"தீவரைவு' சிந்தனையைத் தூண்டும் குறும்படம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:19 |
சாதி எல்லைகளை மீறிக் காதலித்துத் திருமணம் செய்வோரை சாதி வெறியர்கள் படுகொலை செய்வது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் நடைபெறுகிறது. ஆனால் உறவுக்குள்ளும், சொந்த சாதிக்குள்ளும் திருமணம் செய்வது மரபியல் ரீதியான கோளாறுகளையும், உடல் ஊனங்களையும், நோய்களையும் பரப்பிக்கொண்டிருக்கிறது என்ற அறிவியல் ரீதியான உண்மையை அடிப்படையாக வைத்து கருந்திணை என்னும் அமைப்பு "தீவரைவு' என்னும் குறும்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தினை பூங்குழலி இயக்கியிருக்கிறார்.
தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடம் இக்கருத்தினை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இப்படம் திரையிட்டுக் காட்டப்படுகிறது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் அறிவியல் உண்மையை உணர்கிறார்கள்.
தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகைகளான தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து (தமிழ்), மாலைமுரசு, ஆனந்தவிகடன், புதிய வாழ்வியல் மலர் போன்றவை இயக்குநர் பூங்குழலியின் படைப்பைப் பாராட்டியுள்ளன. இப்படம் பார்த்தவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு பூங்குழலி தக்க விளக்கம் அளித்து வருகிறார்.
தமிழர்களின் வாழ்க்கையிலும், சிந்தனையிலும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவர தீவரைவு குறும்படம் உதவும். அதற்காக பூங்குழலி அவர்களுக்கும் இப்படத்தை உருவாக்குவதில் உடன் நின்றோர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரியனவாகுக.
|