மோடியின் "ஊஞ்சல்' இராசதந்திரம் - - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014 14:38

சீன அதிபர் ஜீ-ஜின்பிங் வருகையும் அவருக்குத் தனது சொந்த மாநிலமான குஜராத்தில், தனது பிறந்த நாளில் மோடி அளித்த உற்சாகமான வரவேற்பும், ஊஞ்சலில் ஆடிய வண்ணம் அவர்கள் இருவரும் நடத்திய பேச்சும், சீனத் தலைவருக்கு மோடி வைத்த விருந்தில் இருபது வகையான குஜராத்தி உணவுகள் பரிமாறப்பட்டது குறித்தும் பக்கம் பக்கமாக செய்திகள் வெளிவந்தன.

காந்தியடிகள் வாழ்ந்த சமர்மதி ஆசிரமத்திற்கு சீனக் குடியரசுத் தலைவரை அழைத்துச் சென்று காந்தியடிகள் தொடர்பான அனைத்தையும் காட்டி, காந்தியடிகள் எழுதிய பல நூல்களையும் மற்றும் பகவத் கீதையையும் அவருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தார் மோடி.

ஆசிரமத்தில் உள்ள இராட்டையில் ஜின்பிங் நூல் நூற்றார். காந்தியடிகளின் படத்திற்கு கதர் மாலையை அணிவித்தார். மோடி அளித்த கதர் ஆடையை அணிந்தவண்ணம் ஜின்பிங் ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

12 முக்கிய உடன்பாடுகளில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்திய-சீன இராணுவ வீரர்களுக் கிடையே கூட்டுப்பயிற்சி நடத்துதல், கடற்படை, விமானப்படைகள் ஆகியவற்றுக்கிடையேயும் கூட்டுப் பயிற்சிகள் நடத்த இரு தலைவர்களும் முடிவுசெய்தது மிக முக்கியமானதாகும்.

காந்தியடிகளின் சிறப்பையும், அவர் வாழ்ந்த எளிய தியாக வாழ்வு குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சபர்மதி ஆசிரமம் வகித்த முக்கிய இடம் குறித்தும் சீனத் தலைவருக்கு ஆர்.எஸ்.எஸ். சேவகரான மோடி விளக்கிக்கூறியது நம்ப முடியாத உண்மையாகும்.

காந்தியடிகள் உலவிய ஆசிரமத்தில், அவரின் அடிச்சுவடுகளில் சுற்றித் திரிந்த இரு தலைவர்களும் கூட்டு இராணுவப் பயிற்சி நடத்துவது குறித்து உடன்பாடு செய்துகொண்டது மற்றொரு ஏற்கமுடியாத உண்மையாகும்.

காந்தியடிகள் வாழ்நாள் முழுவதிலும் போரை வெறுத்தவர். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஐரோப்பாவில் போர்க்களத்திற்குச் சென்று இரு தரப்பு படைகளுக்கு நடுவே நின்று சமாதானக் குரலை எழுப்ப வேண்டும் என விரும்பியவர். ஆனால், பிரிட்டிசு அரசு அவரை சிறையிலிருந்து விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

காந்தியநாடு சீனாவுடன் கூட்டுப் போர்ப் பயிற்சி செய்ய உடன்பாடு செய்துகொண்டது காலத்தின் விசித்திரக் கோலமாகும்.

சீனத் தலைவருடன் இந்தியப் பிரதமர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே நட்புறவு குறித்துப் பேசியபோது 1000த்திற்கும் மேற்பட்ட சீன இராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லையில் புகுந்தனர். இவ்விதம் செய்வது முதல் தடவையல்ல. 2014ஆம் ஆண்டில் 300க்கும் அதிகமான தடவைகளில் சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறது.

இந்திய மண்ணில் 48,000 சதுர கி.மீ. பரப்பளவை சட்டவிரோதமாக சீனா கைப்பற்றி வைத்திருப்பது குறித்தும், திபெத்தில் உற்பத்தியாகி 21 கி.மீ. மட்டுமே ஓடி இந்திய எல்லைக்குள் நுழைந்து அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு வளம் அளித்து வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகத்திலேயே உயரமான அணை ஒன்றை கட்ட சீனா வகுத்துள்ள திட்டம் நிறைவேறினால் மேற்கண்ட இரு மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது குறித்தும் சீனத் தலைவரிடம் மோடி பேசியதாகத் தெரியவில்லை.

இந்தியாவிற்கு வருவதற்கு முன் சீனத் தலைவர் ஜின்பிங் இலங்கைக்கும் மாலத்தீவிற்கும் சென்று அதன்பிறகே இந்தியாவிற்கு வந்திருக்கிறார். சீனாவின் அண்டையில் உள்ள மிகப்பெரிய நாடு இந்தியா. முறைப்படி இந்தியாவிற்கு வந்துவிட்டுப் பிறகு இலங்கைக்கும் மாலத்தீவிற்கும் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு சீனத் தலைவர் செய்யாததற்குப் பின்னணி உண்டு.

சீனத் தலைவர் ஜின்பிங் கொழும்பில் இலங்கை அதிபர் இராசபக்சேயுடன் பேச்சு நடத்தியபிறகு இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு விடுத்த எச்சரிக்கை மிகமிக முக்கியமானதாகும்.

"இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட எந்த நாட்டையும் சீனா அனுமதிக்காது. இலங்கை அதனுடைய தேசிய நலன்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழுமையான உரிமை உண்டு. அதற்கு சீனா உறுதுணையாக நிற்கும். தனது தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும், பிரதேச ஒருமைப்பட்டினையும் பாதுகாத்துக்கொள்ள இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவு அளிக்கும். இதற்கு எதிராக இலங்கையின் உள் விவகாரங்களில் ஏதாவது காரணத்தைக் கூறி தலையிட முயற்சி செய்யும் எந்த நாட்டையும் சீனா ஒருபோதும் அனுமதிக்காது''.

சீனாவின் இந்த எச்சரிக்கை யாருக்கு எதிரானது என்பது தெளிவானது. ஐ.நா. மனித உரிமை குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிய அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மட்டுமல்ல: இலங்கையின் இனப்பிரச்சினையில் எந்த விதத்திலும் இந்தியா தலையிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையும் இதுவாகும்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பழங் காலத்தில் வணிகம் நடந்தபோது அதற்கான தரைவழிப் பாதை "பட்டுப்பாதை' என அழைக்கப்பட்டது. சீனப் பட்டுகள் இந்தப் பாதை வழியாக இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்கப்பட்டன. இதை நினைவுப்படுத்திப் பேசிய சீன அதிபர் "21ஆம் நூற்றாண்டில் கடல் வழியான பட்டுப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. கடல் வழி, விமானப்பாதை, வணிகம், எரிசக்தி, அறிவியல் ஆக ஐந்து துறைகளில் முன்னேறுவதற்கு இலங்கை வகுத்துள்ள திட்டம், 21ஆம் நூற்றாண்டிற்கான கடல்வழிப் பட்டுப்பாதை அமைக்கும் சீனத் திட்டத்தோடு ஒத்துள்ளது'' என்றும் கூறியுள்ளார்.

இலங்கையுடன் சீனா 27 உடன்பாடுகள் செய்துள்ளது. அதில் முக்கியமானது பாதுகாப்புத் துறை பற்றியதாகும். "இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கிடையேயும் இராணுவங்களுக்கிடையேயும் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைப்பு நிகழும். இராணுவ வீரர்களுக்கான பயிற்சி, அதிகாரிகளுக்கான பயிற்சி, பாதுகாப்புத் துறை தொடர்பான அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் பரிமாற்றம் மற்றும் இராணுவ ரீதியான அனைத்து உதவிகளும் அளித்தல்'' ஆகியவை குறித்து இருநாடுகளுக்கிடையே உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பிரிவனைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று அபாயங்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. இந்த மூன்று அபாயங்களையும் அடியோடு ஒழித்துக்கட்ட இருநாடுகளும் இணைந்து பணியாற்றும். துறைமுக வளர்ச்சி, கடலோர தொழிற்பூங்காக்கள் ஆகியவற்றை அமைக்கவும், சர்வதேச கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும், 21வது நூற்றாண்டுக்கான கடல் வழி பட்டுப்பாதையை அமைக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

இந்துமாக் கடல் ஆதிக்கத்தை கைப்பற்ற சீனா வகுத்துள்ள திட்டமே கடல்வழிப் பட்டுப்பாதை அமைக்கும் திட்டமாகும். ஏற்கனவே இந்தோனேசியா, மியான்மார், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடற்தளங்களை சீனா அமைத்துள்ளது. இப்போது இலங்கையிலும் உறுதியாகக் கால் ஊன்றிவிட்டது.

சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு பொருளாதாரரீதியிலும், இராணுவ ரீதியிலும் சீனா அள்ளி அள்ளிக் கொடுப்பதற்கு என்ன காரணம்? சீனப் பொருட்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் சீனாவிற்கு எந்தப் பயனும் இல்லை. ஆனாலும் இலங்கையை தீவிரமாக ஆதரிப்பதற்கு ஆழமான நோக்கம் சீனாவிற்கு இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிரான ஒரு தளமாக எதிர்காலத்தில் இலங்கை தனக்குப் பயன்படும் என சீனா கருதுகிறது. மற்றொன்று இந்துமாக் கடல் ஆதிக்கத்தை கைப்பற்ற சீனா விரும்புகிறது. இந்த இரு காரணங்களுக்காக இலங்கையை சீனா தன் வசப்படுத்துவதில் வெற்றிபெற்றுவிட்டது.

எதிர்காலத்தில் இத்தகைய அபாயம் நேரிடும் என்பதை தொலைநோக்கோடு எண்ணிப் பார்த்த பெருமை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு மட்டுமே உண்டு.

இந்துமாக்கடல் பகுதியில் டிக்கோகார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டபோது அதை மிகக் கடுமையாக இந்திரா எதிர்த்தார். அதைப்போல 1980களில் திரிகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்க இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் இந்திரா அதைக் கடுமையாகக் கண்டித்து எச்சரிக்கை செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை.

1970ஆம் ஆண்டு செப்டம்பரில் அணிசாரா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மூன்றாவது மாநாட்டில் "இந்துமாக் கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக்கொண்டு இராணுவரீதியான தளங்களை அமைக்க முற்படும் வல்லரசுகள் இப்பகுதியில் உள்ள நாடுகளின் உணர்வை மதிக்க வேண்டும். இந்துமாக் கடல் பகுதி அமைதி சூழ்ந்த வட்டாரமாக திகழவேண்டும். மேலும் இப்பகுதி அணு ஆயுதமற்ற பகுதியாக விளங்க வேண்டும்'' என்ற தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார்.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஐ.நா.பேரவையில் இந்துமாக் கடல் பகுதியை அமைதி வட்டாரமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வைத்தார்.

"போர்க் கப்பல்களும் இராணுவ விமானங்களும் இந்துமாக்கடல் பகுதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் இறைமை, பிரதேச ஒற்றுமை, சுதந்திரம் ஆகியவற்றிற்கு எத்தகைய பாதிப்பும் ஒருபோதும் ஏற்படக்கூடாது. ஐ.நா. பட்டயம் வழங்கியுள்ள உரிமைகள் அத்தனையும் இந்நாடுகளுக்கு உண்டு'' என்றும் ஐ.நா. தீர்மானம் வலியுறுத்தியதற்கு இந்திராகாந்தியின் முயற்சியே காரணமாகும்.

தொலைநோக்குப் பார்வையுடன் இந்துமாக்கடல் பகுதி நாடுகள் அனைத்தையும் சூழவிருந்த பேரபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். இல்லையேல் வல்லரசுகளின் வேட்டைக்காடாக இந்நாடுகள் மாற்றப்பட்டுவிடும் என அவர் கருதினார். எனவேதான் அணிசேரா நாடுகளின் மாநாட்டிலும், ஐ.நா. பேரவையிலும் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார். ஆனால், எந்த அபாயம் இந்துமாக்கடல் நாடுகளுக்கு வரக்கூடாது என நினைத்தாரோ அந்த அபாயம் இந்தியாவிற்கே வந்துவிட்டது.

சீனாவும் - இலங்கையும் செய்துகொண்ட இராணுவரீதியான உடன்பாடும், கடல் வழியான பட்டுப்பாதைத் திட்டமும் இந்துமாக் கடல் பகுதி நாடுகளின் அமைதிக்கு எதிரானது. குறிப்பாக இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது. ஐ.நா. பேரவை 1971ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தைச் சிதறடிக்கக்கூடியது என்று கூறி அதற்கெதிராக ஐ.நா.வில் முறையிடவேண்டிய இந்தியா ஆமையாய், ஊமையாய் அடங்கிக்கிடக்கிறது.

இதன் விளைவாக அன்று இந்திரா எதிர்நோக்கிய அபாயம் இன்று இந்தியாவின் தென்வாயிலின் கதவைத் தட்டத் தொடங்கிவிட்டது.

சீனத் தலைவரிடம் இதுகுறித்து மோடி பேசியதாகவும் தெரியவில்லை. இந்துமாக்கடலின் ஆர்ப்பரிப்பான அலையோசையின் முன் ஊஞ்சலோசை அடங்கிவிட்டதா?

நன்றி : தினமணி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.