தமிழக உரிமைகளை அடைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்! - புதிய முயற்சியில் பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:07

காவிரி நதிநீர் பங்கீட்டில் ஓரவஞ்சனை, முல்லை பெரியாறில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம், தமிழக மீனவர்களின் உரிமைகளும் உடமைகளும் உயிரும் பறிக்கப்படும் கொடுமை என்று அனைத்துத் திசைகளிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் தேசியமும் திராவிடமும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கவில்லை.

இந்த நிலையில், புதிய குரல்கள் புறப்பட்டு வருகின்றன. "தமிழகத்துக்கான தேவைகளை அடைய ஒரே தீர்வு தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவது மட்டுமே. அதற்கு, இப்போது உதிரிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்'' என்கிறார் பழ.நெடுமாறன். அதற்காக வருகிற 29-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கலந்தாலோசிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அவரிடம் பேட்டி கண்டோம்.

"தமிழ்த் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் திடீர் முயற்சி எதற்காக?'
"தமிழகத்தில் நிறைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அனைவருக்கும் ஒரே நோக்கம் இருந்தாலும் உதிரி உதிரியாக செயல்படுகின்றனர். தமிழ்த் தேசியம் என்பதில் ஒரே கருத்து நிலவும்போது ஏன் தனித்தனி அமைப்புகள்? தனித்தனிக் கொடிகள்? இப்படிப் பிரிந்து கிடப்பதால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் வலு ஏற்படுவது இல்லை. இவர்கள் ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டுமே அந்தப் போராட்டத்துக்கு ஒரு வலு ஏற்படும். ஆட்சியில் இருப்பவர்களிடம் இவர்களின் குரல் எட்டும். அதனால்தான் இப்போது இந்த முயற்சி.'

"இப்போது அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறீர்களா?'

"தமிழ்த் தேசியவாதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம், முன் எப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. காரணம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் நம்முடைய உரிமைகளைப் பெற முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போதும் அந்தத் துயரம் நீடிக்கிறது. தமிழக மீனவர்களுடைய உரிமை, உடமை, உயிர் என அனைத்தும் பறிக்கப்படுகின்றன. அதற்கு இதுவரை ஒரு விடிவு ஏற்படவில்லை.'

உலக மயமாக்கலுக்குப் பிறகு உலகின் பல மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து யுனெஸ்கோ அளித்துள்ள அறிக்கையில், ‘அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கக் கூடும்’ என்று சொல்லி உள்ளது. மொழி அழிந்தால் இனம் அழியும். நாடு அழியும். அதை நாம் தடுத்தாக வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. அப்படி முன்பே ஒன்றுபடாமல் போனதால்தான், 2009-இல் இலங்கையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, பக்கத்தில் நாம் ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தும் அதைத் தடுக்க முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் நாம் ஒன்றுபடாததுதான். ஒன்றுபட்டு இருந்தால் இந்திய அரசை நிர்பந்தப்படுத்தி அதைத் தடுத்திருக்க முடியும்.'

"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட என்ன காரணம்?'

"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு என்பது உருவான ஒன்றல்ல. ஒன்றாக இருந்தவர்கள் உடையவில்லை. மாறாக, உருவாகும்போதே தனித்தனி அமைப்புகளாக உருவானார்கள். இப்போது அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை முன்னெடுத்துள்ளேன்.'

"இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?'

"2004-ஆம் ஆண்டு அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு நிறைய தமிழ்த் தேசிய அமைப்புகள் உருவாயின. அவற்றையும் இப்போது ஒன்றுபடுத்த வேண்டிய அவசியமும் கடமையும் இருப்பதால் இந்த முயற்சி. அதற்கான காலம் இப்போது கனிந்துள்ளது. என்னிடம் பலர் தொடர்ந்து இதுபற்றி வற்புறுத்தி வந்தார்கள். அப்படி வற்புறுத்தியவர்கள் இணைந்து செயல்படவும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அப்படி இணையும் போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார் என்ற ஒரு கேள்வியும் எழும். என்னைப் பொறுத்தவரையில் நான் தெளிவாக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரட்டும். ஆனால், ஒற்றுமையாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இளைஞர்கள், துடிப்பாகச் செயல்படுபவர்கள் தலைமைக்கு வர வேண்டும். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் செய்வோம்.'

"அகண்ட பாரதத்தை வலியுறுத்தும் கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ளது. திராவிடத் தத்துவத்தை முன்னிறுத்தும் கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துவது பற்றிச் சொல்லுங்கள்?'

"மொழி வழியின் அடிப்படையில்தான் ஒரு தேசியம் உருவாக முடியும். மதம், மரபினம் என்ற அடிப்படையில் ஒருநாளும் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் மங்கோலிய மரபினத்தில் வந்தவர்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்த நாடுகளில் மங்கோலிய தேசியம் உருவாகவில்லை. மாறாக, அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் சீனர்கள், ஜப்பானியர்கள் என்றுதான் தங்களின் தேசியத்தை உருவாக்கி அடையாளப்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை.

மத அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஒரு தேசத்தை உருவாக்கி மத தேசியத்தை அமைக்க முடியும் என்று சொல்லித்தான் ஜின்னா பாகிஸ்தானைப் பிரித்தார். ஆனால், அங்கிருந்து கிழக்கு வங்காளம் சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டது. அவர்களும் முஸ்லிம்கள்தான். ஆனால், மொழியின் அடிப்படையில் பிரிந்து போனார்கள். அதுதான் இயல்பு. மத வழியில் ஒரு தேசியம் அமைய முடியும் என்றால், மேற்கே அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை முஸ்லிம் தேசியம் உருவாகி இருக்க வேண்டுமே? ஏன் உருவாகவில்லை? ஆப்கானிய முஸ்லிம், ஈராக்கிய முஸ்லிம், பாகிஸ்தான் முஸ்லிம் என்று மொழி அடிப்படையில் பிரிந்துதானே இருக்கிறார்கள். தேசியம் அப்படி மொழி அடிப்படையில்தான் உருவாக முடியும்.

இந்திய தேசியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது எங்கே இருக்கிறது? மொழி அடிப்படையில் எப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றே இந்திய தேசியம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. பாஞ்சாபி, பஞ்சாபியர்களாகத்தான் இருக்கிறார்கள். குஜராத்தி, குஜராத்திதான். வங்காளி, வங்காளிதான். நாம் ஒரு நிலப்பரப்புக்குள் சில சமரசங்களுடன் ஒன்றாக வாழ்கிறோம். அவ்வளவுதான்! அனைவரும் இந்தியர்கள் என்றால், மலையாளியும் கன்னடர்களும் தண்ணீர் பிரச்னையில் நம்மை ஏன் வதைக்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும்கூட, இரண்டு மாநில முதலமைச்சர்களும் அதை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் நம்மை வேறாக நினைப்பதால்தானே?

அதுபோலத்தான் திராவிட அரசியலும். வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. திராவிட அரசியலுக்குள்ளும் கேரளாவும் கர்நாடகமும் இருக்கிறது. ஆனால், அவர்கள் நம்மை வேறாகத் தானே பார்க்கிறார்கள். திராவிட அரசியல் பேசும் திராவிடத் தலைவர்கள்கூட தங்களை மனத்தளவில் தமிழ்த் தேசியத் தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். திராவிட இன உணர்வை இழக்கவிட மாட்டோம் என்று சொல்லும் கலைஞர், தனக்குப் பட்டமாக திராவிடர் இனத் தலைவர் என்றா போட்டுக் கொள்கிறார்? தமிழினத் தலைவர் என்றுதான் போடுகிறார். எனவே, திராவிட அரசியல் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற வேலை.'

"தமிழ்த் தேசியத்தை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்? அப்படி தமிழ்த் தேசியம் அமைந்தால், இப்போது உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடுமா?'

"தேசிய இன உருவாக்கத்துக்கு ஆறு அம்சங்கள் அடிப்படை. 1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கை முறை, 4. இலக்கியச் செழுமை, 5. பொது வாழ்க்கை பழக்கவழக்கங்கள் 6. சமூக மரபுநிலை. இந்த ஆறு அம்சங்களும் சங்க காலத்தில் இருந்து தமிழர்களுக்கு சரியாக அமைந்துள்ளன. ஆக தமிழ்த் தேசியம் அமைவதற்குத் தடையேதும் இல்லை. அப்படி அமைந்தால் இப்போது உள்ள பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா என்று கேட்டீர்கள் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் சிந்து மாகாணத்துக்கும் பஞ்சாப்புக்கும் சிந்து நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்னை இருந்தது. அதை பிரிட்டிஷ் அரசு தீர்க்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்ததும், இரண்டு மகாணங்களுக்கு இடையிலான அந்தப் பிரச்னை இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறியது. அப்படி மாறியதும் உலக வங்கி அதில் தலையிட்டு உடனடியாக அந்தப் பிரச்னையைத் தீர்த்துவைத்தது. அதற்காக தமிழகத்தை உடனடியாக இந்தியாவில் இருந்து பிரிக்கச் சொல்லவில்லை. ஆனால், காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சிந்து நதிப் பிரச்னையில் ஏற்பட்ட நிலை ஏற்படக்கூடும்!'

நன்றி : ஜூனியர் விகடன் 18-06-14

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.