முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 12:56

1-2-2014 சனிக்கிழமை அன்று மாலையில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய அமைப்புகள், ஈழத் தமிழர் ஆதரவுக் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், மே 19 இயக்கத் தலைவர் திருமுருகன், தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஜோசப் கென்னடி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுப. இளவரசன் உள்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. இந்திய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானமாக முன்மொழிய வேண்டும் என இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

அ. இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா. பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆ. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் "இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை' புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது, இரண்டாவது அணு உலைகள் சரிவர இயங்காத நிலையில் 3-ஆவது 4ஆவது அணு உலைகளை இயக்கப் போவதாக அறிவித்திருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் மின் உற்பத்தி செய்வதற்கு முன் கடைப்பிடிக்கவேண்டிய அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக, மேலும் அணு மின் நிலையங்களைத் திறப்பது உச்ச நீதிமன்றத்தையும், தென் தமிழக மக்களின் உயிர்களையும் கொஞ்சமும் மதிக்காது செயல்படுவதாகும்.

இந்திய அரசின் இந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஓராண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து போராடிவரும் உதயகுமாரும், போராட்டக் குழுவினரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு இக்கூட்டம் மிகுந்த கவலை அடைகிறது. உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையம் இயக்கப்படுவதை நிறுத்தி உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுமாறும் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசுமாறும் இக்கூட்டம் இந்திய, தமிழக அரசுகளை வற்புறுத்துகிறது.

3. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் 20-2-14 அன்று சென்னை உட்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும், ஈழத் தமிழர் ஆதரவுக் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் பெரும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டிக்கொள்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.