"என் வாழ்க்கையே எனது செய்தி'' என்றார் காந்தி மகான். அதுபோல் இலங்கைத் தமிழரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாறும், தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வரலாறும் பிரித்துப் பார்த்திட முடியாத அளவிற்கு
ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாகக் காட்சியளிக்கிறது என்று கூறுகிறது, பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த ஆய்வு நூல். தமிழர் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் தொன்னூற்று ஒன்று தலைப்புகளில் 1208 பக்கங்களில் ஆண்டு வரிசைக் கிரமமாய் பிரபாகரன் என்ற மாவீரன் வரலாறு மிகத் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் துயரத்துடனும், சோகத்துடனும் எதிர்கொள்ளும் இனப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களை சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறது இந்நூல். எவ்வாறு கியூபா நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சேகுவாராவும், பிடல் காஸ்ட்ரோவும் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்களோ, அதுபோல இலங்கை மண்ணில் ஒரு இன அழிப்பிலிருந்து தம் மக்களைப் பாதுகாத்திட வீரஞ்செறிந்த விடுதலைப் போர் நடத்திய ஒரு தன்னிகரற்ற தலைவனின் வரலாறும் பிரித்துப் பார்க்க இயலாதது. துயரம் மிகுந்த முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்கு முந்திய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 33 ஆண்டுகள் கால வீரம் செறிந்த ஆயுதப் போராட்ட வரலாறு இந்த நூலில் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு. பிரபாகரன் அவர்களுடன் இணைந்து போரிட்ட எத்தனையோ தோழர்களின் வரலாறுகளும் தரப்பட்டுள்ளன. பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மிகவும் நேசித்த இத்தாலி நாட்டின் மாவீரன் கரிபால்டிக்கு சற்றும் குறையாமல் பெரும் தியாகம் செய்துள்ள ஒரு வீர மறத் தமிழரின் உன்னத வரலாறுதான் இந்நூல். தனது மனைவி, குழந்தைகள் என அனைவரையும் தான் கொண்ட உயர்ந்த லட்சியம் மற்றும் கொள்கைக்காக அர்ப்பணித்துள்ளதை நூல் முழுவதும் காணமுடிகிறது. இராணுவ நடவடிக்கைகள் மூலமாக தங்கள் லட்சியத்தை அடைந்திட முயற்சித்த விடுதலைப் புலிகள் இயக்கம், சமாதான முறையில் தங்கள் உரிமைகளைப் பெற்றிடவும் தயங்கவில்லை என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. போராளிகளுக்கு வழங்கப்பட்ட நேர்த்தியான இராணுவப் பயிற்சி, புலிகளின் பல்வேறு பயிற்சி முகாம்கள், மற்ற சகோதர இயக்கங்களுடன் இருந்த உறவு, மாவீரன் திலீபனின் வீர மரணம், தமிழ் நாட்டின் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆதரவு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் சாணக்கியன் பாலசிங்கத்தின் தொடர் முயற்சிகள், அன்றைய மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் பெரும் ஆதரவு, பிரபாகரனின் சமரச தீர்வுத் திட்டம், நல்லெண்ண நடவடிக்கையாக தலையிட்ட நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றோரின் முயற்சிகள் - என பல்வேறு செய்திகளைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். ஒரு இராணுவ வீரனாக, மிடுக்கான தளபதியாகப் பார்க்கப்பட்ட திரு. பிரபாகரன் ஓர் சிறந்த நிர்வாகி என்பதனையும் இந்நூல் உறுதிசெய்கிறது. மீட்டெடுக்கப்பட்ட தமிழீழப் பகுதிகளில் சீரிய நிர்வாகம், லஞ்ச லாவண்யமற்ற காவல்துறை, கண்ணியமான நீதித்துறை, ஒழுக்கம் சார்ந்த கல்விக் கொள்கை என சீரிய முறையில் நிர்வாகம் நடத்தப்பட்டது. சிங்கள இனவாத அரசுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த விடுதலைப்புலிகளின் பல்வேறு உட்பிரிவுகளின் சாகசங்கள், நூல் முழுவதும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் உணர்வை முழுமையாக வெளிப்படுத்தும் என்றால் அது மிகையல்ல. திரு. நெடுமாறன் கூறுவதுபோல் ஓராயிரமாண்டு தவமிருந்து பெற்று வாராது வந்த மாமணியாக திரு. பிரபாகரன் திகழ்கிறார். வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் பூண்ட திரு. பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர் என்ற கூற்று முற்றிலும் உண்மை. ஒரு தனி மனிதனின் வரலாறு ஒரு விடுதலைப் பேரியக்கத்தின் வரலாறாய் விரிந்து ஒரு தேசத்தின் நிமிர்ந்த வரலாறாய்ப் பழுத்த கதை என தமிழீழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன் கூறுவது முற்றிலும் உண்மை. பலமுறை வதந்திகள் கிளப்பப்பட்டும் உயிரோடு இருந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டி திரு. பிரபாகரன் மரணத்தை வென்ற மாவீரனாகத் திகழ்கிறார் என்று நூல் ஆசிரியர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் உறுதிபடக் கூறுகிறார். செய்வதறியாது திகைத்தும், விக்கித்தும் நிற்கும் தாய்த்தமிழ் நாட்டு மக்களின் கண்களைத் திறக்கும் விதமாகவும், உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் விதமாகவும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள். டாக்டர். சிவ. பகவதிப்பெருமாள் (ஆய்வுக் களஞ்சியம் 2-10-2012)
|