இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக தேர்ந் தெடுப்பதற்கு முன்னும், பின்னும் திரை மறைவில்
நடைபெற்ற பல நாடகங்கள் சிறிது சிறிதாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. சென்ற முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அவர்களை தேர்ந்தெடுத்ததில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எத்தகைய சிரமமும் இருக்கவில்லை. இந்திய மக்கள் முற்றிலும் அறியாத வராக அவர் இருந்தபோதிலும் அவரை குடியரசுத் தலைவராக ஆக்கி ஐந்தாண்டுகள் அவரும் பதவி வகித்து விலகிவிட்டார். அதைப்போல இந்த முறை ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க சோனியாவினால் முடியவில்லை. தலையாட்டி பொம்மையாக நிச்சயம் இருக்கமாட்டார் எனத் தெரிந்தும் பிரணாப்பை வேட்பாளராக்க வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு இருந்தது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த அன்சாரிதான் அவருடைய முதலாவது தேர்வாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் காலமும் சூழ்நிலையும் கூட்டணிக் கட்சிகளின் நடவடிக்கை களும் பிரணாப்பை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டன. அரசியலிலும் ஆட்சி நிர்வாகத் திலும் சோனியாவிற்கு அறிவும் அனுபவமும் ஒன்றுமில்லை என்றுதான் கூறவேண்டும். அவருக்கு மட்டுமென்ன அவருடைய கணவர் ராஜீவ் காந்திக்கே அரசியலும் ஆட்சி நிர்வாகமும் புதிது. அதன் காரணமாக அவரைச் சுற்றிலு மிருந்த அதிகாரிகள், கற்றுக்குட்டி அமைச்சர்கள் ஆகியோரின் பேச்சைக் கேட்டு தவறுக்குமேல் தவறு இழைத்தார். அப்படியிருக்கும் போது இல்லத்தரசி யாக இருந்த சோனியாவிற்கு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் எத்தகைய புரிதல் இருக்க முடியும்? எவ்வாறு அவரால் நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும்? ராஜீவ் ஆனாலும் சரி, சோனியா ஆனாலும் சரி, தங்களுக்கு துதிபாடும் அரசியல்வாதிகளையும் அதிகாரி களையும் மட்டுமே நம்பி செயல்பட வேண்டிய பரிதாபமான நிலையில் இருந்தனர். குறிப்பாக நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் மூலம் மட்டுமே அவர்கள் செயல்படவேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த அதிகாரிகள் அரசியல் தொலைநோக்கோ அல்லது சமூகப் பார்வையோ அற்றவர்கள். அவர்கள் கூறிய ஆலோசனைகளின் விளைவு மக்கள் விரோத கொள்கை களைக் கையாண்டு ராஜீவ் மிகக்குறுகிய காலத்தில் தனது செல்வாக்கை இழக்க நேரிட்டது. அதே பாதையில் அது போன்ற அதிகாரிகளை நம்பி மட்டுமே செயல்படும் சோனியாவின் செல்வாக் கும் வேகமாகச் சரிந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சென்றமுறை பதவி வகித்த போது பிரதமர் மன்மோகன் சிங் ஓரளவு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. சோனியாவின் தலையீடும் அதிகமாக இருக்கமுடியவில்லை. கூட்டணிக் கட்சி களின் ஆதரவு மட்டுமல்ல, வெளியில் இருந்து இரு கம்யூனிஸ்டுகள் உட்பட இடதுசாரிக் கட்சிகள் அளித்த ஆதரவை நம்பி மன்மோகனின் ஆட்சி இருந்த காரணத்தினால் எச்சரிக்கையு டன் செயல்பட்டது. காங்கிரஸ் தேர் தடம்புரண்டு விடாமல் இடது சாரிக் கட்சிகள் அவ்வப்போது அதைக் கட்டுப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இந்திய பெருமுதலாளிகளின் விருப்பப் படி தொழிலாளர் சட்டங்களை திருத்த வும், ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் சில்லறை வணிகத்துறையிலும் அந்நிய முதலீடு நுழைய அனுமதிப்பது போன்ற பிரச்சினைகளில் இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அவற்றுக்குத் தடையாக இருந்த காரணத்தினால் அவற்றைச் செய்யமுடியவில்லை. அமெரிக்காவுடன் செய்துகொள் ளப்பட்ட அணு உடன்படிக்கையைக் கண்டித்து இடதுசாரிகள் தனது ஆதரவை திரும்பப் பெற்றபோது மன் மோகன் சிங் அரசு கட்டவிழ்த்துவிடப் பட்ட குதிரையானது. அமெரிக்காவுடன் இந்த உடன்பாட்டைச் செய்துகொள்ளா விட்டால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த மிரட் டல் காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஆதரிக்க வைத்தது. அதே மன்மோகன் சிங் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதில் அக்கறை காட்ட வில்லையே ஏன்? அணு உடன்பாடு குறித்து அவருக்கு பச்சைக் கொடி காட்டிய சோனியாகாந்தி இலங்கைப் போர் நிறுத்தத்திற்கு சிவப்புக் கொடி காட்டி போரை மேலும் தீவிரப்படுத்தினார். அதைப் போல 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரசின் வலிமை கூடியது. அதன் பின்னர் பிரதமரை வெறும் பொம்மையாக்கி விட்டு சோனியா தன் விருப்பம் போல ஆட்சியை பின்னிருந்து இயக்கி வருகிறார். பிரதமர் சுதந்திரமாக செயல்படும் நிலையில் இல்லை. அவரது ஆலோசகர்களும் அலுவலர்களும் முக்கிய அதிகாரிகளும் பிரதமரைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாக சோனியா விடம் பேசி உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டனர். பிரதமருக்குரிய உண் மையான அதிகாரம் சோனியாவிடம் தான் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். இந்தக் காலக் கட்டத்தில்தான் மத்திய அரசில் மிகப் பெரிய ஊழல்களான அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் போன்றவை அடுக் கடுக்காக தொடர்ந்து நடைபெற்றன. அவற்றைத் தடுக்கவோ சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவோ பிரதமர் முன்வரவில்லை. அவருடைய கரங்கள் கட்டிப்போடப்பட்டிருந்தன. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான அலைக்கற்றை ஊழலை செய்த தி.மு.க. அமைச்சர் ராசா போன்ற வர்கள் பிரதமரை அவமதித்ததை உச்ச நீதிமன்றம் தலையிட்டுக் கண்டித்த பிறகும்கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்கிய வேடிக்கையை யும் நாம் பார்த்தோம். அதைப் போல காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யில் நடைபெற்ற பெருமளவு ஊழல் களுக்குக் காங்கிரஸ் தலைவரான கல்மாடியே காரணம் என தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்படியானால் இந்த ஊழல் பேர் வழிகள் மீது நடவடிக்கை எடுக்காதபடி தடுத்த சக்தி எது? பிரதமரையே மிஞ்சும் அதிகாரத்தைப் படைத்தவர்கள் தான் இதை செய்திருக்க முடியும்? சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய ஊழல்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டிக்க இதுவரை முன்வரவில்லை. கல்மாடி போன்ற காங்கிரஸ்காரர்களைக் கட்சியிலிருந்துகூட நீக்கவில்லை. அலைக்கற்றை ஊழலுக்குப் பெரிதும் காரணமான தி.மு.க.வுடன் உள்ள உறவைத் துண்டிக்கவும் அவர் தயாராக இல்லை. இதனால் சந்தேகமுள் அவரை நோக்கியும் திரும்புகிறது. இதற்கு முன் பிரதமர்களாக இருந்த பலரின் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருக் கின்றன. அவை குறித்து விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு உடனடியாக அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டனர். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் எந்த பிரதமரின் காலத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அமைச்சர்களாலும், காங்கிரஸ் தலைவர் களாலும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாலும் கூச்சநாச்சமின்றி நடத்தப்பட்டு மக்களின் பணம் சூறை யாடப்பட்டபோது, மன்மோகன்சிங் கையில் ஊமையனாக இருக்க வேண்டி யிருந்தது. அதற்கான விலையை காங் கிரஸ் கட்சி பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் கொடுக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஆட்சித் தலைவராக இருந்த பிரதமருக் கும் கட்சித் தலைவராக இருந்தவருக்கும் இடையில் அவ்வப்போது முரண்பாடு கள் எழாமல் இல்லை. ஆனாலும் ஜன நாயக முறையில் அந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டன. கட்சித் தலைவரின் கைதியாக பிரதமர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. சோனியாவின் காலத்தில்தான் பிரதமர் பதவி கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய தலைவரான நேரு பிரதமராக இருந்த போது 1947ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபாளினிக்கும், 1950இல் காங்கிரஸ் தலைவராக இருந்த புருசோத்தமதாஸ் தாண்டனுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின. ஆனால், கட்சித் தலைமை ஆட்சித் தலைமையை ஆட்டிப்படைக்க நேரு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மக்களும் அத்தகைய போக்கை ஊக்குவிக்கவில்லை. இதன் விளைவாக கிருபாளினி, தாண்டன் போன்றவர்கள் பதவி விலக நேர்ந்தது. காங்கிரஸ் தலைவர் பதவியையும் நேருவே ஏற்க வேண்டிய நிலை உருவானது. இதற்குப் பிறகு கட்சித் தலைவரானவர்கள் பிரதமருடன் முரண்பட துணியவில்லை. நேரு காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சிதறும், மத்திய அரசில் பதவிப் போட்டிகளால் குழப்பம் ஏற்படும் என்ற நிலையில் அந்த ஆரூடங்களை எல்லாம் பொய்யாக்கிய பெருமை காமராசரையே சாரும். நேருவிற்குப் பின் இரு பிரதமர்களை சனநாயக வழியில் தேர்ந்தெடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்திரத்தன்மையை அவர் ஏற்படுத்தினார். காங்கிரஸ் தலைவராக அவரும் பிரதமராக சாஸ்திரியும் இருந்தபோது, காங்கிரஸ் சின்னம்போல இரட்டைக் காளைகளாக இணைந்து செயல்பட்டனர். எனவேதான் இரண்டாம் முறையும் காமராசரே தலைவராக வேண்டும் என சாஸ்திரி விரும்பினார். மற்றவர்களையும் ஏற்க வைத்தார். இந்திராவின் காலத்தில் இந்த இணக்கம் ஆரம்பத்தில் இருந்தது. நாளடைவில் காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு அடங்கிச் செல்லவேண்டும் என இந்திரா விரும்பினார். எவ்வாறெல் லாம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்பதும் அதன் விளைவாக காங்கிரஸ் இரண்டாக உடைந்தது என்பதும் அனைவரும் அறிந்த வரலாறு ஆகும். அதற்குப் பிறகு அவரே கட்சியின் தலைவராகவும் ஆட்சியின் தலைவராகவும் நீடித்தார். இது ஏதேச்சதிகாரப் போக்காக மாறி இறுதியில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதில் போய் முடிந்தது. அதற்கெதிராக செயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் புரட்சி மாபெரும் பெற்றிபெற்று இந்திராவின் ஆட்சியை தூக்கி எறிந்தது. கடந்த கால இந்த வரலாற்றை யெல்லாம் சோனியாகாந்தி மறந்துபோய் செயல்படுவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியில் நேரடித் தேர்தல் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் கேசரியை கட்சி விதிகளுக்கு முரணாக நீக்கச் செய்து சோனியா காந்தி கைப்பற்றினார். இதுவரை முறைப்படி காங்கிரஸ் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை. அகில இந்திய காங்கிரசின் நிர்வாகிகளும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல் சோனியாவால் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி சனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இந்த அழகில் அவர் பிரதமராகவும் விரும்பினார். ஆனால் சட்டரீதியான சிக்கல்களால் அது தடுக் கப்பட்டது. எனவே பொம்மை பிரதமரை வைத்துக்கொண்டு அதிகார லகானை அவர் கரங்களில் வைத்திருக்கிறார். சொந்த கட்சியில் உள்ள தலை வர்கள் யாரையும் அவர் மதிப்பது போல தெரியவில்லை. கூட்டணிக்கட்சித் தலைவர்களையும் அவ்வாறே நடத்துகிறார். இதன் விளைவாக சரத்பவார், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. முலாயம் சிங், மாயாவதி போன்ற மாநிலக்கட்சிகளின் தலைவர்களின் மீதுள்ள சி.பி.ஐ. வழக்குகளை காட்டி மிரட்டி காங்கிரசை ஆதரிக்க வைத் திருக்கிறார். அலைக்கற்றை ஊழலில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க. தன்னை மீறி எப்போதும் செல்ல முடியாத அளவிற்கு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். முக்கிய கொள்கை களை வகுப்பதிலும் மற்ற முக்கியப் பிரச்சினைகளிலும் கூட்டணிக் கட்சி களை நம்பிக்கைக்கு எடுத்துக்கொண்டு கலந்தாலோசிப்பது இல்லை. மெல்ல மெல்ல சர்வாதிகாரப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். தனக்குப் பின் தன்னுடைய மகன் ராகுலை பதவி நாற்காலியில் அமர்த்து வதற்குத் திட்டமிட்டு அதற்காக காய் களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். ஆனால் 8 ஆண்டுகாலமாக நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த ராகுல்காந்தி ஒரே ஒரு முறை பேசியிருக்கிறார். தனது கட்சியிலும் பிற கட்சிகளிலும் உள்ள முக்கியமானவர்களிடம் அவருக்கு தொடர்பு என்பது மிகக் குறைவாகும். 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக காங் கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டம் குறித்து அவர் எதுவும் பேசிய தில்லை. இந்த அழகில் அவரைப் பிரதம ராக்குவதற்கு துதிபாடிகள் இப்போதே புகழ்மாலையை சூடிவருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை எண்ணிப் பார்க்கவில்லை. 2014ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தான் ராகுல் பிரதமராக முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை. இந்தி பேசுகிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகமிகப் பலவீனமாக இருக்கிறது. தென்னாட்டில் காங்கிரஸ் வலுவாக இருந்த ஆந்திராவில் காங் கிரஸ் பிளவுபட்டுவிட்டது. கர்நாடகத்தில் பா.ஜ.க. வலுவுடன் உள்ளது. கேரளத்தில் மிக சொற்ப பெரும்பான்மையுடன்தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினைக்குப் பிறகு காங்கிரஸ் தனது செல்வாக்கை அடி யோடு இழந்துள்ளது. இந்த சூழ்நிலை யில் ராகுலுக்கு மணி மகுடம் சூட்ட தயாராகி வருகிறார்கள். இது சனநாயக நாடு என்பதையும் மன்னராட்சி நாடல்ல என்பதையும் அவர்கள் மறந்து போனார்கள். வெள்ளையரான ஹூயூம் என்ப வர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அதே வெள்ளை இனத்தைச் சேர்ந்த சோனியாவின் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மூடுவிழாவை நடத்தினாலும் வியப்படைவதற்கில்லை. நன்றி : தினமணி 1-8-12
|