செயல் திறன்மிக்க கென்னடி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:56

தஞ்சை கட்டடப் பொறியாளர்கள் மற்றும் எழிற் கலைஞர்கள் சங்கத்தின் 2014-15-ஆம் ஆண்டிற்குத் தலைவராக பொறி. ஜோ. ஜான் கென்னடி பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். கென்னடி சிறந்த பொறியாளர் என்பதைவிட சிறந்த தமிழ் உணர்வாளர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அமைக்கும் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகளில் அந்தப் பணியினை மிகச்சிறப்பாக செய்து முடித்தார். உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் திரளான மக்கள் அந்த முற்றத்திற்கு வருகைதந்து மெய்சிலிர்க்கிறார்கள் என்று சொன்னால், அந்தப் பெருமைக்குரியவர்கள் கென்னடியும் மற்றும் உள்ள சிற்பிகளும், கட்டடத் தொழிலாளர்களும், புகைப்படக் கலைஞர்களும், ஓவியர்களுமே.

காலம் அறிதல், இடம் அறிதல், வழி அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் என்ற தலைப்புகளில் அமைந்த அதிகாரங்களில் வள்ளுவப் பேராசான் என்ன கூறியிருக்கிறாரோ அதை தனது தொழிலுக்குப் பயன்படுத்தியதால்தான் கென்னடி அனைவரின் பாராட்டுக்கும் உரியவராகத் திகழ்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்படும்போது பல நாடுகளிலிருந்தும் வரும் பலரும் கூறும் யோசனைகளுக்குச் செவிசாய்த்து, எது தேவையோ அதைச் செய்து, யாரும் முகமும் கோணாது இப்பணியை செவ்வனே நிறைவேற்றி முடித்தார்.

தனது செயல் திறத்தாலும், பொறுமையாலும், இனிமையான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்து இப்பணியினை செய்து முடித்ததன் விளைவாக உலகத் தமிழர்கள் வணங்கும் தூய இடமாக முற்றம் திகழ்கிறது.

கட்டடப் பொறியாளர்கள் மற்றும் எழிற் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜான் கென்னடி அவர்களுக்கு எனது நல் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.