"இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை
செலுத்தவில்லை. ஒரு சில ஊடகங்களைத் தவிர பல ஊடகங்கள் ஈழத் தமிழர்களின் நிலைகள் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதனால் மக்கள் மத்தியில் செய்திகள் சென்றடைவதில்லை. ஆதலால் அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே நான் போராடுகிறேன்'' இவ்வாறு இன்று பதினேழாவது நாளாக
உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சிவந்தன் கோபி வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின்
ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார். சிவந்தன் தங்கியிருக்கும் கூடாரத்துக்கு அருகில், இன்று அவரை நேர்காணல் செய்த மேற்படி ஊடகவியலாளர்,
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் தருணத்தில் இவ்வாறான போராட்டத்திற்கான அவசியம் பற்றி கேட்டபோதே, திரு.
சிவந்தன் இப்பதிலை வழங்கியிருந்தார். இந்நேர்காணலில், சர்வதேச சுயாதீன விசாரணை, நில ஆக்கிரமிப்பு, போர்க்கைதிகளின் விடுதலை போன்ற
விடயங்களை விளக்கிய சிவந்தன், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு சிறிலங்கா
அணிக்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார். இன்று மத்திய இலண்டன் பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றமையால் போக்குவரத்து நெரிசல்கள்
அதிகரித்துக் காணப்பட்டபோதிலும், பெருமளவு மக்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் ஸ்ரற்போர்ட்
நெடுஞ்சாலை இலகு தொடரூந்து நிலைய அருகாமையில் திரண்டிருந்தனர்.
|