொன்னார். அரசியல்ரீதியாக, நான் அவருடன் மாறுபட்டேனே தவிர, இந்திரா என்றென்றும் என் மனதைக் கவர்ந்த தலைவர்தான்.
1958-60ஆம் ஆண்டுகளில், நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பி.ஏ. ஹானர்ஸ் மாணவன். மாணவர் சங்கச் செயலாளரும்கூட. அந்தப் பருவத்தில் மாணவர்களாகிய நாங்கள் அறிஞர் அண்ணாவின் பேச்சு - எழுத்தால் மிகவும் கவரப்பட்டோம். அவரை அழைத்து திருவள்ளுவர் விழா நடத்த வேண்டுமென்பது எங்கள் ஆசை. ஆனால் 1945ஆம் ஆண்டிலிருந்து அண்ணா அவர்கள் பல்கலைக் கழகத்தில் பேச நிர்வாகம் தடைவிதித்திருந்தது. பெரும் போராட்டம் நடத்தி, அண்ணாவை அழைக்க அனுமதி பெற்றோம். அண்ணா வந்தார். மாணவர்களின் பெருங்கூட்டத்தில் மிக அருமையாகப் பேசினார்.

அண்ணா நடத்தி வந்த ஏணிட்ஞு ஃச்ணஞீ பத்திரிகைக்கு நான், எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோர் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய் நிதி வசூலித்து நன்கொடையாக அண்ணாவிடம் கொடுத்தோம். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. துணைவேந்தர் அவரது வீட்டில் அண்ணாவுக்கு விருந்து கொடுக்க விரும்பினார். ஆனால் அண்ணா போகவில்லை. "ஏன்?'' என்று கேட்டேன்.

"நீங்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையை அழைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்தவர் அவர்தான். இந்தச் சூழலில் அவர் வீட்டுக்கு நான் எப்படி விருந்து சாப்பிடப்போக முடியும்?'' என்றார் அண்ணா. மாணவர்களுடன் சேர்ந்து விடுதி மெஸ்ஸில் சாப்பிட்டு, எங்களை அசத்திவிட்டார் அவர்.

அப்போது கண்ணதாசன் தமது "தென்றல்' பத்திரிகை சார்பில் நாவல் போட்டி நடத்தினார். நான் எழுதி அனுப்பிய "தென் பாண்டி வீரன்' நாவலுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதற்குப் பின் அந்த நாவல் எஸ்.எஸ்.ஆர். நாடகக் குழு சார்பாக நாடகமாகப் போடப்பட்டது. வசனம் நான்தான். முதல் நாடகம் நெல்லையில் அண்ணா தலைமையில் நடந்தது. அப்போது அண்ணா என்னைப் பாராட்டிப் பேசியதை மறக்க முடியுமா?

அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் பலர் திரைப்படம் தயாரிப்பது, மற்றும் கதை-வசனம்-பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதற்கு அதி முன்னுரிமையும் கட்சி வேலைகளை இரண்டாம் பட்சமாகவும் கருதி செயல்பட்டுவந்தார்கள். இதனால் வருத்தமான ஈ.வி.கே.சம்பத் "திரைப்படத்துறையை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதுவதில் தவறில்லை. ஆனால், கதை-வசனம் எழுதுவதுதான் வாழ்க்கை என்று கொள்கை மறக்கப்பட்டுக் கட்சி திரைப்பட மாயையில் சிக்கிக் கொண்டது'' என்றார். அவரது இந்தக் கருத்து கட்சியில் பெரிய சலசலப்பை உருவாக்கியது. இதனால் சம்பத்துக்கு எதிர் கோஷ்டி உருவானது. மோதல், வேலூர் செயற்குழுவில் வெடித்தது. சம்பத் மற்றும் கண்ணதாசனைத் தாக்க சிலர் முயன்றார்கள். குழப்பத்தில் முடிந்தது செயற்குழு. அப்போதுதான் படிப்பை முடித்திருந்தேன் நான்.

"வேலூரில் நடந்தது என்ன?'' என்ற தலைப்பில் மதுரையில் பேச விரும்பினார் சம்பத். அந்தச் சமயம் மதுரை மாவட்ட தி.மு.க. செயலர் மதுரை முத்து. அவர் அதிரடி அரசியல்வாதி. அவர் பெயரைக் கேட்டாலே மாற்றுக் கட்சியினர் அதிருவார்கள். அப்படிப்பட்ட மதுரை முத்துவின் விருப்பத்துக்கு மாறாக மேலமாசி வீதியில், சம்பத்தின் கூட்டத்தை நான் வெற்றிகரமாக நடத்தினேன். மதுரையிலிருந்து செல்லும்போது கண்ணதாசன் "முத்துவிடம் எச்சரிக்கையாக இரு'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

சம்பத் சென்னையில் இப்போது வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருந்தார். வேலூரில் தன்னைத் தாக்க முயன்றவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அவரது கோரிக்கை. முதலில் "சரி' என்ற அண்ணா பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. கசப்புணர்வு வளர்ந்த நிலையில் கட்சியின் உயிர்க் கொள்கையான "திராவிட நாடு' தொடர்பாக மோதல் முற்றியது. "திராவிட நாடு அடைய முடியாது. சுயநிர்ணய உரிமை உள்ள மாநிலம் வேண்டும்'' எனக் கேட்பதே யதார்த்தமானது என்பது சம்பத் வாதம். "திண்ணையில் படுத்துக் கொண்டாவது திராவிட நாடு கேட்பேன்'' என்றார் அண்ணா. ஆனால் மத்திய அரசு, "பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் நிற்கத் தடை'' என்றதும் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா.

இந்தச் சூழல் காரணமாக அண்ணாவை விட்டு சம்பத் பிரிய நேர்ந்தது. "இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்கும்'' என்ற உறுதிமொழியை சம்பத்துக்கு எழுதிய கடிதத்தில்தான் நேரு சொல்லியிருந்தார். இன்றைக்கும் பல வகைகளில் இந்தித் திணிப்பு நடைபெறுகிறது என்றாலும் முழு அளவில் இந்தி வெறியர்கள் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் தடையாக இருப்பது நேருவின் வாக்குறுதியே. அப்போது நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா அவர்கள் "உலகத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதும் நேருவின் கை, சம்பத்துக்கும் கடிதம் எழுதியது எவ்வளவு பெருமையான விஷயம்'' என்று சம்பத்தைக் கொண்டாடியது இன்னமும் நினைவில் நிற்கிறது.

சம்பத்தும் கண்ணதாசனும் தி.மு.க.வை விட்டுப்பிரிந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினர். நானும் அவர்கள் வழி தொடர்ந்தேன். என்னை அரசியலில் பக்குவப்படுத்தியவர் சம்பத் அவர்களே. பிற்காலத்தில் "கவியரசர் என் காவலர்' என்று நான் புத்தகம் எழுதும் அளவுக்கு கண்ணதாசனோடும் நெருங்கிப் பழகினேன். சம்பத் நாகரிகமான அரசியல்வாதி. மிகச் சிறந்த பேச்சாளர். தமிழ் தேசியக் கட்சி தொடங்கிய இரண்டு வருடத்தில் தேசிய அளவில் காமராசர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானார்.

"மற்ற கட்சிகளில் சோசலிச லட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் தலைவர்கள் காங்கிரசில் இணைய வேண்டும்'' என்று அழைப்பு விடுத்தார் அவர். அந்த அழைப்பை ஏற்று சம்பத் தமிழ் தேசியக் கட்சியை காங்கிரசில் இணைத்தார். இயல்பாகவே என் அரசியல் பயணமும் காங்கிரசில் தொடர்ந்தது. இந்திரா அவர்களை தில்லியில் சம்பத் ஒருமுறை சந்தித்தபோது, "தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கத் தயாராகுங்கள்'' என்று சொன்னார். எங்கள் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. ஆனால் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்த சம்பத், இரண்டு மூன்று நாட்களில் மாரடைப்பால் மரணம் அடைந்த சோகத்தை நினைக்கும்போது இன்றைக்கும் நெஞ்சடைக்கிறதே!

1967 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து அண்ணா முதல்வரானார். நான் மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர். 1969இல் நாகர் கோவிலில் நடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றி விழாவை மதுரையில் காங்கிரஸார் ஊர்வலம் நடத்திக் கொண்டாடியபோது தி.மு.க.வினர் தாக்கினார்கள். ஆனால் தாக்கியவர்களை விட்டு விட்டு காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொதித்துப்போன நான் காவல் கண்காணிப்பாளர் ÿபாலிடம் புகார் செய்தேன்.

மறுநாள் என் மீதும் பொய் வழக்குப் போட்டார்கள். அநியாயமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, "தவறை ஒப்புக் கொண்டால் நீதிபதி நன்னடத்தை ஜாமீனில் விட்டு விடுவார்'' என்றும், "இல்லாவிட்டால் ஆறு மாத காவல்''என்றும் மிரட்டினார்கள். "உங்கள் மிரட்டலுக்குப் பயப்படமாட்டேன். நான் தவறு எதுவும் செய்யவில்லை'' என்று சிறை செல்லத் தயார் ஆனேன்.

பொய் வழக்கை எதிர்த்துப் பெரிய கண்டன ஊர்வலம் நடைபெற்றது. காங்கிரஸ்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. கட்சிக்காரர்கள் நூறு பேருக்குத் தடியடியில் காயம். என்னைச் சிறையில் அடைத்தார்கள். கண்ணதாசனும், ஜெயகாந்தனும் சிறையில் வந்து என்னைப் பார்த்தார்கள். என்னை ஜெயிலில் வந்து பார்த்தார் காமராசர். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.

அடுத்து சில நாட்களில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காமராசர். "மதுரையில் கட்சிக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கைத் தட்டிக் கேட்டவர் நெடுமாறன் மட்டும்தான். எனவே, அவரே "மாவீரன்'' என்று பாராட்டினார். நாட்டு விடுதலைக்காகப் போராடி ஒன்பது வருட காலம் ஜெயிலில் இருந்தவர் தலைவர் காமராசர். அவர் வாயால் என்னை "மாவீரன்' என்று புகழ்ந்தது குறித்து நினைக்கும்போது நெஞ்சம் இன்றும் நெகிழ்ந்து போகிறது.

ஒருமுறை தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று விருதுநகருக்குத் தாயைப் பார்க்கச் சென்றார் காமராசர். கூடவே நானும் சென்றேன். தாயைப் பார்த்து விசாரித்தவுடன் கிளம்பினார். தாயும் தங்கையும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் வற்புறுத்தலுக்காக ஏதோ பேருக்குச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார். திரும்பி காரில் வரும்போது, "உங்கள் வீட்டில் கடைசியாக எப்போது சாப்பிட்டீர்கள்?'' என்று கேட்டேன். "25, 30 வருடங்கள் இருக்கலாம்'' என்று அவர் சொன்னபோது, அதிர்ந்து போனேன். அந்த தியாகச் சுடருடன் பழக வாய்ப்புக் கிடைத்தது பெரும் பேறு என்று சொல்லவா வேணும்?

இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்து, ஆயுதப் போராட்டம் நடத்த சிறு குழுக்கள் தோன்றிய காலக்கட்டம் அது. மைலாப்பூரில் என் வீட்டில் பல குழுக்களைச் சேர்ந்த போராளிகள் தங்குவார்கள். அவர்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியன் நன்கு அறிமுகமானவர். ஒருமுறை அவர் பாண்டிபஜாரில் தனது தலைவர் பிரபாகரனுக்கும், பிளாட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் நடந்த மோதல் காரணமாக இருவரையும் போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் தள்ளிவிட்டதாகவும், எனவே தமது தலைவர் பிரபாகரனை ஜாமீன் எடுக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போராளித் தலைவர்கள் இருவர் சென்னை ஜெயிலில் இருப்பதை அறிந்த இலங்கை அரசு அவர்களை தங்களிடம் ஒப்படைக்கச் சொன்னது. ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆர். முடியாது என்று சொல்லிவிட்டார். சென்னைக்கு வந்த நான் சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைச் சந்தித்தபோது நால்வர் வந்து நின்றார்கள். உமா மகேசுவரனை ஏற்கெனவே எனக்குத் தெரியும். மற்ற மூவரில் யார் பிரபாகரன் என்பது தெரியாமல் திகைத்தேன். அப்போது ஒரு இளைஞர் முன்வந்து "அண்ணா, நான்தான் பிரபாகரன்'' என்றாரே பார்க்கலாம். என் வீட்டிலேயே பலமுறை அவர் தங்கியிருக்கிறார். ஆனால் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பின்பு பிரபல வழக்கறிஞர் என்.டி.வானமாமலை மூலம் பிரபாகரனை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தோம். மதுரையில் தங்கி இருக்க வேண்டுமென்பது நீதிமன்ற ஆணை. மதுரையில் என் வீட்டில்தான் தங்கினார். 1987இல் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போதும், பின்னர் 1991இல் ஈழம் சென்ற போதும் பிரபாகரனுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தன் நம்பிக்கைக்குரிய தோழர்கள், இராணுவத்துடன் மோதல்களில் உயிர் துறக்கும்போதுகூட துக்கத்தைக் கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல் இறந்தவருக்கு மாற்றாக உடனடியாக மற்றொரு வீரரை நியமிப்பார். தனது இலட்சியத்தை நிறைவேற்றும் வரைஅவர் ஒருபோதும் ஓயமாட்டார்.

நன்றி : கல்கி தீபாவளி மலர் 2015

திங்கட்கிழமை, 07 மார்ச் 2016 14:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.