பிரிட்டனில் தமிழீழத் தேசியக் கொடிக்கு அங்கீகாரம் |
|
|
|
திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013 15:18 |
இலண்டன் வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமையாக இருக்க வேண்டிய தருணம் இது. பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர் (இபஎ) கடினமாகப் பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களைத் தயாரித்து போலிசாரிடம் கொடுத்துள்ளார்கள்.
இதனால் தற்போது தமிழ் மொழிக்கு ஒரு இலச்சினை கிடைத்துள்ளது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லை. உலகம் எல்லாம் வாழும் தமிழர்கள் இரண்டாந்தர குடிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது என்பதனை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழர்களின் தேசியக் கொடியை பிரித்தானியப் போலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே இனி வரும் காலங்களில் அதனைப் பிடிக்க பிரித்தானியாவில் தடை எதுவும் கிடையாது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புலிக்கொடியை அந்நாட்டின் தமிழ் இலச்சினையாக மாற்ற எல்லா நாட்டுத் தமிழர்களும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு தற்போது கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனி தனிநாடு ஒன்று உருவாவதே பாக்கியாக உள்ளது. பிரித்தானியாவோடு இணைந்திருக்கும் ஸ்காட்லாந்து என்னும் தனியரசு, தனது விடுதலைக்காக சுமார் 600 ஆண்டுகள் போராடினார்கள் என்பது வரலாறு. ஆனால் நாம் கடந்த 33 ஆண்டுகளையே தற்போது கடந்துள்ளோம். எனவே, எமது தலைமுறை தாண்டினாலும் எதிர்காலச் சந்ததிகள், தனிநாடு கிடைக்கப் போராடுவார்கள் என்பதில் ஐயமில்லை. இச்செய்தியை அறிந்த சிங்களம் என்ன செய்வது என்று தெரியாமல் நிச்சயம் திண்டாடும். புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த சக்தி என்ன என்பது தற்போது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.
|
சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013 15:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |