விடுதலைப்புலிகள் மீதான தடை தீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் - வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 அக்டோபர் 2010 21:07 |
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5-10-2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார்.
"பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கத்தைச் சட்ட விரோதமான அமைப்பு என்று கூறி 13-08-2002ஆம் ஆண்டு தமிழக அரசு தடைசெய்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பு என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. மேலும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி பொடா சட்டத்தின் கீழ் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் 4 பேரும் இதே காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டனர். புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி மேலும் சில வழக்குகளும் அவர் மீது தொடுக்கப்பட்டன. பொடாச் சட்டத்தின் கீழ் நெடுமாறனையும் அவரது தோழர்களையும் கைதுசெய்து சிறையில் வைத்தது சட்டவிரோதமானது என பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்பளித்ததின் பேரில் 18 மாதங்களுக்குப் பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற வழக்குகளிலும் அவ்வாறே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 1967ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றுக்கு அபாயம் நேரிடும் வகையில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக மட்டுமே. ஆனால் இந்தியாவின் இறைமையையும், பிரதேச ஒருமைப்பாட்டினையும் விடுதலைப் புலிகள் இயக்கம் எப்போதும் மதித்தே வந்திருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை பெறவேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். 1985 ஆம் ஆண்டு திம்புவில் இந்தியாவின் முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளும் மற்றும் உள்ள தமிழர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றைத் தங்களது நோக்கமாக அறிவித்தன. 1. இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும். 2. இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு#கிழக்கு மாநிலம் தமிழர்களின் பூர்வீகமான தாயகமாக ஏற்கப்படவேண்டும். 3. இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். 4. மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்படவேண்டும். இந்திய அரசின் பிரதிநிதியின் முன்னால் விடுதலைப்புலிகளும் மற்ற தமிழர் அமைப்புகளும் இணைந்து முன்வைத்த அடிப்படை கோரிக்கைகள் இவைகள்தான். இவற்றின் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நோக்கம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு அறவே இல்லை என்பது தெளிவாகிறது. இந்தியாவின் இறைமைக்கோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கோ ஊறு விளைவிக்கும் வகையில் விடுதலைப்புலிகளின் கொள்கைகள் எதுவும் அமைந்திருக்கவில்லை என்பதும் இதன் மூலம் பெறப்படுகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அதற்கு ஆயத்தம் செய்தல், அதை ஊக்குவித்தல் அல்லது செயற்படுதல் போன்றவற்றில் ஈடுபடும் அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகும். ஆனால் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அத்தகைய நடவடிக்கை எதிலும் ஈடுபட்டதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தது தவறு என்றத் தீர்ப்பினை அளித்தது. இதற்கெதிராக இந்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விடுதலைப்புலிகள் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதற்காக எந்த நீதிமன்றத்திலும் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. 2009ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 30,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை உலக நாடுகள் பலவும் வன்மையாகக் கண்டித்தன. தமிழ்நாட்டிலும் மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் எந்த இடத்திலும் தமிழர்களாலோ அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களாலோ எத்தகைய வன்முறையும் நடைபெறவில்லை. மாறாக தமிழ்நாட்டில் 15 பேர் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டத் தடையை இந்திய அரசும் தமிழக அரசும் காலம் காலமாக அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றைத் பறிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி அடிப்படை சனநாயக உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறார்கள். செங்கல்பட்டு, புழல் ஆகிய உயர் பாதுகாப்புச் சிறைகளில் ஈழத் தமிழ் அகதிகள் பலர் சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை புலிகள் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் முடிவடையாமல் நீண்டுகொண்டே போகின்றன. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி பழ.நெடுமாறனின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர் நடத்திய பல மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் சென்று வழக்காடி தடையை செல்லாததாக்கி மாநாடுகளையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்தும் நிலை இன்னமும் தொடர்கிறது. பழ.நெடுமாறனின் பேச்சுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதின் மூலம் அவர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதன் மூலம் பழ.நெடுமாறனின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் எனவே பாதிக்கப்பட்ட நபர் என்கிற முறையில் இந்தத் தீர்ப்பாயத்தின் முன் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் அவரது மனுவைச் சமர்ப்பிக்க உரிமை உண்டு.
|