கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது
அறிந்ததே. இந்தப் பிரேரணையை முறியடிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கை இறுதிவரை போராடியது. ஆனால், இறுதியில் இந்தியா உட்பட நம்பிக்கை கொண்டிருந்த பல நாடுகள் தங்களைக் கைவிட்டது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் இருந்து கட்சி வேறுபாடின்றி எழுந்த கடுமையான அழுத்தங்களே தங்கள் நட்பு நாடு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் இலங்கையைக் கைவிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு இந்திய மத்திய அரசைத் தள்ளியது என்று அப்போது பல்வேறு கருத்துக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கை ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு முரணாக மேலும் மேலும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவப் பிரசன்னங்களை அதிகரித்து. தொடர்ந்தும் மக்களை இராணுவப் புலனாய்வாளர்கள் மூலமாக அச்சுறுத்தி வருவதுடன், கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரவே செய்துள்ளது. அத்துடன், மக்களை மீளக்குடியேற்றுவதாகக் கூறி காட்டுப்புறங்களில், கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படாத பிரதேசங்களில் அடிப்படையான எந்தவித வசதிகளுமற்று கொண்டுசென்று விட்டுள்ளது. ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கு முற்றும் முரணாக இலங்கை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல் விடயமே முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா. பிரேரணையில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி வருவதாக இலங்கை பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும் அவ்வாறு எவையும் நடைபெறவில்லை என்பதை உலக நாடுகள் நன்கு அறிந்துள்ளதுடன், அவை தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தமிழர் தாயகத்திற்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு அங்குள்ள உண்மையான நிலைமைகளின் ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றையாவது மகிந்த அரசு கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிவதிலும் அங்குசென்ற வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஈடுபட்டதுடன், மக்களிடம் இருந்து நேரடியாகத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன், இலங்கையின் ஏமாற்று நடவடிக்கையை அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி வருவதுடன், மனித உரிமை அமைப்புகளும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையின் கழுத்தை மேலும் இறுக்கும் ஒரு மாதமாகவே இருக்கும் என்று மனித உரிமையாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். எனினும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இம்முறையும் இந்தியா நடந்துகொள்ளுமா என்ற கேள்விகளும் எழாமலில்லை. இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டையே ஏனைய சில நாடுகளும் எடுக்கும் என்பதால் இந்தியாவை வளைக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இப்போதே களமிறங்கிவிட்டது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா மீது பல நாடுகள் ஏராளமான கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை என்பது ஒவ்வொரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்தும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். இந்த நிகழ்வின்போது அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையும், ஐ.நா.வின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும், அரசு சாராத அமைப்புகளின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும் ஆய்வுக்காக முன்வைக்கப்படும். அதன் பிறகு, விசாரணை தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஐ.நா. மனித உரிமை சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே எழுத்துப் பூர்வமாக வைப்பார்கள். விசாரிக்கப்படும் நாடு அந்தக் கேள்விகளுக்கு விசாரணையின்போது பதிலளிக்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு நாடுகள் இலங்கையிடம் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பியுள்ளன. ஸ்பெயின், டென்மார்க், மெக்சிகோ, கனடா, செக் குடியரசு, நெதர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, கியூபா, சுலேவேனியா, சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து உட்படப் பல நாடுகளுடன், இலங்கையை ஆதரிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், கியூபா கூடக் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், இலங்கையிடம் ஒரு கேள்வியைக் கூட இந்தியா எழுப்ப முன்வரவில்லை. இப்போது இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை இலங்கை ஜெனீவாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. எனினும், உலக நாடுகளால் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் இலங்கையால் ஆதாரங்களின்றி பதிலளிக்க முடியாது என்பதால், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே நம்பலாம். நன்றி : ஈழமுரசு 30 அக். - 05. நவம்பர், 2012
|