யாழ்ப்பாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது அமைப்பும் பயன்படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரியே கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் காணிகளுக்கு சொந்தக்காரர்கள் அல்லர் எனவும் அவர்கள் சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து வந்து அங்கு குடியேறியவர்கள் என்றும் அந்த மக்களுக்கு காணிகளின் உரிமைகள் தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.
காணி விடயம் என்பது உண்மையில் அரசாங்கத்தினுடைய சிவில் நிர்வாகம் தொடர்புடைய விடயம். காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தாலும் கூட அதற்கு சிவில் நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்று இவ்விடயத்திற்கு இராணுவம் பதில் சொல்கின்றது என்றால், இது ஒரு தெளிவான செய்தியை எங்களுக்கு காட்டுகின்றது. அதாவது தமிழர் தாயக பிரதேசங்களில் நடைபெற்று வருவது சிவில் நிர்வாகம் அல்ல. இராணுவ நிர்வாகம் தான் என்பதை வெளிப்படையாகக் காட்டி நிற்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பாவணையிலிருந்த காணிகளையும், கட்டடங்களையும் இராணுவம் இன்று தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறது. இந்நிலையில், புலிகளுக்கு நீங்கள் வழங்கிய காணிகளையே தற்போது நாங்கள் எமது தேவைகளுக்காக எடுத்துக்கொள்கிறோம் என இராணுவத்தினர் கூறுகின்றனர். அந்த உரிமை தமக்கு இருக்கின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன். நீங்கள் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு கொடுத்த காணிகள் தொடர்பில் உங்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என மக்களுக்கு இராணுவத்தினர் கூறுகின்றனர். எனவே இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும்.
பாவிப்பதற்குத்தான் காணிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதால் விடமாட்டோம் என்கிறார்கள். அப்படியாயின் வலி வடக்கு காணிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டதா? அல்லது யாழ் குடா நாட்டின் நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பும் புலிகளின் பயன்பாட்டில் இருந்தவையா? என்ற கேள்விகள் எழுகின்றன.
எங்களைப் பொறுத்தவரை உண்மையில் இங்கே நடைபெறுவது என்ன என்பதை சர்வதேசம் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதே எமது அவாவாகும் என அவர் தெரிவித்தார்.
- கஜேந்திரகுமார், நன்றி : ஈழமுரசு
|