"வள்ளுவர் வழியில் விடுதலைப் புலிகள்'' - பேரா. கு. வேலன் திறனாய்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 14:26
பழ. நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ள மாபெரும் உண்மைக் காவியமான "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்'' நூலைத் தொடர்ந்து படிக்கின்ற பொழுது தமிழரின் வீரஞ்செறிந்த வரலாறும் தமிழர்களின் வடிவத்தை அழித்தொழிக்க முயன்றவர்களின்
அடையாளங்களையும் அறிய முடிகிறது.
இந்நூலை நுணுக்கமாக ஊன்றிப் படிப்பது மிகவும் அவசியமாகும். நூலாசிரியரே நேரில் கண்ட காவியம். ஒவ்வொரு கருத்தும் சான்றோடு கூறப்பட்டுள்ளது. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் 25 அக்டோபர் 2012ஆம் ஆண்டு 4ஆம் பக்கத்தில் (தமிழ்நாடு) இந்திய அமைதிப்படை 25 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 21, 22, 1987இல் யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளையும் பீரங்கிகளையும் கொண்டு தாக்கி 70 தமிழர்கள் மூன்று மருத்துவர்கள், 18 மருத்துவமனை ஊழியர்களைக் கொன்று குவித்தது என்பதை விரிவாகக் கூறுகிறது, அந்த தினத்தை அதே நாட்களில் 2012 அக்டோபர் 21ஆம் தேதி அன்று யாழ்ப்பான மக்கள் தங்களின் நினைவஞ்சலியைத் தவறாமல் செய்கிறார்கள்.
இச்செய்தியைப் படிப்பவர்கள் ஆழ்ந்த துயரத்திற்கு உள்ளாவர். இதைவிட கொடூரமான செய்லகள் எந்த நாட்டின் இராணுவத்தினாலும் செய்யப்பட்டு இருக்க முடியாது. இதனாலும் படுபாதகச் செயலை இந்திய அமைதிப்படையால் அரங்கேற்றப்பட்டது. இதற்கு பொறுப்பு இந்திய அரசும் அதனுடைய பல அமைப்புகளும் காரணமாகும். இது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது முதல் 5 ஆண்டுகளிலும், இரண்டாவது முறை பதவிக்கு வந்த பிறகும் இதைவிட அதிகமான அளவிற்கு மக்களை இராசபக்சேயும் மற்ற சிங்களக் காடையர்களும் சமீப காலத்தில் கொன்று குவித்ததற்கு பேருதவி செய்துள்ளது. இச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு பதவிகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாளிதழில் 25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற புத்தகத்தில் பார்க்க விரும்பினேன். படித்தேன். இச் செய்திகளும் மேலும் பல உண்மைகளும் 35ஆவது அதிகாரத்தில் "போர் தொடங்கியது'' என்னும் தலைப்பில் பல்வேறு உண்மைகள் வெளிவருகின்றது. இதில் விடுதலைப் புலிகளின் தியாக உணர்வு, கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு, தவிர்க்க முடியாமல் இந்திய அமைதிப்படையுடன் மோத வேண்டிய கட்டாயங்கள் ஆகியவைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தவறு இந்திய அரசுமீதும் அதனால் ஏவிவிடப்பட்ட படைகளின் மேல் தான் உள்ளதே தவிர விடுதலைப் புலிகளின் மேல் இல்லை என்பது அம்பலமாகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையையும் திருக் குறளையும் மனப்பாடமாகக் கொள்ளவில்லை எனினும் அதன் கருத்துக்களின் அடிப்படையில் தங்களின் செயல்பாட்டினைச் செய்துள்ளார்கள்.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு'' -குறள் 467.
"பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு'' -குறள் 963
"பேராண்மை என்ப துறுகண்ஒன் நுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு'' -குறள் 773
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை எனறு கூறுவர். ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
குறள் 773இன்படி பல்வேறு கால கட்டங்களில் சிங்கள இனவாதத்தை எதிர்த்துப் போரிடும் பொழுது விடுதலைப் புலிகள் கடைப்பிடித்துள்ளனர். சிங்களப் பொது மக்களை அவர்கள் ஒருபோதும் குறி வைத்ததில்லை. சில கட்டங்களில் இந்திய அரசின் வேண்டுதலின்படி சிங்களப் படையின் பேரழிவைத் தவிர்த்துள்ளனர்.
ஆனால் இராசபக்சேவின் அழிவுப்படை அனைத்துப் படுகொலைகளுக்கும் துன்பத்திற்கும் தமிழர்களை ஆளாக்கி உள்ளது. "வினை விதைத்தவன் அதை அறுப்பான்'' உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்'' அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்'' என்னும் பல பொன் மொழிகள் இனக்கொலைக் கொடூரன் இராசபக்சேயைத் தண்டிக்கும் என்பது திண்ணம். அதற்கு மனிதகுலம் முழுவதும் குறிப்பாக ஒட்டுமொத்தத் தமிழர்களும் நூலாசிரியரைப் போலவும் மற்றும் இதில் உண்மையிலேயே அக்கறை உடைய தலைவர்களைப் போலவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்பு கூறப்பட்டுள்ள மூன்று திருக்குறள்களுக்கும் ஆவணங்களாக பல முக்கிய செய்திகள் "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற இந்த புதிய புறநானூற்று நூலில் காணக் கிடக்கின்றன.
- முனைவர் மு. வேலன், மதுரை
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.