மாற்று அரசியல் - இதுவே தக்க தருணம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:21

நாடாளுமன்றத்தில் 273 இடங்களை பெறும் கட்சிதான் தனியாக ஆட்சியமைக்க முடியும். ஆனால் அத்தகைய தனித்த பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை என அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2014-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பா.ஜ.க கூட்டணியோ 160 இடங்களைப் பிடிப்பதற்குக் கூட பெரும்பாடு பட வேண்டியிருக்கும். ஆனால், மற்ற கட்சிகள் 200 இடங்களுக்கு மேல் பெறக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 29% வாக்குகளைப் பெற்று 206 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் 28% வாக்குகளைப் பெற்றாலும் 131 முதல் 139 வரை உள்ள இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும், 2009-ஆம் ஆண்டில் 19% வாக்குகளைப் பெற்று 116 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்
தேர்தலில் 27% வாக்குகளைப் பெற்று 156-164 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
பா.ஜ.க. விற்கு வாஜ்பாய் + அத்வானி கூட்டுத் தலைமை இருந்த காலக்கட்டத்தில் 1998-ஆம் ஆண்டில் 25% வாக்குகளைப் பெற்றது. வரப்போகும் நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க. 27% வாக்குகளைப் பெறக் கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடக்குமானால் அதற்கு காரணமானவர் குஜராத் முதலமைச்சரான மோடியே என்பது நிலைநாட்டப்பட்டு வாஜ்பாய் + அத்வானி யுகம் பா.ஜ.க. வில் முடிந்துவிடும். அதைப் போல காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ள சரிவுக்கு நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தி பொறுப்பாக்கப்பட்டு அவருடைய சகாப்தமும் முடிந்து விடும்.
இவ்வாறு இந்திய அரசியல் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் நாளுக்கு நாள் சரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சரிவு எதிர்க்கட்சியான பா.ஜ.க. வுக்கு பெருமளவு உதவவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் என்ன? இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழி பேசும் மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைமை இரு கட்சிகளிலும் இல்லை. எதிர்காலத்தில் உருவாவதாகவும் தெரியவில்லை.
இந்த நிலைமை இன்று நேற்று ஏற்படவில்லை. 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய அரசில் எந்தக் கட்சியும் தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி யமைக்க முடியவில்லை. பல்வேறு மாநிலக் கட்சிகளின் உதவியுடனும் வெளியிலிருந்து இடதுசாரிக் கட்சிகளின் உதவியுடனும் ஆட்சியை அமைத்த காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டபோது அதை எதிர்த்து இடதுசாரிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். இதன் விளைவாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மாநிலக் கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. இரு கட்சிகளும் இவ்வாறு மாநிலக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியில் அமர முடிந்ததே தவிர தனியாக தங்கள் வலிமையினால் மட்டும் ஆட்சியில் அமரவில்லை. இனி தனியொரு கட்சியின் ஆட்சி என்பது இந்தியாவில் நடைமுறை சாத்தியமற்றது என்பது தெளிவாகி விட்டது.
2009-ஆம் ஆண்டில் பிற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், கடந்த 4 ஆண்டுகளில் வரலாறு காணாத மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்கிறது. இதை மறைப்பதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதற்கு முயலுகிறது.
அதைப் போல தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக மீண்டும் அயோத்திப் பிரச்னையையும் இஸ்லாமிய பயங்கரவாதப் பிரச்னையையும் பா. ஜ. க. தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் மக்களிடம் இது எடுபடவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கும் பா. ஜ. க. - வுக்கும் இடையே பொருளாதாரக் கொள்கையில் பெருத்த வேறுபாடு எதுவும் இல்லை. தாராளமயக் கொள்கையை இரு கட்சிகளுமே பின்பற்றுகின்றன. அந்நிய முதலீட்டுக்கு நாட்டைத் திறந்து விடுவதில் இரு கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. கொள்கையற்ற கூட்டணி அமைப்பதில் இரு கட்சிகளின் அணுகுமுறை ஒன்றே. சிறுபான்மை மதங்களைப் பொருத்த பிரச்னையில் பா. ஜ.க. தீவிரவாத இந்துத்துவா கட்சியாகும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ மிதவாத இந்துத்துவா கட்சியாகத் திகழ்கிறது. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை.
பணம் படைத்த பெரு முதலாளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற கூட்டு நாட்டின் வளங்களை சூறையாட இடம் கொடுத்துள்ளது. இந்தக் கள்ளக் கூட்டின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து ஊராட்சி மன்றத் தேர்தல் வரை பணம் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் பேரபாயத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. கட்சிகள் என்பவை இன்று அரசியல் தனி நபர்களின் சொந்த நிறுவனங்களாக மாறிவிட்டன. அரசியல் கட்சிகளிடையே பரவிவிட்ட வாரிசுரிமைப் போக்கும் பாசிசப் போக்கும் நிலைபெற்று சர்வாதிகார ஆட்சிகள் உருவாவதற்கு வழி வகுத்து விட்டது. ஆசியாவின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நேர்ந்துவிட்ட ஊனம் உலகிற்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது. இந்திய ஜனநாயகம் பதவி நாயகமாகவும், பண நாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அரசு அமைப்பது, கவிழ்ப்பது ஆகிய எல்லாமும் பண நாயகத்தின் உதவி இல்லாமல் நடைபெறாது. இந்தப் போக்கு இறுதியாக சர்வாதிகாரத்தில் போய் முடியும். இப்படித்தான் பாசிச சர்வாதிகாரிகளான இட்லரும் முசோலினியும் உருவானார்கள். பிரதமர் நேரு வகுத்த அணி சேரா கொள்கையிலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் சென்று விட்டது. எந்த வல்லரசுடனும் கூட்டுச் சேர்வதில்லை என்ற நிலையிலிருந்து விலகி அமெரிக்காவுடன் பல்வேறு துறைகளில் இந்திய அரசு கூட்டுச் சேர்ந்துள்ளது. அமெரிக்க சார்பு வெளிநாட்டுக் கொள்கைக்கு பா.ஜ.க. வும் ஆதரவு தருகிற கட்சியேயாகும். மக்களோடு நெருங்கிய துறைகளான கல்வி, சுகாதாரம் போன்றவை வணிகமயமாவதற்கு மத்திய அரசு துணையாக நிற்கிறது. ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகத் தொண்டாற்றிய இத்துறைகள் அவர்களுக்கு எட்டாத நிலைக்குச் சென்று விட்டன.
மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடு அடைந்திருப்பதைப் போல இதற்கு முன் எப்போதும் அடைந்ததில்லை. இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகளான பிறகும் மத்திய - மாநில மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை. மாநில அரசுகளைச் சிறிதளவு கூட மதியாத போக்கில் மத்திய அரசு தொடர்ந்து நடந்து கொண்டு வருவதின் விளைவாக காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக உள்ள பல மாநிலக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்களிடையே செல்வாக்கு கொண்ட தேசியத் தலைமை இன்று இல்லை என்ற உண்மையை மத்திய ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் உணர வேண்டும். நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதனாலேயே அவர்கள் வகித்த அதிகாரங்களைவிட கூடுதலான அதிகாரங்களை தாங்களும் வகிக்க முடியும் என்று எண்ணுவது பேதமையாகும். இன்று பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் பதவிகளில் வீற்றிருக்கிறார்கள். மாநிலக் கட்சிகள் வலிமை பெற்றுத் திகழ்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அகில இந்தியக் கட்சிகள் செல்வாக்கற்ற நிலையில் உள்ளன. மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் எதிர்காலத்தில் யாரும் மத்திய ஆட்சியை அமைக்க முடியாது. எனவே இந்தச் சூழ்நிலையை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் 200 இடங்களுக்கு மேல் பெறக் கூடும் என கருத்துக் கணிப்புக் கூறுகிறது. எனவே, மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்து மாற்று அரசியலைத் தருவதற்கு முன் வந்தால் 200 இடங்கள் என்பது 300 இடங்களாக மாறக் கூடும். இதை மனதில் கொண்டு அதற்கான முயற்சிகளில் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 63 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் 100 தடவைகளுக்கு மேல் அதை திருத்தியாகியும் விட்டது. 1954-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்படுவது ஆரம்பமாகி இன்று வரையில் தொடர்ந்து நடைபெறுகிறது. மொழிவழி மாநிலங்களாக நாடு பிரிக்கப்படுவதற்கு முன் வகுக்கப்பட்ட அரசியல் சட்டம் மொழிவழி மாநிலங்களின் தேவையை நிறைவு செய்யவில்லை. தற்போதைய சூழலுக்கு இந்த அரசியல் சட்டம் பொருந்தி வரவில்லை. எனவே மாநிலங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கும் வகையிலும், மத்திய ஆட்சிக்கு பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம் அச்சிடுதல் போன்ற சில குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டும் வழங்கும் வகையிலும் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சட்டம் கூட்டரசு அரசியல் சட்டமாகும். இது கூட்டாட்சி அரசியல் சட்டமாக மாற்றப்பட வேண்டும்.
தனித்தனி வளையங்களாக விளங்கும் முற்போக்கான மாநிலக் கட்சிகளை இணைத்து வலிமை வாய்ந்த சங்கிலியாக ஆக்குவது இன்றைய இன்றியமையாத கடமையாகும். இதன் மூலம் மாற்று அரசியல் உருவாகும். இந்த முயற்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்ட இடதுசாரிகள் முன் வர வேண்டும்.
அண்மையில் வேலூரில் பேசியுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா பின்வருமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். "நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை பலப்படுத்துவதற்கும் ஒரு மாற்றுக் கொள்கை தேவைப்படுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்றுக் கொள்கையுடைய அரசியல் அணியை உருவாக்க இடதுசாரிக் கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன. இது ஒரு தேர்தல் அணியாக இப்போதே உருவாகிவிடுமா என்று சொல்ல முடியாது. தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பையொட்டி ஒரு மாற்று ஆட்சியை உருவாக்குவது பற்றி யோசிப்போம்'' என்றார் ராஜா.
ராஜா அவர்களின் கருத்தை நாம் வரவேற்ற போதிலும் தேர்தலுக்குப் பின் மாற்று ஆட்சியை உருவாக்குவதைப் பற்றி சிந்திப்பதை விட தேர்தலுக்கு முன்னாலேயே ஒரு மாற்று அணியை உருவாக்குவது இன்றியமையாததாகும். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகள் மீது நம்பிக்கை இழந்திருக்கும் மக்கள் புதிய மாற்று அணியின் மீது நம்பிக்கை வைப்பார்கள். இதன் மூலம் நீண்ட நாட்களாக நாம் விரும்பிய அரசியல் மாற்றம் வந்தே தீரும். எனவே, மாநிலக் கட்சிகளையும் மற்றும் முற்போக்கான கட்சிகளையும் ஒன்றிணைத்து மாற்று அணி ஒன்றை தேர்தலுக்கு முன்னாலேயே உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் விரும்பும் பயன் கிடைக்கும். நீண்ட நாட்களாக மாநிலங்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் மாநிலக் கட்சிகள் "கூட்டாட்சி அணி'' (எங்க்ங்ழ்ஹப்
எழ்ர்ய்ற்) ஒன்றினை அமைத்து மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் சட்டத்தைத் திருத்தி அதிக அதிகாரங்களைப் பெறவும் முடியும். மாநில உரிமைகளை மதிக்கும் உண்மையான கூட்டாட்சியை உருவாக்கவும் முடியும். மாற்று அரசியலுக்கான வழியும் பிறக்கும். இதுவே அதற்குத் தக்க தருணமாகும்.
நன்றி : தினமணி 7-8-2013

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.