"இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகுக்கு ஓங்கிய திருமாமணி....'' - என இளங்கோவடிகள் கண்ணகி தெய்வத்தைப் பற்றி பாடுகிறார்
"கண்ணகி கொங்க நாட்டினையும், குடகு நாட்டினையும் ஆளும் செல்வி. தென் தமிழ்நாட்டிற்குரிய பாவை. முற்பிறப்பில் செய்த தவப்பயனாக இப்பிறப்பில் சிறப்போடு தோன்றி மனிதகுலம் முழுவதும் போற்றும் மாணிக்கமெனத் திகழ்பவள்' என இளங்கோவடிகள் போற்றுவதால் "தமிழ் நிலத்திற்கு மட்டுமல்ல உலகம் அனைத்தும் வணங்கத் தக்க தெய்வமானவள் கண்ணகி'' என்பதை நாம் அறிய முடிகிறது.
சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்திருந்தாலும் "தமிழர்கள் ஒரே இனத்தினர். தமிழகம் ஒரே நாடு' என்ற உணர்வினை ஊட்டும் வகையில் தமிழ்த் தேசிய காப்பியமான சிலப்பதிகாரத்தினை இளங்கோவடிகள் இயற்றினார். சோழநாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிற்கு வந்து, அல்வழிப்பட்ட அரசை அழித்து, சேரநாடு சென்று அங்கு தெய்வமான கதையைக் கருவாகக் கொள்கிறார். காப்பியத்தின் இறுதியில் சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி கோவிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒருங்கே வழிபாடு செய்வதாகக் காட்டுகிறார்.
கண்ணகி தெய்வ வழிபாட்டினைத் தோற்றுவித்து அதன் மூலம் தமிழ் மன்னர்களையும், மக்களையும் ஒன்று படுத்தினார் இளங்கோ. கண்ணகி வழிபாடு தமிழர்களை ஒன்றுபடுத்தியது. தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை மட்டுமல்ல கடல் கடந்த தமிழர்களையும் ஒன்றுபடுத்தியது. வரலாற்றுச் சான்றுகள் அதை நிரூபிக்கின்றன.
சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெயவத்திற்குக் கோயில் எடுப்பிப்பதைத் தொடர்ந்து பாண்டிய மன்னனான வெற்றிவேல் செழியன் கண்ணகி வழிபாட்டினை நடத்தினான். கொங்கு நாட்டு இளவரசனும் தனது நாட்டில் கண்ணகி வழிபாட்டைப் பரப்பினான். சோழ மன்னனான பெருநற்கிள்ளி கண்ணகிக் கோயில் கட்டிப் பல நாட்கள் விழா நடத்தினான்.
இலங்கையில் முதலாம் கயவாகு மன்னன் கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபட்டான். கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றினை இலங்கைக்கு அவன் கொண்டு வந்ததாகவும் செவிவழிச் செய்தி உள்ளது. இலங்கையில் உள்ள பத்தினிக் கோயில்களில் இன்னமும் சிலம்பு வழிபாடு உள்ளது அதை உறுதிப்படுத்துகிறது.
சிங்களவர்கள் புத்த சமயத்தினராக இருந்தாலும் பல புத்த ஆலயங்களில் பத்தினிக் கோயில் தனியாக அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. கண்டியில் உள்ள புத்தர் கோவிலில் பத்தினித் தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆண்டுதோறும் பெரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்களவர்கள் "பத்தினிதெய்யோ'' எனக் கூறுவது பத்தினித் தெய்வம் என்பதன் திரிபேயாகும்.
சிங்களவர்கள் புத்த சமயத்தினர். எனவே பெண் தெய்வங்களை வழிபடுவதில்லை. இதற்கு ஒரே விதிவிலக்கு கண்ணகி வழிபாடேயாகும்.
தமிழர்கள் வாழும் ஈழநாட்டுப் பகுதியில் கண்ணகியம்மன் கோவில்கள் ஏராளமாக உள்ளன. மட்டக் களப்புப் பகுதியில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் கண்ணகி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் கண்ணகிக்குத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தீ மிதித்தல் நிகழ்ச்சியும் உண்டு.
"கண்ணகி வழக்குரைத்தல்'' என்ற கிராமிய நடன நிகழ்ச்சிகளும் திருவிழாக் காலங்களில் நடத்தப்படுகின்றன. கண்ணகி பற்றிய பல்வேறு நாடோடிப் பாடல்களும், கதைகளும் இலங்கையில் இன்னமும் பாடப்படுகின்றன.
இலங்கையில் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்ணகியின் செப்புப் படிவங்கள் பல கிடைத்துள்ளன. அவ்வாறு கிடைத்தவற்றுள் ஒரு செப்புச் சிலை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கண்ணகியின் சிலைதான் எனப் புகழ்பெற்ற தமிழாராய்ச்சி அறிஞரான டாக்டர். ஆனந்த கே. குமாரசாமி கூறியுள்ளார்.
தென் கிழக்காசியாவில் உள்ள பல நாடுகளில் தமிழர்கள் குடியேறிய போது அங்கும் கண்ணகி வழிபாடு பரவியது.
தமிழகத்தில் தற்போதுள்ள மாரியம்மன், செல்லியம்மன், எல்லையம்மன், துரெளபதியம்மன், காளியம்மன் ஆகிய வழிபாடுகள் உண்மையில் கண்ணகி வழிபாட்டின் காலத் திரிபுகளேயாகும். இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு மங்கலதேவி கோவில் என்றழைக்கப்படும் கண்ணகிக் கோட்டத்தின் வரலாற்றை நாம் அறிய வேண்டும். சிலப்பதிகாரம் காஞ்சிக் காண்டம்
வரந்தரு காதையில் "மங்கலமடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பில்'' (வரி. 53:54) என்ற குறிப்பு உள்ளது.
மேலும் அதே வரந்தரு காதையில் பிறிதொரு இடத்தில்,
"மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்' அங்குறை மறையோனாகத் தோன்றி'' (வரி - 88:89) என்ற குறிப்புக் காணப்படுகிறது.
இவ்வாறு "மங்கல மடந்தை' என்பதற்குப் பொருள் "மங்கலா தேவி'' என டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் இதற்கு அடிக் குறிப்பு எழுதும் போது மங்கலாதேவி என்பது கண்ணகியைக் குறிப்பதாகும் எனத் தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
அநீதியின் காரணமாக மங்கல நாணை (தாலியை) இழந்து, பின் தெய்வத்தின் அருளால் அதனை மீண்டும் பெற்ற இடத்தில் கண்ணகி "மங்கலா தேவி'' என அழைக்கப்படுகிறாள்.
கண்ணகியைத் தவிர வேறு எந்தப் பெண் தெய்வத்தையும் மங்கலா தேவி என்று அழைப்பது இல்லை. மங்கலாதேவி என்பது கண்ணகியை மட்டுமே குறிக்கும் சொல்லாகும்.
எனவே மங்கலாதேவி கோயில் என அழைக்கப்படும் கோயில் கண்ணகியின் கோயில் தான்.
சான்றுகள்
மதுரை மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தெற்கு எல்லையில் தமிழ் நாட்டிற்குள் அமைந்திருக்கும் மங்கல தேவி கண்ணகி கோவில் என அழைக்கப்படும் கண்ணகிக் கோட்டம் உண்மையில் தமிழகத்திற்குச் சொந்தமானது. தமிழக எல்லைக்குள் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் 4.380 அடி உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்திருக்கும் நிலப் பகுதி தமிழகத்திற்குள் படிப்படியாக சரிந்து சமவெளியாகிறது. இம் மலையின் மறுபுறம் கேரள மாநிலத்தில் செங்குத்தாக அமைந்து பள்ளத்தாக்காக உள்ளது. எனவே, இக் கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதி கேரள மாநிலத்தின் பகுதியாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது.
சேரன் செங்குட்டுவனால் இக்கோவில் கட்டப்பட்டது முதல் இராசராசசோழன், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் காலங்களில் சீரமைக்கப்பட்டு பல்வேறு மானியங்களும் நிவந்தங்களும் அவர்களால் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினர் இக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து இது தமிழகத்திற்குத்தான் சொந்தம் என்பதற்குப் பல ஆதாரங்கள் தந்திருக்கிறார்கள். இக்கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுக்கள் மிக முக்கியமானதாகும். முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் இன்னமும் இக்கோவிலில் உள்ளன.
இக்கல்வெட்டுக்களில் மாசாத்துவான் என்ற சொற்றொடர் காணப்படுகிறது. இது கோவலனின் குடும்பப் பெயராகும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் வாஞ்சிக் காண்டத்தில் "வரந் தரும் காதையில்' இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலக்கிய வரலாற்றுச் சான்றுகளோடு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு அதிகாரிகளின் அலுவலகக் குறிப்புச் சான்றுகள் மூலமாகவும் இக்கோவில் தமிழகத்திற்குத்தான் சொந்தம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.
1893-1896ஆம் ஆண்டுகளுக்கான நில அளவை ஆவணங்கள் இக் கோவில் தமிழகத்திற்குள்ளேயே அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. 1893ம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம் 1916ம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம் ஆகியன இக்கோவில் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
1952, 1957 மற்றும் 1959ம் ஆண்டுகளில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட வரைபடங்களும் இக்கோவில் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருப்பதைக் காட்டுகின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக 15-11-1883ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புனித ஜார்ஜ் கெசட் 719-721ம் பக்கங்களில் பிரசுரமான வெளியீட்டுப் பிரிவு 25-ல் "வண்ணாத்திப் பாறை ஒதுக்கப்பட்ட காடுகள்'' என இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் இக்காட்டிலுள்ள மங்கல தேவி கோவில் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.
1934ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள மதுரை மாவட்ட கெசட்டில் இக் கோவில் தமிழகத்திற்குள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பெரியகுளம் தாலுகா வண்ணாத்திப்பாறை ஒதுக்கப்பட்ட காட்டில் இக்கோவில் உள்ளது என்பதும், கூடலூர் கிராமவாசிகள் இக் கோவிலுக்கு வழிபடச் செல்வதற்காக 12 அடி அகலம் உள்ள வழித்தடம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவரமும் இக் கெசட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஆணை எண் 183 (பொது அரசியல்) தேதி 1-5-1918ம் சென்னை மற்றும் திருவாங்கூர் அரசுகள் இவ்விரு மாநிலங்களுக்கும் மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லை ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு ஏற்ப அமைந்ததை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் சேர அரசரான பூங்கையாத்துத் தம்பிரான் ரவிவர்மாவுக்கும் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவிற்கும் இடையே எல்லைப் போர் மூண்டது. கி.பி. 1772ஆம் ஆண்டு மூண்ட இப்போர் காட்டூர் என்ற அழைக்கப்படும் உத்தமபாளையத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதற்குப் பின்னால் உத்தமபாளையம் தாலுகா முழுவதுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தது எனச் சேரமன்னர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் சென்னை வருவாய்த்துறை இக்கோயில் அமைந்துள்ள பகுதியை இருமுறை சர்வே செய்து இக்கோவில் தமிழ்நாட்டைச் சேர்ந்ததுதான் என முடிவு செய்துள்ளது.
18-4-75ம் ஆண்டு தமிழக நிலஅளவை பதிவேடுகள் துறை இணை இயக்குநர் திரு. கணேசன் பி.ஏ., எம்.ஏ.எல்., கேரள மாநில நிலப் பதிவேடுகள் துறை தலைவருடன் கண்ணகி கோட்டத்திற்குச் சென்று தமிழக - கேரள எல்லைப் பகுதிகளைக் கூட்டு சர்வே செய்து கேரள எல்லையிலிருந்து 40 அடி தூரம் தமிழக எல்லை கடந்து கண்ணகி கோவில் அமைந்திருக்கிறது என அறிவித்தனர். கேரள நில அளவுப் பதிவேடுகள் துறையின் ஒப்புதலோடு தமிழக அரசுக்கு இது பற்றிய ஒரு அறிக்கையினை திரு. பி. கணேசன் சமர்ப்பித்துள்ளார்.
1976ஆம் ஆண்டில் திரு. சுகாதியா அவர்கள் தமிழக கவர்னராக இருந்தபோது இக்கோவில் பற்றி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு மத்திய அரசிடமிருந்து வந்த பதில் மத்திய கல்வெட்டு ஆராய்ச்சித் துறை டைரக்டருடன் இருமாநிலச் செயலாளர்களும் கூட்டாக இப்பிரச்சினையைப் பரிசீலனை செய்யலாம் என்று எழுதப்பட்டு அதையொட்டி அதற்குச் சற்று முன்பாக தமிழக சட்டமன்றத்தில் கண்ணகி கோவிலைச் சீர்திருத்தி அமைக்க வேண்டுமென்று அப்போது உறுப்பினராக இருந்த எஸ்.என்.கே.பி. கோபால் பேசினார். அதையொட்டி தமிழக நில வருவாய் வாரியத்தின் தலைவர் திரு. அனந்தபத்மநாபன் ஐ.ஏ.ஏ.எஸ்., மற்றும் மதுரை மாவட்ட கலெக்டராக அப்போது இருந்த திரு. யூ.எஸ். நடராசன் ஆகியோர் இக் கோயிலுக்குச் சென்று சர்வே செய்து இது தமிழக எல்லைக்குள்தான் உள்ளது என முடிவு செய்தார்கள். உலகத் தமிழ் மாநாட்டின் போது இந்தியப் பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் இக் கோவில் பற்றிக் கடிதம் எழுதினார். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில்சிங் இக் கடிதத்திற்கு எழுதிய பதிலில் கேரள அரசும் தமிழக அரசும் சேர்ந்து பேசி இக்கோவில் பற்றி முடிவு எடுக்க வேண்டுமென்று கூறினார்.
28-7-1981இல் மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் இக்கோவில் தமிழகத்திற்குத்தான் சொந்தம் என்பதற்குத் தகுந்த ஆதாரங்களையும், எல்லைப் படங்களையும் அனுப்பி இதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். 20-10-81 அன்று மத்திய உள்துறை அமைச்சர் நமது முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் இரு மாநில அரசுகளுமே மீண்டும் பேசி முடிவு செய்ய வேண்டுமென எழுதினார். கேரளாவில் அப்போது ஜனாதிபதி ஆட்சி அமுலில் இருந்தது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்தபின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளத் தமிழகத்திலிருந்து சென்ற யாத்திரீகர்களை கேரள அரசு கைது செய்தது. அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கம்பம் நடராசன் ஆகியோரை மரியாதையின்றி நடத்தினர். இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார், அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. 3-2-83ல் மத்திய உள்துறை அமைச்சருக்கு நமது முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் இக் கோவிலைப் புதுப்பித்து சில மாறுதல்களைச் செய்ய கேரளாவில் சிலர் முயற்சி செய்வதாகப் புகார் செய்திருந்தார். 11-3-83ல் மத்திய உள்துறை அமைச்சர் திரு. சேத்தி அவர்கள் கேரள முதலமைச்சருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதி அதன் நகலை தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பினார். இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கும் முறையில் இக்கோயிலுக்குள் எத்தகைய மாற்றங்களையும் செய்யக்கூடாதென வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் அதை ள்மீறி 15-3-83ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவியின் சிலையை கேரளவாசிகள் சிலர் பிரதிஷ்டை செய்துள்ளனர். இக்குழுவின் தலைவராக திரு. இ.சி. சுகுமாரன் என்பவரும், அவருக்குத் துணையாக குமுளி கிராம அதிகாரி மற்றும் பீர்மேடு தாசில்தார், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் துர்க்கா தேவி சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சரின் எச்சரிக்கையை மீறி இதை அவர்கள் செய்திருக்கிறார்கள். இக்கோயிலின் மீது உரிமை கொண்டாடுவதற்கு கேரளம் அத்துமீறிய காரியங்களை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. இக் கோவிலில் இருந்த கண்ணகி விக்ரகத்தை பல ஆண்டுகளுக்கு முன்னால் உடைத்து நொறுக்கி விட்டார்கள். அங்கு மீண்டும் கண்ணகி சிலையை வைப்பதற்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை. இப்போது அங்கு துர்க்கையின் சிலையை வைத்துவிட்டார்கள். கண்ணகி கோவில் என்று சொல்வதனால்தான் தமிழர்கள் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் துர்க்கை கோவில் என்று சொன்னால் பிரச்னை இருக்காது என எண்ணித் திட்டமிட்டுச் இதைச் செய்திருக்கிறார்கள், சட்டப்படி இது குற்றமாகும்.
மத்திய தொல்பொருள் துறை பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் புதிய சிலைகளை அமைப்பதற்கு அனுமதிப்பதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் இராஜராஜன் சிலையினை நிறுவ தொல்பொருள் துறை அனுமதிக்க மறுத்தது நினைவிருக்கலாம். ஆனால் வரலாற்றையே திரிக்கும் வகையில் இக்கோவிலில் துர்க்கை சிலையினை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வரலாறு, பழமை, பண்பாடு என மூன்று வகையான முக்கியத்துவம் பொருந்திய இக் கோவிலின் மீது கேரளம் அத்துமீறி உரிமை கொண்டாடுகிறது. கண்ணகி வழிபாடு என்பது தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பிரச்னை ஆகும். எனவே அவ்விஷயத்தில் கேரள அரசு பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தமிழர்கள் வழிபாட்டுக்காகச் செல்கிறார்கள். ஆனால் அதன்மீது ஒரு போதும் உரிமை கொண்டாடுவதில்லை. கொண்டாடவும் விரும்பவில்லை. தொல்காப்பியர் காலம் முதல் பாரதி காலம் வரை தமிழ்நாட்டின் வடக்கு எல்லையான திருவேங்கடமும் ஏழுமலையான் கோவிலும் இலக்கிய ஆதாரத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்தது.
அதே வேளையில் கண்ணகி கோவில் அமைந்திருக்கிற நிலப்பகுதி தமிழகத்திற்குள் இருந்தும் கேரளம் அதன்மீது உரிமை கொண்டாடுவது என்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. தமிழர்களின் உணர்வோடு விளையாடுகிற செயலாகும்.
நமது உரிமை
சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று பகைவரை வென்று பொற்கோட்டு இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டி, தமிழகம் கொண்டு வந்து அக்கல்லில் பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்குச் சிலையெடுத்து வழிபட்டான். அவன் எழுப்பிய கோவில்தான் இந்தக் கோவிலாகும்.
இக் கோவிலில் கண்ணகியின் தோழியான தேவந்தி பூசாரியாக இருந்து அப்பத்தினித் தெய்வத்தை நித்தம் வழிபட்டு வாழ்ந்தாள்.
இலங்கை கயவாகு மன்னன், தமிழ்நாட்டின் மூவேந்தர்கள், கொங்கு, குடநாட்டு மன்னர்கள், வடபுலத்தைச் சேர்ந்த கனகன், விஜயன் ஆகிய மன்னர்கள் வந்து வழிபட்ட கோவில் இந்தக் கோவில். சோழப் பேரரசன் இராசராசனும், பாண்டியப் பேரரசன் மாறவர்மன் குலசேகரனும், விஜயநகர மன்னர்களும் மானியங்களையும் நிவந்தங்களையும் வழங்கி வழிபட்ட கோவில் இந்தக் கோவிலாகும். இவற்றுக்கான கல்வெட்டுச் சான்றுகள் இக்கோவிலில் இன்னமும் உள்ளன.
வரலாற்று உண்மைகளாலும், கல்வெட்டுச் சான்றுகளாலும், இலக்கியச் சான்றுகளாலும், ஆங்கிலேய, இந்திய, தமிழக, கேரள அரசுகளின் சான்றுகளாலும் கண்ணகிக் கோட்டம் தமிழகத்தைச் சார்ந்ததே என்பது தெள்ளிதின் புலனாகும்.
இக் கோவிலின் மீது நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டியேயாக வேண்டும். இது தமிழர்களின் நீங்காத கடமையாகும்.
பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் கற்புத் தெய்வமாகக் கண்ணகி விளங்குகிறாள். தமிழர்களின் உணர்வோடு, மொழியோடு, பண்பாட்டோடு, வரலாற்றோடு இரண்டறக் கலந்துவிட்ட கற்புத் தெய்வம் கண்ணகிக்குப் பழந்தமிழர்கள் எழுப்பிய இக்கோவில் நமக்கே சொந்தம். அந்த உரிமையை நாம் ஒருபோதும் இழக்கச் சம்மதியோம்.
|