டில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முதல் பலிக்கடாக்கள் ஆவது ஆளுநர்கள்தான். 1977ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி மாறி ஜனதா கட்சியின் ஆட்சி ஏற்பட்டபோது பல மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1980ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது ஜனதா கட்சி நியமித்த மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டார்கள். பதவி விலக மறுத்த தமிழக ஆளுநராக இருந்த பட்வாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதைப்போன்ற நிலை இப்போதும் தலைதூக்கி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். இப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு அந்த ஆளுநர்கள் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் மத்திய அரசால் கொடுக்கப்படுகிறது. அதை ஒட்டிய வாதப்பிரதிவாதங்கள் நாட்டில் எழுந்துள்ளன.
ஆளுநர் பதவி என்பது இந்திய அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அதிகாரப் பதவி அல்ல. அரசியல் சட்டப்படியான பதவியை வகிப்பவர் அவர். இந்தப் பதவி இந்திய அரசுக்குக் கட்டுப்பட்டது அல்ல. மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அரசியல் சட்டப்படி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஒப்புதல் பெறாமல் எந்த சட்டமும் நடைமுறைக்கு வராது. நாட்டின் குடியரசுத் தலைவருக்கு அடுத்து உள்ள ஆளுநர் பதவி அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காயாகா மாற்றப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரால் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் இவ்வாறு செய்கிறார். மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள். தன்னால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவது ஏன்? மாநிலங்களின் மீது மேலாதிக்கம் செலுத்த மத்திய ஆட்சி நினைப்பதே இதற்குக் காரணமாகும். இந்தச் சிந்தனைப் போக்கு கூட்டாட்சிக்கு ஒருபோதும் உதவாது. மத்திய-மாநில மோதல்கள் இதன் மூலம் அதிகமாகுமே தவிர குறையாது.
அரசியல் நிர்ணயசபையால் அமைக்கப்பட்ட அரசியல் சட்டக்குழு விவாதித்த முதல் அம்சமே மாநில ஆளுநரின் நியமனமுறை பற்றியே ஆகும். குழு உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ளதுபோல் ஆளுநர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். நிர்வாக அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும் என்று ஒருசாரார் கருத்துத் தெரிவித்தனர் மற்றொரு சாரார் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் செயல்படும் அரசியல் சட்டப்படியான தலைவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்றும் மறைமுகத் தேர்தல் மூலம் ஆளுநர் நியமிக்கப்படவேண்டும் என்றும் வாதாடினர். பல தடவை இக்குழுக்கூடி விவாதித்த பிறகும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இறுதியாக 1947ஆம் ஆண்டு சூன் 7ஆம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும். அவரை அந்தந்த மாநில அரசுதான் நியமிக்க வேண்டும். மத்திய அரசு நியமிக்கக்கூடாது. வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் சிறப்புத் தேர்தல் குழு மூலம் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால், 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் நிர்ணயசபைத் தலைவரிடம் நகல் அரசியல் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட முக்கியமாற்றங்களில் ஒன்று ஆளுநரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றியதாகும். நகல் சட்டத்தின் 131ஆவது பிரிவு இருவேறு மாற்று யோசனைகளை தெரிவித்தது. மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் 4 பேர் கொண்ட குழுவிலிருந்து ஒருவரை ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்வது. மற்றொரு யோசனை மாநில மக்களே நேரடியான தேர்தல் மூலம் ஆளுநரைத் தேர்ந்தெடுப்பது. மேற்கண்ட முறைகளில் எதன்மூலமும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டாலும் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதின் மூலம் ஆளுநரை பதவிநீக்கம் செய்ய முடியும் என்று நகல் சட்டத்தின் 137ஆவது பிரிவு கூறியது.
நகல் சட்டத்தை பரிசீலிக்க அரசியல் நிர்ணய சபைத் தலைவர் சிறப்புக் குழு ஒன்றினை நியமித்தார். 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி சிறப்புக்குழு கீழ்க்கண்ட பரிந்துரையை வழங்கியது. "தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவிலிருந்து ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டியதில்லை. குடியரசுத் தலைவரே நேரடியாக ஆளுநரை நியமிக்கலாம்'' என்பதே அந்தப் பரிந்துரையாகும். அரசியல் நிர்ணயசபை இறுதியாக இந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. ஆளுநர் பதவி குறித்து மீண்டும் 1949ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு பின்வருமாறு குறிப்பிட்டார். "மாநில அரசு ஒப்புக்கொள்ளக்கூடிய பொதுவானவரை ஆளுநராக நியமிப்பது சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் அவரால் அங்கு கடமையாற்ற இயலாது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரும் அரசியலில் நேரடியாகப் பங்குகொள்ளாதவருமான திறமைசாலியை ஆளுநராக நியமிப்பது மிகவும் விரும்பத்தக்கது. அரசியல் வாதிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தங்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட விரும்பக்கூடும். ஆனால் கல்வித் துறை அறிஞர்கள் அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்கள் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து, அரசின் கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த எல்லாவகையிலும் உதவிபுரிவதுடன் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் அவர் இருப்பார்.'' என்று கூறினார்.
ஆளுநரை குடியரசுத் தலைவரை நியமிக்கும் முன்பு மாநில முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது தேவையானது ஒன்று என்பதனை விவாதத்தில் பங்குகொண்டு பேசிய நேரு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகிய மூவரும் வலியுறுத்திப் பேசினர்.
அரசியல் சட்டப்படி ஆளுநரின் அந்தஸ்து குறித்து இந்திய உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. 1979ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐவர் அடங்கிய அரசியல் சட்டப்பிரிவு கீழ்க்கண்டவாறு கூறியது.
"ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் - அதாவது உண்மையில் இந்திய அரசாங்கத்தால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதனால் ஆளுநரை இந்திய அரசாங்கத்தின் ஒரு ஊழியராகக் கருதிவிடக்கூடாது. ஆளுநரின் பதவிக்காலத்தை அரசியல் சட்டம்தான் நிர்ணயிக்கிறது. ஆளுநரின் எஜமானனாக இந்திய அரசாங்கத்தை அரசியல்சட்டம் ஆக்கவில்லை.''
அரசியல் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இவ்வளவு தெளிவாக ஆளுநர் நியமனம், அதிகாரம் ஆகியவை குறித்து கூறினாலும் காலப்போக்கில் இவையெல்லாம் தூக்கியெறியப்பட்டு அரசியல்வாதிகள் அதிலும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் போன்றவர்களுக்கு ஆளுங்கட்சி அளிக்கும் பரிசாக ஆளுநர் பதவி ஆக்கப்பட்டது. டில்லியில் ஆளுங்கட்சி மாறும்போதெல்லாம் ஆளுநர்கள் பதவி விலக்கப்பட்டு.ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படும் போக்கு வளர்ந்தது.
ஆளுநராக பதவி வகித்தவர்கள் அதிலிருந்து விலகி மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் நிலைமையும் உருவாயிற்று. பீகார் கவர்னராக இருந்து டி.கே. பரூவா பின்னர் மத்திய அமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சில மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர்கள் தாங்கள் சார்ந்திருந்த கட்சி சட்டவிரோதமாகப் பதவியில் தொடர்ந்து நீடிக்க அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தனர். மத்தியில் ஆளுகின்ற கட்சியின் நலனைக் காக்கும் பாதுகாவலர்களாக ஆளுநர்கள் தங்கள் பதவிகளை பெரும்பாலும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. முதலமைச்சர் நியமனம், சட்டசபை கலைப்பு போன்றவற்றில் ஜனநாயகத்தையோ அல்லது நாடாளுமன்ற முறை மரபுகளையோ ஆளுநர்கள் கடைப்பிடிக்கவில்லை அல்லது கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஜனநாயக நெறிகளுக்கும் பெரும் ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர்களின் பங்கு - பணி குறித்து 1983ஆம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே அளித்த வெள்ளை அறிக்கையின் இறுதியில் குறிப்பிடப்பட்டதாவது.
"அரசியல் சட்டத்தை வகுத்த அறிஞர்களின் நோக்கத்தை இன்னும் சொல்லப்போனால் அரசியல் சட்டத்தின் ஆதாரத் தத்துவத்தையே இவர்கள் தெளிவாக மீறியிருக்கிறார்கள். முதலமைச்சர் நியமனம், சட்டசபை கலைப்பு போன்றவைகளில் நாடாளுமன்ற முறை மரபுகளை ஆளுநர்கள் கடைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அல்லது கடைப்பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களின் கட்டளைகளுக்குஏற்ப நடந்துள்ளனர். இவர்கள் பிறப்பித்த உத்தரவுகள் ஆளுங்கட்சியின் நலனை பாதுகாக்கும் விதத்திலேயே இருந்தன. இது முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு முரணானது. இத்தகைய நடவடிக்கைளின் விளைவாக கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சனநாயக நெறிகளுக்கும் பெரும் ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சி மீறப்பட்டுள்ளது.''
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது ஆளுநர்கள் பிரிட்டிஷ் பேரரசின் பிரதிநிதிகளாக விளங்கி மக்களை அடக்கி ஆள்பவர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்காகப் பெரும் செலவு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலையில் இன்னமும் மாற்றம் இல்லை. பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டு இயங்கும் இராஜ்பவன்கள் மன்னர்களின் அரண்மனைகளைவிட ஆடம்பரமாக உள்ளன. மக்கள் வரிப்பணத்தில் இத்தகைய பெருஞ்செலவு தேவையா? என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை ஆளுநர்களாக பதவி வகிப்பவர்கள் இராஜபோகத்தில் திளைக்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி நேர்மையாக இவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.
இந்தப் போக்கு ஆளுநர் பதவிகளே தேவைதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் அதற்குப் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சரும் அமைச்சரவையும் இருக்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்த முயலும் ஆளுநர் பதவி அவசியம்தானா? இந்தியாவின் அரசியல் நிலையை அடியோடு மாற்றியிருக்கிறது. மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி என்ற நிலை மாறிப்போய் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் ஆட்சிப்பொறுப்பில் உள்ளன. மத்திய ஆட்சியிலும் பலகட்சிகள் கூட்டுசேர்ந்துதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை கடந்த காலத்தில் இருந்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைத்து ஒரேகட்சியின் ஆட்சி நிலவுகிறது. எனவே இந்திய அரசியலில் கட்சி சார்பான ஆளுநர்கள் நியமிக்கப்படுவது தவறாகும். மாநிலத்தில் ஆட்சியில் ஒருகட்சியும் ஆளுநராக நியமிக்கப்படுபவர் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தேவையில்லாத மோதல்கள் ஏற்படும். ஆகவே ஆளுநர் பதவி தொடர்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? என்ற கேள்வியை அறிஞர் அண்ணா எழுப்பினார். அந்தக் கேள்விக்குரிய விடை இதுவரையிலும் கிடைக்கவில்லை.
நன்றி : தினமணி
|