போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் இனத்தைக் கருவழித்த இனவாத சிங்களம், அத்துடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடையாளம் கண்டு அழித்துவருவதுடன், தமிழர்களின் சமய சின்னங்களையும் அழிப்பதில் தீவிர முயற்சிகளில் மகிந்த அரசாங்கத்தின் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் திடீர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. மட்டக் களப்பு மாவட்டத்தில் கடந்த 01-06-2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக் கதிர்காமம், மாங்காட்டுப் பிள்ளையார், பண்டிருப்பில் திரெளபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன. இவ்வாறான சம்பவம் ஒன்று - 04-06-2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது.
ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதே சமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாம்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் வன் செயல் காரணமாக ஆலய வளாகத்தினையும் அங்கிருந்த பாடசாலைக் கட்டடத்தையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி முகாம் அமைத்தனர், 20 வருடங்களுக்கு மேலாகியும் விசேட அதிரடிப்படை முகாம் இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு சூலை மாதம் 30ஆம் தேதி விசேட அதிரடிப் படையினர் இம்முகாமை அகற்றி வெளியேறி ஆலயத்தை மக்களிடம் கையளித்தனர், மலையில் 21 அடி உயரம் கொண்ட முருகன் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஆலய வளாகத்துக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக் கட்டிடத்தில் மீண்டும் இராணுவத்தினர் முகாம் அமைத்ததுடன் ஆலய பரிபாலன சபையினரை இராணுவத்தினர் அழைத்து ஆலய வளாகத்தில் உள்ள கட்டிடத்தினை எமது உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தருமாறு கேட்டனர்.
இதே வேளை, எந்தவிதமான அறிவிப்பும் இன்றி கடந்த மே மாதம் ஆலய வளாகத்தினை சுற்றி வேலிகள் அமைத்து இராணுவம் தன்வசமாக்கிக் கொண்டதுடன் ஆலய கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்திக் கட்டிட பொருட்களையும் அகற்றுமாறு பணித்துள்ளனர்.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சிவன் ஆலயப் பகுதியைச் சுற்றி புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் அடையாளப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
மூன்று தடவைக்கு மேல் இடம்பெயர்ந்தவர்கள் இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை. 20 குடும்பத்திற்கு மேல் நமது சொந்த முயற்சியினால் மீள்குடி யேறியுள்ளனர். ஏனையோர் தாம் இடம்பெயர்ந்த இடங்களிலேயே இன்றும் வசிக்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களின் காணி, ஆலய காணிகளைச் சிங்களமயமாக்குவதற்காக புதைபொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் அபகரிப்புகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமாத்திரமல்ல, சிங்களம், முஸ்லிம் தரப்பினருக்கு காணிக் கச்சேரி மற்றும் நடமாடும் சேவைகளை செய்து காலணிக்கான உறுதிகளை வழங்கும் கொழும்பு அரசாங்கம், வளர்த்தாப்பிட்டி பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்கு மாத்திரம் அவர்களின் சொந்தக் காணிக்கான உறுதிப் பத்திரங்களை வழங்காது இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது.
மீள்குடியமர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழர்களின் காணிகளை அபகரிப்புச் செய்வதற்கான நடவடிக்கையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின் பின்னர் முஸ்லிம் மக்களின் ஒரு பகுதியினை தமிழர்களின் பகுதியில் குடியமர்த்தியுள்ளதால் பெருமளவு நிலப்பகுதி பறிபோயுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்பாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வளத்தாப்பிட்டி கிராமத்தில் 260க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் குடியிருந்த பகுதியில் இன்று 20க்கும் குறைவான குடும்பங்களே மீள்குடியேற்றியுள்ளனர்.
1960 ஆண்டுக்கு முன்பு மலை உச்சியில் அமைந்துள்ள இந்த சிவன் ஆலயத்தில் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இன்று இவர்களை வழிபாட்டுக்கு தடைகளை ஏற்படுத்தியதுடன், நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் விகாரை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்கு பின்னர் ஏராளமான பெளத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நடைபெற்று வருகின்றன.
அத்தோடு, சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் பெளத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவும் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதை தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். யுத்த காலத்தில் உயிர்களையும், உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தற்போது தமது இருப்பிடங்களையும் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொல்பொருட் திணைக்களம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆய்வுக்காக இனம் கண்டுள்ளதாகவும், அதில் குறித்த தங்கவேலாயுதபுரம் மலைப்பகுதியும் ஒன்றாகும்.
தங்கவேலாயுதபுரம் சங்கமன்கண்டி போன்ற இடங்களிலுள்ள மலைகளில் விகாரை அமைக்க முஸ்தீபுகள் மேற்கொண்டமை அறிந்த விடயமாக இருந்தாலும், திருக்கோவில் பிரதேசத்தில், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தொல்பொருள் தடயங்கள், ஆதாரங்கள் உள்ளதாக தங்க வேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சங்குமன்கண்டி, றுபஸ்குளம், சாகாமம், பொத்துவில் ஆகிய இடங்களில் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
பெளத்த அடையாளங்களோ பெளத்த குடும்பங்களோ இல்லாத அம்பாறை மாவட்டத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் பெளத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பெளத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, சாகமம், கஞ்சிக்குடிச்சாறு ஆகிய பகுதி மக்கள் நீண்டகாலமாக இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து தற்போது தமது சொந்த நிலங்களில் முழுமையாக மீள்குடியேற முடியாத நிலையில், ஒருபோதும் சிங்கள மக்கள் வாழாத பகுதியில் பெளத்த விகாரை உருவாக்கப்படுவது தமிழ், சிங்கள மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும், அம்பாறை மாவட்டத்தில் இந்து மதத்தவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வரும் மிகவும் பழமை வாய்ந்த உகந்தை முருகன் ஆலயத்தின் வளாகத்தினுள் பெளத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்வீஸ் ஆலயத்தின் வண்ணக்காகளை அழைத்து ஆலயத்தின் ஒரு பகுதியில் விகாரை அமைக்க ஒரு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் திட்டமிட்டு பெளத்த இனவாதிகள், பெளத்த பிக்குகளின் ஏற்பாட்டில் இராணுவத்தினரின் அனுசரணையுடன் பெளத்த விகாரை உருவாக்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. முழுமையாக இராணுவ மயமாக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினால் தனது விருப்பத்திற்கு அமைவாக உருவாக்கப்படும் பெளத்த விகாரைக்கு எந்த ஒரு சிங்கள மக்களும் வழிபாட்டிற்கு செல்ல மாட்டார்கள்.
எனவே, இன்றைய கால கட்டத்தில் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து சிங்கள அரசாங்கத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. கடந்த 07-07-2013 அன்று திருகோணமலையில் விநாயகர் ஆலயத்தில் 12 பாவைகள் திட்டமிட்ட முறையில் சேதமாக்கப்பட்டன. ஆனால் இதுவரையில் அது தொடர்பான எந்தவொரு விசாரணையுமில்லை, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவுமில்லை.
அதுமாத்திரமல்ல, வெளிப்படையாகவே பாதுகாப்புச் செயலாளரின், உத்தரவுக்கமைய கடந்த 01-09-2013 அன்று தம்புள்ளை பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் உடைக்கப்பட்டது. பின்னர் கடந்த வாரத்தில் ஆலயத்தையே தரைமாட்டமாக்கிவிட்டார்கள். ஆனால் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த காலப் பகுதியில்தான் யாழ்ப்பாணம் பொன்னாலைவரதராஜப் பெருமாள் ஆலயம் கொள்ளையிடப்பட்டது. இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் இராணுவம் முகாமிட்டுள்ள சுற்றத்தில்தான் இடம்பெற்றுள்ளது.
எனவே, உலக நாடுகள் எவ்வாறு சிங்கள இனவாதத்திற்கு உதவிகளைச் செய்து தமிழர் போராட்டத்தை நசுக்கியதோ அவ்வாறு சிங்கள இனவாத அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளையும், அத்துமீறல்களையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்தியா உட்பட அனைத்துலகம் முன்வரவேண்டும்.
- நன்றி : ஈழமுரசு
|