ஆதலினால் காதல் செய்வீர்! - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 15:07 |
இளவரசன் - திவ்யா காதல் சோகமாக முடிந்தது. இளவரசன் பிணமானார். திவ்யா நடைபிணமாக இருக்கிறார். இந்தத் துயரம் வடிவதற்குள் அதே தருமபுரியில் மற்றொரு சோக நாடகத்திற்கான திரை விலக்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சுரேஷ், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சுதாவைக் காதலித்து இருவரும் தத்தமது பெற்றோரின் சம்மதத்துடன் 2010-ஆம் ஆண்டில்
திருமணம் செய்து கொண்டு வேப்பமருதூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தையும் உள்ளது. அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கைப் படகை கவிழ்க்கச் சாதி வெறிப் புயல் உருவானது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த கிராமத்துப் பெரியவர்கள் ஒன்று கூடி சுரேஷ் - சுதா குடும்பத்தினரைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைத்துள்ளனர். கடந்த சூன் 7-ஆம் தேதியன்று திடீரென்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் எல்லோரையும் அடித்து நொறுக்கியது. எனவே அவர்கள் பாதுகாப்புக் கோரி காவல் துறையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். 2012-ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல மற்றொரு கலவரத்திற்கு வித்திடப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்து சாதி மதம் பாராமல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக சாதி வெறியர்கள் திட்டமிட்டுக் கலவரங்களை உருவாக்குகிறார்கள். காவியப் புலவன் கம்பனின் மகன் அம்பிகாபதியும் சோழ மன்னனின் மகள் அமராவதியும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தனர். கம்பன் பாடிய 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்" என்ற வரிகளுக்கு இசைவாக இருவரும் இணைந்தனர். மன்னர் குலத்து இளவரசியை ஏழைப் புலவனின் மகன் விரும்புவதா என வெகுண்டு எழுந்த சோழ மன்னன் அம்பிகாபதியைத் தண்டித்தான். அதைப் பொறாத அமராவதியும் உயிர் நீத்தாள் என்பது கதை. அதைப் போல முகலாயச் சக்கரவர்த்தியின் பட்டத்து இளவரசன் சலீம் அடிமைப் பெண் அனார்கலியைக் காதலித்தான். ஆனால் அவர்களுக்கும் இதே கதிதான் நேர்ந்தது. மனம் ஒப்பிய காதலுக்குச் சமூக அந்தஸ்து தடையாக அன்று இருந்தது. இன்று காதலுக்கு சாதி வெறி தடையாக உள்ளது. புகழ் பூத்த தமிழர்களின் பண்டைய மரபுக்கு இந்தப் போக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆசீவகம், சமணம், பவுத்தம் போன்ற சமயங்கள் தமிழகத்தில் ஓங்கியிருந்த காலக்கட்டத்தில் சாதிப் பாகுபாடுகளுக்கு இடமேயில்லாமல் இருந்தது. சமய மறுமலர்ச்சிக் காலத்திலும் சாதி வெறி தமிழர்களை ஆட்டிப்படைக்கவில்லை. சைவ நாயன்மார்கள் 63 பேரில் 8 பேரும், வைணவ ஆழ்வார்கள் 12 பேரில் ஒருவரும் தீண்டத்தகாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக அறியப்பட்டனர். ஆனாலும் சைவ, வைணவ ஆலயங்களில் அவர்களும் வழிபாட்டுக்குரியவர்களாக இன்றளவும் திகழ்கின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாதி - மதம் பாராமல் அனைவரும் இணைந்து போராடி இரத்தம் சிந்தியதின் விளைவாகத்தான் நாடு விடுதலை பெற்றது. ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலாகப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவனுக்கு தளபதிகளாக விளங்கிய வெண்ணிக்காவடி, ஒண்டிவீரன் பகடை ஆகியோர் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். வீரபாண்டியக் கட்டப்பொம்மனின் தளபதி சுந்தரலிங்கமும் அவ்வாறே. சிவகங்கை வேலு நாச்சியார் அமைத்த பெண் போராளிகளின் படைத்தளபதியாக விளங்கிய குயிலி முதல் மனித வெடிகுண்டாக மாறி ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழித்தவள். இவர்கள் அத்தனை பேரும் தங்கள் உயிர்களை தியாகம் செய்து வரலாறு படைத்தனர். காந்திய யுகத்தில் காமராசரின் வலது கரமாக திகழ்ந்த கக்கன், தியாகத்தில் யாருக்கும் சளைத்தவர் அல்ல. அவர் தலைமையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எண்ணற்றவர்கள் சிறை புகுந்தார்கள். ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் சாதி - மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு நின்று அனைவரும் பங்கேற்றனர். ஒன்றுபட்டு இரத்தம் சிந்தினார்கள். சிறைகளில் சித்ரவதைகளை அனுபவித்தார்கள். அந்த ஒற்றுமை இன்று எங்கே போனது? அரசியல் ஆதாயம் தேடுபவருக்காக சாதி வெறியர்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களுக்குத் துணையாக நிற்க மறுப்பதோடு, சாதி வெறித்தீயை அணைப்பதிலும் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். காலங்காலமாக தமிழகத்தில் நிலவி வருகிற சமூக நல்லிணக்கச் சூழ்நிலையை கட்டிக்காத்துவர வேண்டியது அனைவரின் கடமையாகும். ஒருவரை ஒருவர் காதலிப்பதே ஏதோ குற்றம் போல் கருதுகிற மன நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் நமது தொன்மையான மரபை ஒரு சிறிதும் அறியாதவர்கள். நமது சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரண்டாக பகுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இந்த பாகுபாடு கிடையாது என மூதறிஞர் வ. அய். சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார். இலக்கியங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது வாழ்வியலையும் அகம் - புறம் என பகுத்தனர். அதாவது காதல், வீரம் ஆகியவை தமிழர்களுக்கு இரு கண்களாகத் திகழ்ந்தன. எல்லா காலக்கட்டங்களிலும் தமிழர்கள் தங்கள் வாழ்க்கை நெறிகளாக இவை இரண்டையுமே கடைப்பிடித்தனர். அக இலக்கியங்கள் தமிழர்களின் காதல் வாழ்வு குறித்துச் சிறந்த உவமை நயத்துடன் விளக்குகின்றன. எடுத்துக்காட்டாக குறுந்தொகையில் பின் வரும் பாடலைக் குறிப்பிடலாம். யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிகுதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. - செம்புலப்பெயனீரார் குறுந்தொகை - 40 நெஞ்சைத் தொடும் இந்தப் பாடலை யாத்த புலவர் பெருமகனின் பெயர் தெரியாத காரணத்தினால் அவர் கையாண்ட 'செம்புலப் பெயல் நீர்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி "செம்புலப்பெயனீரார்' எனக் குறிப்பிட்டுள்ளனர். "உன்னைப் பெற்ற தாய் யாரோ! என்னைப் பெற்றத் தாய் யாரோ! நின் தந்தை யாரோ! என் தந்தை யாரோ! நீயும் நானும் எந்த வழியிலும் உறவினர் அல்லர்! - ஆனாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணோடு இரண்டறக் கலந்து சிவப்பு நீரானதைப் போல நம் இருவர் உள்ளங்களும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிக் கலந்துள்ளன!' என்பதுதான் இந்தப் பாடலின் பொருளாகும். மணல் மீது பெய்யும் மழை மணலுக்குள் மறைந்துவிடும். கரிசல் காட்டில் பெய்யும் மழை தேங்கி நிற்கும். செம்மண்ணில் பெய்யும் மழைதான் மண்ணின் நிறத்தோடு கலந்து நிற்கும். இத்தகைய அற்புதமான உவமையைக் கொண்டது இந்தப் பாடலாகும். இந்தப் பாடல் பிறந்த மண்ணிற்கும் இம்மண்ணிற்குச் சொந்தமான பண்பாட்டிற்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள். வாழையடி வாழையாகக் காதல் வாழ்வைப் போற்றி வரும் மரபுடையோர். இந்த பரம்பரையில் தோன்றிய இன்றைய தமிழர்களை காதல் வாழ்வு நெறிக்கு எதிராக வெறி கொள்ளச் செய்யவும் கலவரம் இழைக்கவும் தூண்டுகிற முயற்சி திட்டமிட்டு நடக்கிறது என்றால் நமது தொன்மையான மரபிற்கு இது எதிரானது அல்லவா? இத்தகைய தீய போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? இது நமது கடமை அல்லவா? அந்தக் கடமையைச் செய்ய தமிழர்களாய் திரண்டெழுவோம். - நன்றி : தினமணி 24-07-13
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |