இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்களின் 80ஆவது ஆண்டு விழா சென்னை, காமராசர் அரங்கத்தில் 25-09-12 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் எங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டு தோழர்களும் மற்றும் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள். இவ்விழாவிற்கு மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். வந்திருந்தோரை சி. மகேந்திரன் வரவேற்றார். தா. பாண்டியன் 80ஆவது ஆண்டு விழா மலரை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பெற்றுக்கொண்டார். விழாவில் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், திராவிடர் கழகத்தின் செயலாளர் கலி.பூங்குன்றன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி, பார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் பி.வி. கதிரவன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க. மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நா. சேதுராமன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தலைவர் பொன்னீலன், திரைப்பட கலைஞர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினார்கள். விழா நாயகர் தா. பாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார். கோ. பழனிச்சாமி நன்றியுரையாற்றினார். தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தியாகத் தழும்புகள் பல ஏற்றவரும் சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் நிறைந்தவருமான தோழர் தா. பாண்டியன் அவர்கள் பல்லாண்டு நிறைநலத்துடன் நீடு வாழ வாழ்த்துகிறோம். ஈழத் தமிழர் பிரச்சினையில் அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ள ஆதரவான நிலைக்கு தோழர் தா.பாண்டியன் முக்கிய காரணமாவார். இப்பிரச்சினையை அகில இந்திய அளவுக்குக் கொண்டு செல்ல அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலவாகும். உலகத் தமிழர் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் மற்றும் தொழிற்சங்கத் தோழர்களும் வாழ்த்துக்களைக் குவித்துள்ளனர்.
|