உலகில் பல தலைவர்கள் பற்றிய சிறந்த வரலாற்று நூல்களுள் ஒன்றாக "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' நூலை பழ. நெடுமாறன் படைத்துப் பிரபாகரனின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
வரலாற்று நூல் படைப்பவர் வரலாற்று வரலாற்று நாயகனுடன் தன் நேரடித் தொடர்பு, தொடர் கடிதத் தொடர்பு, அவற்றிற்கு உறுதுணையான வரலாற்றுப் பதிவு ஆவணங்கள், புகைப்படங்கள், வரலாற்று நாயகனின் தத்துவம் சார்ந்த கொள்கைகள், கோட்பாடுகள் அதன் அடிப்படையில் "தமிழீழம்' அமைந்திட நேர்கொண்ட வீரம் செறிந்த போர் முறைகள், தந்திரங்கள், கொண்ட கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்ததுடன், தன் மனைவி, மகன்கள் எனக் குடும்பம் முழுவதும் அர்ப்பணிப்புக்கு அணிய மாக்கிக் கொண்டது என, அனைத் தையும் துணைகொண்டு அரிய பெரிய நூலை இத்தமிழ்ச் சமூகத்திற்கும் உலகிற்கும் ஈந்துள்ளார். மறத் தமிழனின் வீரம் தமிழ்க் காவியங்களிலும் இலக்கி யங்களிலும் விரவிக் கிடப்பதைப் படித்து வந்த தமிழ்ச் சமூகத்திற்குப் பிரபாகரன் தமிழீழப் போர் நடத்தியதைக் காட்சி களாகக் காட்டி மெய்ப்பித்துவிட்டார் ஆசிரியர்.
ஈழ விடுதலைப் போரின் விடியல் ஒரு கால அளவுக்குள் அடங்காது என்பதை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில் தெளிந்த சிந்தனையுடனும், திண்மையுடனும் பிரபாகரன் தன் இருபது வயதுகளில் ஊடகங்களுக்கு அறுதி யிட்டுச் சொன்ன "தமிழ் ஈழம் உடனே கைகூடும், என் காலத்தில் கைகூடும், வருகிற என் சந்ததியரால் கைகூடும்'' எனும் கூற்றுக்கள் இனப்போராளிகள் மனம் கொள்ளத்தக்க, உலக சரித்திரத் தில் இடம்பெறத்தக்க சொற்களாகும். முன்காட்டாகத் தமிழீழ அரசு எவ்வாறு இயங்கும் என்பதை பிரபாகரன் நிறுவி, அது இயங்கியதை நூல் ஆசிரியர் விவரித்துள்ளது பெரும் சிறப்பிற்குரிய தாகும்.
தமிழீழத்தின் வரலாற்றையும் பிரபாகரன் வரலாற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற தன்மையில் இரண்டும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்து பிணைந்த வரலாறு என்று கண்டுள்ளது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைப் பறைசாற்றுகிறது. இனத்திற்கப்பாற்பட்டு, வரும் காலமும், சந்ததியும் போற்றிப் பாதுகாக்கத்தக்க நூலாகப் படைக்கப் பட்டுள்ள இந்நூலை அனைவரும் பெற்றுப் படித்து பயன் அடைய விழைகிறோம்.
நன்றி : சிந்தனையாளன் சூலை-2012.
|