இந்துத்துவாவும் - தமிழ்த் தேசியமும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:27

மதவேற்றுமையில்லாமல் அனைவரும் சகோதர சகோதரி பாவத்துடன் வாழ்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாடு மதவெறிக்களமாக மாறத் தொடங்கியிருப்பதற்கு இந்துத்துவா சக்தியும் அதற்கு லாலிபாடும் திராவிடக் கட்சிகளுமே காரணமாகும். தொடர்ந்து மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் போன்ற இந்துத்துவா சக்திகளை ஒடுக்குவதற்கு எத்தகைய முயற்சிகளையும் திராவிட ஆட்சிகள் செய்யவில்லை. அவைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முசுலீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராகவும், தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகவும் முன்னிலும் கடுமையான அடக்குமுறைகள் தொடர்கின்றன. இந்துத்துவா சக்தியை திருப்திப்படுத்த முன்பு தி.மு.க. செய்ததை இப்போது அ.தி.மு.க. போட்டி போட்டுக்கொண்டு பின்பற்றுகிறது.

வள்ளலார் காலந்தோட்டு அயோத்திதாசப் பண்டிதர், திரு.வி.க., பெரியார் ஈ.வெ. இராமசாமி காலம் வரை செய்யப்பட்ட பரப்புரையின் விளைவாகத் தமிழ் மண்ணில் மதவெறிக்கோ, சாதிவெறிக்கோ இடமில்லாமல் போயிற்று, ஆனால் மேற்கண்ட சான்றோர் பண்படுத்திய தமிழ்மண்ணில் இந்துத்துவா என்னும் நச்சு முட்செடிகளை வளர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. இவை வளர்ந்து வைரம் பாய்ந்திடுமானால் பிறகு யாராலும் வெட்ட முடியாது. வெட்டும் கோடாலியும் முனை மழுங்கிப்போகும். இந்த நச்சுச் செடிகளை அகற்றி தமிழ் மண்ணைப் பக்குவப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நமது முன்னணிக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் உண்டு. இதை நாம் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்யப்போவதில்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தயவில் கால் ஊன்றிய பா.ஜ.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை இரு கழகங்களுக்கும் மாற்றுச் சக்தியாக முன்னிலைப்படுத்த முயன்றது. ஆனால், தமிழ் மக்கள் இதை ஏற்கவில்லை. பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைந்தன. ஆனால், டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றியப்பிறகு பா.ஜ.க. முன்னிலும் தீவிரமாக தமிழகத்தில் தனது செல்வாக்கினைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதை எதிர்த்துப் போராட திராவிடக் கட்சிகள் முன்வரப்போவதில்லை. பா.ஜ.கவுடன் சமரசம் செய்துகொள்வதில் திராவிடக் கட்சிகள் போட்டிபோடுமே தவிர எதிர்க்கப்போவதில்லை. எனவே, தமிழ்த் தேசிய அமைப்புகள் மட்டுமே பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுத் தமிழ்த் தேசியமே தவிர. இந்துத்துவாவோ இந்தியத் தேசியமோ அல்ல. அல்லவே அல்ல.

வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.