ஐநா விசாரணை? தொடங்கப்படுவது எப்போது? - அரிகரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 13:05

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன.

23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைப் பொறிமுறையை இன்னமும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உருவாக்கவில்லை.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநாஹ மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த சில நாட்களிலோ, ஒரு வாரத்திலோ, இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு விடும் என்றே முதலில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கிட்டத்தட்ட, ஐநா விசாரணைப் பொறிமுறைக்கான ஏற்பாடுகளை நவநீதம்பிள்ளை மேற்கொண்டு விட்ட பின்னரே, தீர்மானம் கொண்டு வருவது போன்ற தோற்றப்பாடு கூட இலங்ஹகையில் ஊடகங்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அது ஐநா விசாரணைகளின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பவும் வசதியாக இருந்தது.
அதாவது இலங்கைக்கு எதிரான சதித்திட்டம் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் முயற்சியாகவும் அதனை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெனிவாவில் இந்த விசாரணைப் பொறிஹமுறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளும் கடந்த மார்ச் 27ம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தான் மேற்கொள்ளப்பட்டன.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இந்த விசாரணைப் பொறிமுறை குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட ஒரே பணி, இதற்குத் தேவையான செலவு எவ்வளவு என்ற மதிப்பீட்டடை மேற்கொண்டது மட்டும் தான்.

இந்தத் தீர்மானம் பேரவையில் விவாதிக்கப்படும் போதே இதற்கு ஆகும் செலவு என்ன, அதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கும், என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. எனவே தான் அதற்கான மதிப்பீட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்டிருந்தது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே கடந்த மார்ச் 27ம் திகதி இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த விசாரணைக்கான செலவுகளை முன்வைத்தும் அதற்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பி பிரச்சினையைக் கிளப்பியது பாகிஸ்தான்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் ஏற்கனவே மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்ததால் தான் சுமார் 14 மில்லியன் டொலர் இதற்குத் தேவைப்படுமென்றும் அதற்கான நிதியை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கான ஐநாவின் வருடாந்த ஒதுக்கீட்டில் இருந்தே பெறமுடியுமென்றும் பேரவைச் செயலகத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த மதிப்பீடு தவிர்ந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்குவதற்கான வேறெந்த முன்னேற்பாட்டையும் நவநீதம்பிள்ளையின் பணியகம் மேற்கொண்டிருந்தால், இந்தப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தளவு காலம் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்காது. எவ்வாறாயினும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அல்லது ஓரிரு வாரங்களில் விசாரணைப் பொறிமுறையை நவநீதம்பிள்ளை அறிவிப்பார் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கத்தில் காணப்படும் நீண்ட தாமதம் பலரையும் சலிப்படையச் செய்துள்ளது.

தீர்மானத்தை முன்வைத்து ஆதரித்த நாடுகள் பலவும் கூட இது குறித்து கவலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கவலைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நவநீதம்பிள்ளை பணி ஓய்வில் செல்வதற்கு முன்னதாக விசாரணைப் பொறிமுறை செயற்படத் தொடங்கிவிட வேண்டும் என்பது முதலாவது.

விசாரணைகளை ஆரம்பத்தில் ஏற்படும் தாமதம், அதனை நிறைவு செய்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை இடுவதிலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது கவலை.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியில் இருந்த நவநீதம்பிள்ளை வரும் யூலை 31ம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார்.

புதிதாகப் பொறுப்பேற்கின்ற ஆணையாளர் இந்த விடயத்தில் எந்தளவுக்கு கரிசனை காட்டுவார் என்ற அச்சம் ஏற்கனவே தமிழர் தரப்பிடம் உள்ள ஒன்றுதான்.

ஆனாலும் புதிய ஆணையாளர் இந்த விசாரணைப் பொறிமுறைக்கு குறுக்கே நிற்பதற்கு வாயப்பில்லை என்று கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுவதற்கு முன்னர் விசாரணைகள் தொடங்கப்பட்டால் தான் குறிக்கப்பட்ட காலத்திற்குள் அதனை நிறைவு செய்ய முடியும். புதிய ஆணையாளர் வந்து பொறுப்பேற்றதன் பின்னர் விசாரணைப் பொறிமுறையை அமைப்பது என்றால் அதற்குள் இன்னும் கால விரயம் ஏற்பட்டுவிடும்.

எனவே தான் நவநீதம்பிள்ளை ஓய்வில் செல்வதற்கு முன்னதாக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு விட வேண்டும் என்ற கருத்து வலுவாக உள்ளது. அதைவிட வரும் யூலை 31ம் திகதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தாலும் அதற்கு முன்னரே அவர் விடுப்பில் செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கபபடுகிறது.

தாம் ஓய்வுக்கு முந்திய விடுப்பில் செல்ல முன்னரே விசாரணைப் பொறிமுறை செயற்படத் தொடங்கிவிட வேண்டும் என்பதில் நவநீதம்பிள்ளை உறுதியாக இருப்பதாகவும், இது குறித்து அவர் ஐநா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூடத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தாலும் இந்த விசாரணைப பொறிமுறை உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, இம்மாத இறுதிக்கு முன்னர் வெளியாக வாய்ப்பில்லை என்றே ஐநா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நீண்ட இழுபறிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் மூலமாக இலங்கைக்கு ஆதரவான ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டன என்பது தெரிந்ததே.

இந்த விசாரணைக்கு தன்னால் இயன்றளவுக்கு இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டைகளைப் போட முயன்றது.

எனவே, எந்தவகையிலும் இந்த விசாரணைகள் சிறுமைப்படுத்தப்படவோ, முடிக்கப்படவோ கூடாது என்பதில் நவநீதம்பிள்ளை உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே அவர் இரண்டு விடயங்களில் இறுக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணைகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது அதில் முதலாவது. இலங்கை அரசின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும் என்பது இரண்டாவது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நேர்மையை இலங்கை அரசு இனிமேல் இல்லையென்றளவுக்கு கேவலப்படுத்தி விட்டது.

அவரையும் ஒரு சீருடை அணிந்த புலி என்று கூறாத அளவுக்கு அவரை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பானவர் என்று சித்திரித்து விட்டது.

இந்த நிலையில் வெளிப்படைத் தன்மை கொண்டதாக விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என்று அவர் உணர்கிறார்.

அதுவே அவரது பெயரை பாதுகாக்க மட்டுமன்றி, ஐநாவினது பெயரையும் காப்பாற்றும். அதைவிட இலங்கை அரசாங்கம் ஏதாவது காரணங்களைக் கூறி, விசாரணைப் பொறிமுறையையும் அதன் இறுதி அறிக்கையையும் ஏற்காமல் நழுவிக் கொள்ளாமல் தடுப்பதற்கும் அதுவே உதவும்.

அடுத்து, இலங்கை அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, முழு அளவிலான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்பதே நவநீதம்பிள்ளையின் நம்பிக்கையாக உள்ளது.

அரசாங்கத்தினது ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, அரசதரப்பின் நிலையை அறிந்து கொள்ளலாம். விளக்கங்களைக் கேட்டுக் கொள்ளலாம். தேவையான சாட்சிகளை விசாரித்து விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இல்லாவிடின் ஒரு பக்க விளக்கங்களைக் கொண்ட விசாரணையாகவே அது அமைந்து போகும். அதற்கு அவ்வளவு பெறுமானமும் கிடைக்காது.

எனவே தான் இலங்கை அரசின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அவர் முனைவதாகத் தெரிகிறது.
அந்த ஒத்துழைப்பு கிடைக்காது போனாலும், அதற்கான முயற்சிகளில் அவர் தெளிவாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்க விடயம். அதேவேளை ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் குறுகிய காலத்திற்குள் மேற்கொண்டு விட முடியாது என்பதை ஐநா அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த விசாரணைப் பொறிமுறையின் செயற்பாட்டுக்கான ஒரு நெறிமுறைக் கோப்பு வரையப்பட வேண்டும். அவர்களின் விசாரணைப் பரப்புகளை உறுதியாக வரையறை செய்ய வேண்டும். தேவையான விசாரணையாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறான விசாரணைக்குப் பொருத்தமானவர்களை தேடிப் பிடிக்க வேண்டும். இந்த விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஐநா பொதுச் செயலரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஒரு நீண்ட செயல்முறைகளை இது கொண்டுள்ளது.
இவையெல்லாமே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒழுங்கமைக்க வேண்டிய நிலையிலுள்ள விடயங்கள்.

கடந்த முதலாம் திகதி நியூயோர்க்கில் நடந்த பொறுப்புக்கூறல் பற்றிய மாநாட்டில், ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனுடன் இணைந்து பங்கேற்ற நவநீதம்பிள்ளை, மறுநாள் இரண்டாம் திகதி அவருடன் தனியான சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் ஆராய்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் தற்போது விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவே தெரிகிறது. விரைவில் அது இறுதிக்கட்டத்தை எட்டலாம்.

ஆனால், விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் காலம் தாமதமடைவதால், விசாரணைக்கான காலம் குறுகிவிடும்.

ஒரு பெரியளவிலான பரப்பை விசாரிக்கப் போகும், விசாரணைக் குழுவுக்கு கால அவகாசம் குறைவது, அந்த விசாரணைகளைப் பாதிக்கும்.

வரும் செப்டம்பரில், வாய்மூல அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டும்.

இல்லையேல், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கால நீடிப்பைக் கோர வேண்டிய நிலை ஏற்படலாம்.

தற்போது விசாரணைப் பொறிமுறை உருவாக்கலில் ஏற்பட்டுள்ள தாமதம், இந்தக்கால நீடிப்பைக் கோருவதற்கான சாத்தியங்களையே தென்படச் செய்கிறது என்பதில் ஐயமில்லை.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.