பொடாவில் கைது! கடலூர்ச் சிறையில் நெடுமாறன்! வீடு, அலுவலகங்களில் சோதனை! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:27 |
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும், ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சென்னை ஆனந்த் திரையரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் கூறி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை தமிழக அரசு பொடா சட்டத்தின் கீழ், 01-08-2002 இரவு பத்து மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்துள்ளது. இரவோடு இரவாகக் கடலூருக்கு அழைத்துச் சென்று, மறுநாள் அதிகாலை மூ3 மணியளவில் அங்குள்ள மத்திய சிறையில், நீதிபதி உத்தரவின் பேரில் ஆகஸ்டு 28-ஆம் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரமைப்பு தொடக்கவிழா மாநாட்டுப் பணிகளில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக அயராது பாடுபட்டு வந்த அவர், தொடர்ந்து அவரது இயக்கப் பணிகளில் ஈடு பட்டிருந்தார். ஆகஸ்டு 1-ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சென்னை மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தனர். அவர் தங்கியிருக்கும் நரசிம்மபுரம் பகுதி முழுவதுமே காவலர் களால் சூழப்பட்டது. ஒரு பெரிய பயங்கரவாதியைக் கைது செய்வது போன்ற நாடகத்தைக் காவல்துறையினர் அன்று நடத்தி முடித்தனர். அப்போது இரவு உணவு உட் கொண்டிருந்த நெடுமாறனிடம், பொடாவின் கீழ் கைது செய்யப்படுவதற்கான ஆணை காட்டப்பட்டது. இரவு 10 மணியளவில் தன் உடைகளோடும், சில புத்தகங்களோடும் சிறைப் பயணத்திற்கு அவர் தயாரானார்.
சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள பொடா நீதிபதி இராசேந்திரன் வீட்டிற்கு அவரைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். நீதிபதியிடம் அவரது வழக்குரைஞர் சந்திரசேகர், தலைவரின் வயது கருதியும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருப்பதாலும் சென்னை மத்திய சிறையிலேயே அவரைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீதிபதியும் அதற்கு இசைவளித்தார். அங்கிருந்து அவர்கள் வெளியே வரும் போதே பத்திரிகையாளர்கள் வந்து குவிந்து விட்டனர். நாடெங்கும் செய்தி பரவத் தொடங்கியது.
அங்கிருந்து சென்னை மத்திய சிறைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் நீதிபதியின் பரிந்துரைக்கு மாறாகவும் வேண்டுகோளைப் புறக்கணித்தும் இரவோடு இரவாக அங்கிருந்து அவரைக் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இது போன்ற அலைக்கழித்தல் இப்போது தமிழக அரசின் வாடிக்கையான செயல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்ட ம.தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலம் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிறகு வேலூர்ச் சிறையில் கொண்டு வந்து அடைக்கப்பட்டார். புதுக் கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணன் கோவைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவ்வாறே சென்னையில் கைது செய்யப்பட்ட நெடுமாறனைக் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுசென்றுள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்திலும் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 08-08-2002 அன்று மாலை 4 மணியளவில், சென்னையில் உள்ள நெடுமாறன் வீட்டிலும், சென்னை மதுரையிலுள்ள தமிழர் தேசிய இயக்க அலுவலகத்திலும் காவல்துறையினரால் சோதனைகள் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 3 மணி நேரம் அவர்கள் சோதனையிட்டனர். இறுதியில் சில படங்கள், புத்தகங்கள், ஒலி-ஒளி நாடாக்கள் ஆகியனவற்றை எடுத்துச் சென்றனர். இப்போது அவை பொடா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வழக்கமான உற்சாகத்துடனும், கலங்காத நெஞ்சுரத்தோடும் கடலூர்ச் சிறையில் நெடுமாறன் நாட் களை நகர்த்தி வருகிறார். ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த அவருக்கு அரசாங்கம் நல்ல ஓய்வை இப்போது வழங்கியுள்ளது. நூல்கள் படிப்பதிலும், கட்டுரைகள் எழுதுவதிலும் இப்போது அவர் கவனம் தங்கியுள்ளது.
விலங்குகள் உடையும், சிறைக் கதவுகள் திறக்கும்! புதிய பொலிவோடும் பெருகிய ஆதரவோடும் விரைவில் வெளி வருவார் நெடுமாறன் என்று எண்ணிக் காத்திருக்கிறது தமிழகம்.
|
திங்கட்கிழமை, 07 மே 2012 20:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |