இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை வழங்குவது என இந்திய அரசு செய்துள்ள முடிவிற்கு தமிழகத் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை. இந்தியா இலங்கையின் நட்பு நாடு. வேறு எந்த பகை நாடும் இலங்கையின்மீது படையெடுக்கப்போவதும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் இலங்கைக்கு எதற்காகப் போர்க் கப்பல்கள்?
அந்தக் கப்பல்களின் உதவியைக்கொண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்படுமானால் இலங்கை சீனாவுடன் சேர்ந்துகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் இந்தியா வழங்கியுள்ள போர்க் கப்பல்கள் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது. எதையும் யோசித்துப் பாராமல் இராசபக்சேயை எப்படியாவது தாஜா செய்யவேண்டும் என்பதற்காக இந்தியா செய்கிற இராணுவ ரீதியான உதவிகள் நாளை இந்தியாவிற்கு எதிராகவே திரும்பும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
கடந்த காலத்தில் இதைப்போன்ற சூழ்நிலை எழுந்தபோது அப்போது பதவியில் இருந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களும் என்ன செய்தார்கள் என்பது எண்ணிப்பார்க்கத் தக்கதாகும்.
20-12-2000 அன்று நானும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களைச் சந்தித்தோம். சுகன்யா என்னும் போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா வழங்கியிருப்பது குறித்து எங்களுக்குக் கிடைத்த தகவலை அவருக்குத் தெரிவிக்கவே நாங்கள் அவரைச் சந்தித்தோம். அது சம்பந்தமான இணையதளச் செய்தியை அவரிடம் காட்டியபோது அவர் திகைத்துப்போனார். ஆனாலும் இது சம்பந்தமாக அலுவலகம் சென்று கோப்புகளை எடுத்துப் பார்த்த பிறகே உண்மை தெரியும் என்று கூறிவிட்டு மீண்டும் இரவு தன்னைச் சந்திக்கும்படி வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க இரவு அவரைச் சந்தித்தபோது "கப்பல் விற்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் பிரதமராக குஜ்ரால் இருந்தபோது இதற்கான உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. அதற்கிணங்க சுகன்யா கப்பல் இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்டது. மற்றொரு புதிய போர்க்கப்பல் ஒன்று விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுவருவதாகவும் அதை தான் நிறுத்திவிட்டதாகவும், போர்க் கப்பலோ அல்லது ஆயுதங்களோ இலங்கைக்கு வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக எங்களிடம் கூறினார்.
இதைக்கேட்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம். இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகளில் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இதை செய்திருக்க முடியாது என்பதையும் அறிந்தோம். அதற்காக அவருக்கும் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தோம்.
இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படையும் இணைந்து கூட்டுரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தியையும் அவர் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அச்செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்தார். சிங்களக் கடற்படையுடன் இந்தியக் கடற்படை கூட்டாக ரோந்து செய்யும் பணி ஒருபோதும் மேற்கொள்ளப்படமாட்டாது என உறுதியளித்தார். மேலும் இலங்கையைச் சுற்றிலும் இந்தியக் கடற்படை பாதுகாவல் பணியினை மேற்கொண்டிருந்ததையும் தான் நிறுத்திவிட்டதாகவும் இதன் காரணமாக கடற்படைத் தளபதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்றும் அந்த எதிர்ப்பை தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் விளைவாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளின் பெயரிலும் கடற்படைத் தளபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதையும் எங்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.
பிரதமராக ராஜீவ் இருந்த காலத்திலிருந்து பிரதமர் குஜ்ரால் ஆட்சிக் காலம் வரையிலும் இடையில் வி.பி.சிங் ஆட்சிக்காலம் தவிர காங்கிரஸ் கட்சியோ அல்லது அக்கட்சியின் ஆதரவுபெற்ற அரசுகளோதான் தொடர்ந்து பதவியில் இருந்து வந்துள்ளன. எனவே இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையையே மற்ற அரசுகளும் தொடர்ந்து கையாண்டு வந்திருக்கின்றன. ராஜீவின் கொள்கை தவறான கொள்கை. சிங்கள அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டினையே இந்த அரசுகள் பின்பற்றி வந்திருக்கின்றன. பிரதமர் வாஜ்பாய் பொறுப்பேற்றபிறகு இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முக்கியமான காரணமாகும்.
ஆனால் 2003ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் அரசு பதவியேற்ற பிறகு சிங்கள இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது மீண்டும் ஆரம்பமானது. அது மட்டுமல்ல, சிங்கள இராணுவத்திற்கும் கடற்படைக்கும் தேவையான கனரக ஆயுதங்கள் உட்பட அத்தனையையும் இந்திய அரசு வழங்கிவந்தது. அதன் காரணமாகவே 2009ஆம் ஆண்டில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஏதிலிகளானார்கள். ஈழத்தமிழர்கள் சந்திக்க நேர்ந்த இந்த அவலத்திற்கு இந்திய அரசு முக்கிய காரணமாக இருந்தது என்பது அப்பட்டமான உண்மையாகும்.
வரலாறு காணாத வகையில் ஈழத் தமிழர்கள் சந்திக்க நேர்ந்த அழிவிற்கும், தமிழக மீனவர்கள் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்களக் கடற்படையினரால் தாக்கப்பட்டு 800 பேருக்கு மேல் உயிரிழந்ததற்கும் காரணமான இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசை ஆதரிக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியே 2 போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதாகும்.
|