1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானியப் படைகள் பர்மாவிலிருந்து வெளியேறுவது என முடிவு செய்தன. பர்மிய அரசின் தலைவர் டாக்டர் பாமா ஏற்கெனவே ரங்கூனிலிருந்து வெளியேறிவிட்டார். ஏப்ரல் 20ஆம் நாள் பர்மாவில் இருந்து ஜப்பானிய இராணுவத் தளபதி ஜெனரல் ஹெயிட்டாரோ கிமுரா நேதாஜியைச் சந்தித்து தாய்லாந்து நோக்கிப் பின்வாங்குமாறு அவரிடம் கூறினார். சில மணி நேரங்கள் அவர் மன்றாடியும் கூட, நேதாஜி அதற்கு இணங்கவில்லை. ரங்கூனிலேயே தங்கியிருந்து பிரிட்டிஷ் படைகளுடன் போராட விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் இந்திய தேசிய இராணுவத்தின் போர்க்குழு கூடி, ரங்கூனிலிருந்து நேதாஜி போராடுவதைவிட அடுத்த கட்டப் போராட்டத்தை தாய்லாந்து அல்லது சீனா, சோவியத் நாடு ஆகிய நாடுகளில் ஏதாவதொன்றில் இருந்து தொடரவேண்டும் என்று தீர்மானித்தது. அதை அவரால் மீற முடியவில்லை.
பின்வாங்கிச் செல்லும்போது நேதாஜி, அடுத்தக் கட்டப் போராட்டத்தை எங்கிருந்து நடத்துவது என்பது பற்றித் தம்முடைய தளபதிகளுடன் விவாதித்தார். சீனா அல்லது சோவியத் நாடு ஏதாவது ஒன்றிலிருந்து போராட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
1945-ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் பாங்காக் நகரில் இருந்து வானொலி மூலம் பேசும்போது நேதாஜி பின்வருமாறு அறிவித்தார். "இந்த உலகப் போரில் ஜெர்மனி வீழ்ச்சியடையுமானால் அது சோவியத் நாட்டிற்கும் ஆங்கிலோ-அமெரிக்கர்களுக்கும் இடையே ஒரு மோதலை ஏற்படுத்தும் அறிகுறியாக விளங்கும். ஏற்கெனவே, முளைவிட்டுள்ள இம்மோதல் வரப்போகும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். சுதந்திர இந்திய அரசு சர்வதே நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்து அவற்றைத் தனது ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும். நமது வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கம் என்பது பிரிட்டனின் எதிரி இந்தியாவின் நண்பன் என்பதேயாகும்''. மார்ச் 25-ஆம் நாளன்று அவர் ஆற்றிய வானொலி உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். "ஐரோப்பிய நாடுகளின் தலைவிதிகளைத் தன் கரங்களுக்குள் வைத்திருக்கும் ஒரு மனிதர் ஐரோப்பாவில் உண்டு எனில் அவர் மார்ஷல் ஸ்டாலினே ஆவார். ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல உலகம் முழுமையும் சோவியத் நாடு எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்குமோ அதையே பின்பற்றும்.''
தப்பும் திட்டம் !
நேதாஜி அமைச்சரவையில் ஒருவரான தாஸ் பின்வருமாறு கூறினார் :
"இந்திய-சீன எல்லைப் புறப் பகுதிகள் அல்லது திபெத் வழியாக இந்தியாவிற்குள் இரகசியமாக நுழையும் திட்டம் பற்றி ஆராயுமாறு அவருக்கு நேதாஜி ஆணையிட்டிருந்ததாகவும், ஆகஸ்டு 16-ஆம் நாள் அன்று அத்திட்டம் பற்றி நேதாஜி கேட்டதாகவும்' இவர் சொல்லியிருக்கிறார்.
ஹனோய் சென்று வியட்நாமின் தலைவரான ஹோசிமின் அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி ஆனந்தமோகன் சகாயிடம் நேதாஜி கூறியிருக்கிறார். கோஸ்லா கமிஷன் முன் சகாய் அளித்த சாட்சியத்தில் "வியட்நாமின் புரட்சித் தலைவரான ஹோசிமின் மற்றும் அவரது தளபதிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி எனக்கு நேதாஜி ஆணையிட்டார். அவ்வாறு அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு எனக்குச் சில காலம் பிடித்தது. ஹோசிமின் மூலமாக சீனக் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளும்படியும் சீனாவில் உள்ள ஷாங்காய் மற்றும் பல நகரங்களில் இந்திய மையங்களை அமைக்கும்படியும் நேதாஜி கூறினார்'' என அவர் தெரிவித்தார்.
நேதாஜியின் ஆணைப்படி அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்ததா என நீதிபதி கோஸ்லா கேட்டபோது "ஆம். நான் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஹோசிமினைச் சந்தித்துச் சில ஏற்பாடுகளும் செய்தேன்'' என்று சகாய் பதில் கூறினார்.
சோவியத் நோக்கி
சோவியத் நாட்டிற்குத் தப்பிச் செல்ல நேதாஜி வகுத்திருந்த திட்டத்தை நிறைவேற்ற ஜப்பானிய அரசு தயங்கியது. அவ்வாறு செய்வது ஆங்கிலேய - அமெரிக்க அரசுகளின் கோபத்தைத் தூண்டிவிடக்கூடும் என ஜப்பானிய அரசு அஞ்சியது. பீல்டு-மார்ஷல் தெராச்சி தனது அரசின் கருத்தினை ஒதுக்கித் தள்ளினார். தமது உற்ற நண்பர் நேதாஜி சோவியத்-மஞ்சூரிய எல்லைப் பகுக்குத் தப்பிச்செல்ல எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். பர்மாவில் இருந்த ஜப்பானிய இராணுவத் தளபதியான ஜெனரல் சிதேயை மஞ்சூரியாவிற்கு ஜப்பானிய இராணுவத் தளபதியாக நியமித்தார். நேதாஜியை அழைத்துக்கொண்டு அங்குச் செல்லும்படி அவருக்கு ஆணையிட்டார். தளபதி சிதேயை அவர் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சர்வதேசச் சட்டங்களிலும் அவர் நிபுணராக விளங்கினார். எனவே, சோவியத் இராணுவத்திடம் ஜப்பானிய படைகள் சரணடையும் பிரச்சினை ஏற்பட்டால் சோவியத் நாட்டிற்குள் பத்திரமாக நேதாஜி பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவரே தகுந்தவர் என பீல்டு மார்ஷல் தெராச்சி கருதினார்.
ஹிரேன் முகர்ஜி மறுப்பு
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி எழுதிய "தகதக'க்கும் தங்க அம்பு' என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் புதிய பிரதமர் கோயிசோவிடம் தமது திட்டம் குறித்து நேதாஜி பேசினார். ஜப்பான்-சோவியத் உறவு அப்போது சீர்கெட்டு இருந்தது. அந்த உறவை சீர்படுத்த நேதாஜி முன்வந்தார்.
நேதாஜியின் இந்த உதவியை ஏற்க ஜப்பான் பிரதமர் தயங்கினார். சோவியத் நாட்டுடன் மேற்கு நாடுகள் கொண்டுள்ள நேச உறவு நிலையற்றது. எனவே, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குச் சோவியத் நாட்டின் உதவியையும் பெற அவர் எண்ணி இருக்கக்கூடும். ஒருவேளை ஜப்பான் தோல்வியடைந்தால். சோவியத் நாட்டில் அரசியல் தஞ்சம் புக அவர் திட்டமிட்டிருக்கக்கூடும்.
பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி இன்னொன்றையும் தமது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். போரில் ஜப்பான் முழுத் தோல்வி அடையுமானால் சோவியத்துக்கோ, சீனாவிற்கோ தாம் சென்று தமது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த அவர் திட்டம் தீட்டியிருக்கக்கூடும்.
சோவியத் நாட்டிற்குத் தப்பிச் செல்ல வேண்டும் என்று நேதாஜியும் அவரது அமைச்சர்களும் முடிவுக்கு வந்ததாகப் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
நேதாஜியை தப்பவைக்கும் திட்டத்தை நன்கு யோசித்து உருவாக்கியவர்களான ஹிக்கரி ஹிக்கன் தலைவரான லெப். ஜெனரல் ஐசோடா, பீல்ட் மார்ஷல் தெராச்சியின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த கர்னல் தாடா ஆகிய இருவரும் தெரிவித்த விவரங்களிலிருந்து கீழ்க்கண்ட உண்மைகள் நிரூபணமாகியுள்ளன.
நேதாஜியின் சம்மதத்துடன் ஜப்பானிய அரசு அவரைப் பத்திரமாக ரஷ்ய எல்லைவரை கொண்டுபோய்விட முடிவு செய்தது. மஞ்சூரியாவிற்கு ஜப்பானியத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் சிதே நேதாஜியை அழைத்துச் சென்று மஞ்சூரியாவில் ரஷ்ய எல்லை அருகே பத்திரமாக விட்டுவிடவேண்டும் என்று ஆணையிட்டது. இவ்வாறு நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பியவுடன் தைகோகூ விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக அறிவித்துவிடுவது என்றும் ஜப்பான் அரசு முடிவு செய்திருந்தது. ரஷ்யப் பகுதியை நேதாஜி அடையும்வரை இத்தகைய அறிவிப்பைத் தாமதிப்பது என்றும் அது முடிவு செய்திருந்தது. எனவேதான், ஆகஸ்டு 18ஆம் நாளே விமான விபத்து நடைபெற்றிருந்தும் 5 நாட்களுக்குப் பின்னர் அதாவது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ஆம் நாளன்று நேதாஜி மாண்டதாக ஜப்பானிய அரசு அறிவித்தது.
தனிச் செயலாளர் கருத்து
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தனிச்செயலாளராக பணியாற்றிய மேஜர் பாஸ்கரன் பின்வருமாறு கூறினார்:-
தைகோகூ விமான விபத்தில் நேதாஜி சாகவில்லை என்பது உறுதி. ஆனால் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நான் கருதவில்லை. குறிப்பிட்ட விமான விபத்திற்குப் பிறகு அவர் மாண்டு இருக்கலாம். ஆனால் எப்போது? எங்கே? எவ்விதம்? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. நேதாஜியில் உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி 5 அடி நீளம் மட்டுமே இருந்தது. ஆனால் நேதாஜியோ 6 அடி 1 அங்குலம் உயரம் உள்ளவர். எனவே இந்த சவப்பெட்டியில் இருந்த உடல் ஒரு ஜப்பானிய இராணுவ வீரரின் உடல் என்பது உறுதிப்பட்டுள்ளது. நேதாஜியின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜே.ஹெச்.திவி என்பவருக்கு 17-8-1945ஆம் ஆண்டு நேதாஜி எழுதிய கடிதத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த வாக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "விமானம் மூலம் தொலை தூர பயணத்தை மேற்கொள்ள உள்ள என்னை விபத்து எதுவும் எதிர்கொள்ளாது என்பதை யார் அறிவார்? என்று குறிப்பிட்டுள்ளார்.'' நடக்கப்போகும் விமான விபத்து பற்றிய செய்தியை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதற்கு இது சான்றாகும்.
மவுண்ட் பேட்டன் குறிப்பு
மெளண்ட் பேட்டன் நாட்குறிப்பில் இன்னொரு இரகசியச் செய்தி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது: "தென்கிழக்கு ஆசியாவைப் பிரிட்டிஷ் படைகள் மீண்டும் கைப்பற்றிய பிறகு ஜப்பானியர் வசம் இருந்த முக்கியமான இராணுவ ஆவணங்கள் எதையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதாவது சரணாகதி அடைவதற்கு முன்பாகவே தங்கள் வசம் இருந்த இராணுவ-அரசியல் ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிட்டார்கள். ஆனால் பாங்காக் நகரில் இருந்த ஹிக்கரி கிக்கன் அலுவலகத்தின் சில இரகசியச் செய்திகள் மட்டும் பிரிட்டிஷ் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. செய்கோனில் இருந்த இராணுவத் தலைமையகத்திலிருந்து இச்செய்திகள் அனுப்பப்பட்டன.
1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் நாள் சுபாஷ் போஸ் செய்கோனில் இருந்து புறப்பட்டதை ஒரு செய்தி கூறுகிறது. பாங்காக்கில் உள்ள இந்தியர்களுக்கு போஸின் வருகையைத் தெரிவிக்கும்படி ஹிக்கரி கிக்கன் செய்கோன் தலைமையகம் ஆணையிட்டது. ஆகஸ்டு 20ஆம் நாளிட்ட மற்றொரு செய்தி தைகோகூ விமான நிலயத்தில் போஸ் விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்த செய்தியையும் அவர் உடல் டோக்கியோவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட செய்தியையும் தெரிவிக்கிறது.போஸின் மரணம் பற்றிய செய்தியை இந்திய மக்களுக்கு தெரிவிக்கும்படி மூன்றாவது செய்தி கூறுகிறது.
"நேதாஜியின் உதவியாளர் கர்னல் ஹபிபூர் ரஹ்மான் விமான விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார் என்றும் அவர் உடல் நிலை பற்றியும் நான்காம் செய்தி விவரிக்கிறது.இந்த நான்கு இரகசியச் செய்திகளையும் பிரிட்டிஷ் இராணுவம் கைப்பற்றியது. உளவுத்துறை அதிகாரிகள் இவற்றை ஆராயந்து ஒரு அறிக்கையை மவுண்ட் பேட்டனுக்கு சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
"கீழ்க்கண்ட காரணங்களால் போலிசின் மரணச் செய்தி என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் செய்தி என்று அவர்கள் கருதினார்கள்.
1. பாங்காங், செய்கோன் ஆகிய இடங்களில் உள்ள சகல ஆவணங்களையும் அழித்துவிட்ட ஜப்பான் இந்த ஒரே ஒரு கோப்பை மட்டும் அதிலும் இந்த நான்கு முக்கியச் செய்திகளை உள்ளடக்கிய கோப்பினை அப்படியே விட்டுவைத்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. சுபாஷ் போஸின் பயணம் பற்றிய செய்திகளை முன்னதாகவே இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவித்திருப்பது அவருடைய மரணம் பற்றிய செய்திகளின் முன்னறிவிப்பு நடவடிக்கைகளுக்காகவே எனக் கருதப்பட வேண்டும்.
2. பார்மோசாவில் போஸ் இறந்தார் என்று ஜப்பான் முதலில் கூறியது. பிறகு ஜப்பானில் இறந்தார் என்று மறுபடியும் கூறியது. இந்த இரண்டு செய்திகளும் உண்மையாக இருக்க முடியாது.
அதிகாரிகள் இதுபற்றி மேலும் கூறுகையில் அனைத்து நிகழ்ச்சிகளும் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றன. போஸ் சென்ற விமானத்தில் அவருக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்று கூறப்பட்டது. போஸ் போன்ற மிக முக்கியமான தலைவர் தனி விமானம் ஒன்றில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமே தவிர இப்படிச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்க முடியாது.
போஸின் இறுதிச் சடங்குகளும் அதைப்பற்றிய விவரங்களும் மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன. டோக்கியோவுக்கு போஸ் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக இரகசியச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் போஸின் மரணச் செய்தியை ஒலிபரப்பிய டொமய் ஏஜன்சி போஸ் பார்மோசாவில் இறந்ததாகவும், அவருடைய உடல் அங்கேயே எரிக்கப்பட்டதாகவும் கூறியது.
ஆனால் போஸின் உதவியாளர் தைகோகூவில் அவர் இறந்ததாகவும் அங்கே அவர் உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த முரண்பாடுகள் ஐயத்தை உண்டாக்குகின்றன. போஸ் புறப்பட்டது நிச்சயமான செய்தியாகும். ஆனால் தைகோகூ. விமான விபத்து என்பது கட்டுக்கதையாகும். அங்கிருந்து போஸ் வேறு எங்காவது தப்பிச் சென்றிருக்க வேண்டும்.திகைப்பூட்டும் தகவல்கள் "உள்நாட்டிலிருந்து கிடைத்தள்ள இந்தத் தகவல்கள் எவ்வளவு திகைப்பூட்டுவனவோ அதைப் போலவே வெளிநாட்டுத் தகவல்களும் திகைப்பூட்டுகின்றன. 1947ஆம் ஆண்டு சனவரி 7-ஆம் நாள் வெளியான பிரவ்தா பத்திரிகை ரஷ்யாவில் போஸ் இருப்பதாகக் கூறப்படும் செய்தியை மிகக்கடுமையாக மறுத்தது.
டிசம்பர் மாதத்தில் வெளியான ஒரு செய்தியில் ஆப்கான் மாநில கவர்னராக இருந்த கோல்டு என்பவரிடம் காபூலில் இருந்த ரஷ்யத் தூதுவர், "மாஸ்கோவில் பல காங்கிரசு கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் போஸ் ஒருவர் ஆவார் என்று கூறினார்'' என ஒரு செய்தி கூறுகிறது.
ஈரானின் தலைநகரான டெக்ரானில் இருந்த ரஷ்யத் தூதுவர் ரஷ்யாவில் போஸ் இருப்பதாக கூறினார். மார்ச் மாதத்தில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வெளியான இச்செய்தியை பிரிட்டிஷ் உளவுத் துறை மிகத் தீவிரமாக விசாரித்தது. ஆனாலும் மாஸ்கோவில் நேதாஜி இருப்பதாகக் கூறப்பட்ட செய்தியை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
ஜப்பானிய உயர் இராணுவ அதிகாரிகள், இந்திய தேசிய இராணுவத் தளபதிகள், சுதந்திர இந்திய அரசின் அமைச்சர்கள் உள்பட பல முக்கியமானவர்களை பிரிட்டிஷ் இராணுவம் கைது செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரையும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் மிகக் கடுமையாக விசாரணை செய்தார்கள். இந்த விசாரணையில் ஒரு திடுக்கிடும் உண்மை வெளியானது மஞ்சூரியாவின் எல்லைக்கு அப்பால் ரஷ்யப் பகுதிகள் தப்பிச் செல்வதே நேதாஜியின் திட்டமாக இருந்தது என்பதே அந்த உண்மையாகும்.
காந்தியடிகளின் அந்தராத்மா
நேதாஜியின் மரணச் செய்தி குறித்து மகாத்மா காந்தி என்ன நினைக்கிறார் என்பது பற்றிப் பிரிட்டிஷ் அதிகாரிகள் வைசிராய் வேவல் பிரபுவிடம் அளித்த குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
"1946-ஆம் ஆண்டு மாதத் தொடக்கத்தில் காந்தியடிகள் பின்வருமாறு அறிவித்தார். "போஸ் உயிருடன் இருக்கிறார்''. எங்கோ மறைந்து கொண்டிருக்கிறார் என்று என்னுடைய அந்தராத்மா சொல்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். போஸ் உயிருடன் இருப்பது சம்பந்தமாக காந்தியடிகளுக்கு இரகசியச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றும் அதைத்தான் அவரது அந்தராத்மா கூறுவதாக காந்தியடிகள் கூறுவதாகவும் காங்கிரசுக்காரர்கள் கருதுகிறார்கள். தான் ரஷ்யாவில் இருப்பதாகவும், இந்தியாவுக்குத் தப்பிர வர விரும்புவதாகவும் போஸ் ஒரு கடிதத்தை நேருவுக்கு எழுதியிருப்பதாகவும் ஒரு இரகசியச் செய்தி கூறுகிறது.
போஸ் உயிருடன் இருப்பது பற்றி காந்தியடிகளும் சரத் சந்திரபோசும் நன்றாக அறிவார்கள். போஸிடமிருந்து ஒரு கடிதம் வந்த பிறகே போஸ் உயிருடன் இருப்பதாக காந்தியடிகள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதே ஜனவரி மாதத்தில் தன்னுடைய சகோதரர் உயிருடன் இருக்கிறார் எனத் தான் முழுமையாக நம்புவதாக சரத் சந்திர போஸ் தெரிவித்து இருக்கிறார்.
எல்லைப்புற மாநில காங்கிரஸின் தலைவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் போஸ் டிடியில் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். டி.டி. என்னும் சொற்கள் இரகசிய சங்கேதக் குறியீடாகக் கருதப்பட வேண்டும்.'
மகாத்மா காந்தி, மாளவியா போன்ற தலைவர்கள் அதை நம்பவில்லை. சுபாஷ் போஸின் குடும்பத்திற்கு மேற்கண்ட இரு தலைவர்களும் அனுப்பிய தந்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
"போசுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாகப் பிரார்த்தனை நடத்துங்கள்'' என்று அந்தத் தந்தியில் குறிப்பிட்டார்கள். மகாத்மா காந்தி இச்செய்தியை நம்பவில்லை என்பதோடு "நேதாஜி உயிருடன் இருப்பதாகத் தான் நம்புவதாகவும்' பகிரங்கமாக அறிவித்தார். 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டம்டம் சிறையில் இருந்தவர்களிடம் மகாத்மா பேசினார். அவர்களில் பெரும்பாலோர் நேதாஜியின் சகாக்கள். அவர்கள் நடுவே பேசும்போது மகாத்மா காந்தி பின்வருமாறு குறிப்பிட்டார். "நேதாஜி உயிருடன் இருப்பதாக நான் நம்புகிறேன்.
அவருடைய அஸ்தியை என்னிடம் யாராவது காட்டினால்கூட நான் அதை நம்பமாட்டேன்.மகாத்மா காந்தி இவ்வாறு பேசியபோது அக்கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவரான சமர்குகா இதை கோஸ்லா கமிஷன் முன்னால் கூறியிருக்கிறார். நேதாஜி பற்றி அவர் எழுதிய நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.
1946ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் மேற்கு வங்காளத்தில் உள்ள கண்டாய் என்ற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசும்போது "சுபாஷ் போஸ் இன்னும் உயிருடன் இருப்பதாகவே நான் நம்புகிறேன் அவர் எங்கோ மறைந்து கொண்டிருக்கிறார்'' என்று குறிப்பிட்டார். இந்திய தேசிய இராணுவத் தளபதிகளான ஷாநவாஸ்கான், செகால் ஆகிய இருவரும் செங்கோட்டையிலிருந்து விடுதலை ஆனவுடன் பம்பாய் சென்று காந்திஜியைச் சந்தித்தனர். 1945ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது காந்தியடிகள் அவர்களிடம் பின்வருமாறு கூறினார். "நீங்கள் என்னதான் மாறுபட்ட செய்திகளைச் சொன்னாலும் என்னுடைய அந்தராத்மா நேதாஜி உயிருடன் இருப்பதாகத்தான் இன்னமும் நம்புகிறது.'' 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் நாள் வெளியான "ஹரிஜன்' இதழில் காந்தியடிகள் பின்வருமாறு எழுதினார். "இந்திய தேசிய இராணுவத்தின் வசீகர சக்தி நம் மீது முழுமையாகப் படிந்துள்ளது. இந்திய தேசிய இராணுவமும் நேதாஜியின் பெயரும் இணைபிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. அவருடைய தேசபக்தி யாருக்கும் குறைந்ததல்ல. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவரின் தீரம் பளிச்சிட்டது.
இதற்குச் சிறிது காலத்திற்குப் பின்னர் வார்தாவில் கர்னல் ஹபியுர் ரஹ்மானைச் சந்தித்த பிறகு காந்திஜி ஒரு அறிக்கை வெளியிட்டார். "ஹபிபூர் ரஹ்மான் ஒரு இராணுவ வீரர் என்ற முறையில் என்னிடம் சிலவற்றைத் தெரிவித்துள்ளார். நேதாஜியைப் பற்றி ஹபிபூர் சொல்வதை நம்பும்படி இந்திய மக்களை வேண்டிக்கொள்கிறேன்.''
நேதாஜியின் மரணச் செய்தி பற்றிய விஷயத்தில் தான் நினைப்பதைக் காந்திஜி சொல்லாமல் ஹபிபூர் சொல்வதை நம்பும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.
கோப்பு எங்கே?
நேதாஜியின் மரணத்தைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் முன் பிரதமர் இந்திரா காந்தி அரசு தாக்கல் செய்த மனுவில் நேதாஜி பற்றிய செய்திகள் அடங்கிய பல ஆவணங்கள் காணாமல் போய்விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டது. இது சம்பந்தமாக ஆவணங்கள் அனைத்தும் ஜவஹர்லால் நேருவின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவரும் நேருவின் தனிச்செயலாளராகச் செயற்பட்டவருமான முகமது யூனூஸ் வசம் இருந்தன. இவர் நேருவின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். நேருவின் மறைவுக்குப் பிறகு திருமதி இந்திரா காந்தியாலும் அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தியாலும் பல முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்பட்டு பணிபுரிந்தவர் இவர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இவரின் புதல்வர் அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகனுடன் பிரதமர் ராஜீவ் காந்தி நேரிடையான பேச்சுவார்த்தை நடத்தி யூனூஸின் மகனை விடுவிக்க ஏற்பாடு செய்தார். அந்த அளவுக்கு இவருக்கு நேரு குடும்பத்தில் செல்வாக்கு இருந்தது. நேதாஜி சம்பந்தமான இரகசிய ஆவணங்களை இவர் மறைத்திருப்பதற்கு ஆழமான காரணங்கள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்கள் காணாமல் போனதாகச் சொல்லப்பட்டது வினோதமான ஒன்றாகும். இந்த கோப்புகள் நேதாஜி பற்றிய விசாரணைக் குழுக்கள் முன்னால் வைக்கப்பட்டிருந்தால் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவந்திருக்கும். ஆனால், இந்தக் கோப்புகளைப் பராமரித்துவந்த முகமது யூனூசை தன்முன் ஆஜராகும்படி கோஸ்லா கமிசன் ஆணையிடவில்லை. எத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்தக் கோப்பு காணால் போயிற்று அல்லது அழிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை அவரிடம் இருந்து அறிய விசாரணைக் கமிசன் தவறிவிட்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் நேதாஜியின் நெருங்கிய சகாவான எச்.வி.காமத் நேதாஜியின் மரணம் பற்றி விசாரிக்க வேண்டும என்ற கோரிக்கையை முதன் முதலாக எழுப்பினார். 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் நாள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துப் பிரதமர் நேரு பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். "இதுபோன்ற விஷயத்தில் திருப்திகரமான முறையில் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால் அது ஜப்பானிய அரசு மூலம்தான் செய்யப்பட வேண்டும்: ஏனென்றால் இது சம்பந்தமான நிகழ்ச்சிகள் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் நடந்துள்ளன. ஜப்பானிய அரசு மீது நாம் ஒரு விசாரணைக் குழுவை நிறுவ முடியாது. ஆனால் அவர்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தால் நாம் மகிழ்ச்சியுடன் நமது ஒத்துழைப்பை அளிக்க முடியும். இந்த நிகழ்ச்சி சம்பந்தமான சாட்சிகள் பெரும்பாலும் ஜப்பானிய அரசு அதிகாரிகளாகவோ அந்த அரசுடன் சம்பந்தப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். எனவே இவ்விஷயத்தில் ஜப்பானிய அரசுதான் முன் முயற்சி எடுக்க வேண்டும்.''
இந்திய அரசு விசாரணைக் கமிசன் அமைக்க மறுத்தவுடன் கல்கத்தாவில் உள்ள முக்கியமானவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அதிகாரப்பூர்வமான விசாரணைக் கமிசன் ஒன்றை அமைப்பது என முடிவு செய்தார்கள். உலகப் புகழ்பெற்ற நீதிபதியான டாக்டர் இராதா வினோத்பால் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதிகாரப்பூர்வமான விசாரணைக் குழு அமைக்கப்படும் செய்தியைக் கேட்ட பிரதமர் நேரு மிகுந்த பதட்டம் அடைந்தார். இம்முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமான விசாரணைக்குழு அமைக்கப்படும் என 1956ஆம் ஆண்டில் அவர் அவசர அவசரமாக அறிவித்தார். இத்தகைய விசாரணைக் குழு அமைப்பதற்கு முதலில் மறுத்த அவர் திடீர் என்று இவ்வாறு அறிவித்தது எல்லேராருக்கும் வியப்பை அளித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும். டாக்டர் இராதா வினோத்பால் அவர்களை இவ்விசாரணைக் கமிசனுக்குத் தலைவர் ஆக்கும்படி நாடெங்கும் கோரிக்கை எழுந்தது. யுத்தக் குற்றவாளிகள் விசாரணையில் நீதிபதியாக அவர் பணியாற்றியபோது அமெரிக்க-பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு மாறாக, அவர் தனது கருத்துக்களைத் துணிவாகத் தெரிவித்தார். இதன் மூலம் ஜப்பானிய அரசுத் தலைவர்கள் மற்றும் மக்கள் ஆகியோரின் பெருமதிப்புக்கு அவர் ஆளானார்.
நேதாஜி விசாரணைக் குழுவுக்கு அவரைத் தலைவராக நியமிப்பதன் மூலம் ஜப்பானிய அரசு மற்றும் மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்கும். போர்க்கால ஆவணங்களையும் அவரிடம் வழங்குவதற்கு ஜப்பானியர்கள் நம்பிக்கையுடன் முன்வருவார்கள் என்று அனைவரும் கருதினார்கள். ஆனால் பிரதமர் நேரு அவரை நியமிக்க மறுத்துவிட்டார்.
ஷாநவாஸ்கான் தலைமையில் மூவர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நேரு நியமித்தார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.என்.மொய்த்ரா, நேதாஜியின் சகோதரர் சுரேஷ் சந்திர போஸ் ஆகிய இருவரையும் அக்குழுவின் உறுப்பினராக நியமித்தார்.
சரத் சந்திரபோஸ் கருத்து
நேதாஜியின் மூத்த சகோதரரும் காங்கிரசு தலைவர்களில் ஒருவருமான சரத் சந்திரபோஸ் விமான விபத்தில் நேதாஜி மாண்டதாக கூறப்பட்ட செய்தியை ஒருபோதும் நம்பவில்லை. பல முறை அவர் தமது கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார். 1946ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான பிறகு சரத் சந்திரபோஸ் ஐரோப்பாவில் ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் செய்தார். நேதாஜியின் மனைவியான எமிலீயையும் மகள் அனிதாவையும் சந்திக்க அவர் சென்றார். தமது பயணத்தை முடித்துக்கொண்டு சூலை 22ஆம் நாள் பம்பாய் வந்து சேர்ந்த அவர் யுனைடெட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறினார்.
"நேதாஜி இன்னும் உயிருடன் இருப்பதாக நான் நம்புகிறேன். விமான விபத்தில் அவர் இறந்ததாகச் சொல்லப்படுவது கட்டுக்கதையாகும். அந்தச் சமயத்தில் ஜப்பானில் இருந்த சுவிஸ் பெண்மணி ஒருவரை நான் அண்மையில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. விமான விபத்துப் பற்றிய செய்தி கிடைத்ததும் அந்தப் பெண்மணி ஜப்பானில் உள்ள பல முக்கியமானவர்களுடன் தொடர்புகொண்டு அதைப்பற்றி தீவிரமாக விசாரித்தபோது அந்த விமான விபத்து ஒரு கட்டுக்கதை என்பது தெரியவந்ததாக அந்தப் பெண்மணி உறுதியாக நம்புகிறார். என்னுடைய நண்பரும் டோக்கியோவில் நடைபெற்ற யுத்தக் குற்றவாளிகள் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாகப் பணியாற்றியவருமான டாக்டர் இராதா வினோத்பால் என்னிடம் பின்வருமாறு கூறினார்:
"முக்கியமான அமெரிக்க, பிரிட்டன், ஜப்பான் செய்தியாளர்கள் பலரும் நேதாஜி விமான விபத்து பற்றிய செய்திகளை நம்பவில்லை என்று என்னிடம் கூறினார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். நேதாஜியின் கடைசி விமானப் பயணத்தின்போது அவருடன் இருந்த ஹபிபுர் ரஹ்மான் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுச் செங்கோட்டையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் விடுதலையானவுடன் கல்கத்தாவிற்குச் சென்று சரத் சந்திரபோஸ் அவர்களைச் சந்தித்தார். அவருடைய வீட்டிலேயே பல மாதங்கள் தங்கியிருந்தார்.
அப்போது அவரை இந்திய தேசிய இராணுவத்தின் பல்வேறு தளபதிகளும் மற்றவர்களும் சந்தித்துப் பேசினார்கள். எல்லோரிடமும் விமான விபத்தில் நேதாஜி மாண்ட செய்தி பற்றி அவர் கூறினார். ஆனால் தன்னை குறுக்குக் கேள்வி கேட்க அவர் யாரையும் அனுமதிக்கவில்லை.
நேதாஜியின் தனி மருத்துவர்களான டாக்டர் கர்னல் ராஜூ, டாக்டர் கஸ்லிவால் இருவரும் ஹபிபுர் ரஹ்மானை முழுமையாகச் சோதனை செய்தனர். "நேதாஜி சட்டை தீப்பற்றிக் கொண்டபோது தமது இரு கைகளைக்கொண்டு அதை அணைக்க முயற்சி செய்ததாக ஹபிபுர் ரஹ்மான் கூறியதைக் கேட்ட அவர்கள் "அப்படியானால் உங்களுடைய உள்ளங்கையில் எத்தகைய காயமும் இல்லாதது ஏன்?''என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு ஹபிபுர் ரஹ்மான் எந்தவிதப் பதிலும் கூறவில்லை.
நேதாஜியின் அரசாங்கத்தின் சட்ட அமைச்சராக இருந்த ஏ.எம்.சர்க்கார் ஹபிர் ரஹ்மானைச் சந்தித்துப் பேசிய பிறகு பார்வர்டு பிளாக் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் "ஹபிபுர் ரஹ்மான் மீதுள்ள தீக்காயங்களை நான் பரிசீலனை செய்தேன். எனக்குத் தெரிந்த மருத்துவ சட்ட அறிவினைக்கொண்டு ஆராய்ந்தபோது நான் சிரித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. நேதாஜி மரணம் பற்றி ரஹ்மான் கூறுவதை உறுதிப்படுத்த வேறு சாட்சிகளும் கிடையாது'' எனக் குறிப்பிட்டுள்ளார். ஹபிபுர் ரஹ்மான் கூறிய செய்தி பற்றிய தமது கருத்தைச் சரத் சந்திரபோஸ் தமது கடைசி காலத்தில் வெளியிட்டார்.
சரத் சந்திரபோஸ், தாம் இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் கல்கத்தாவில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "தி நேஷன்' என்னும் நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்தார். 1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் நாள் வெளியான இப்பேட்டியில் "நேதாஜி உயிருடன் இருக்கிறார் எனத் தாம் நம்புவதாக'' குறிப்பிட்டார். இப்பத்திரிக்கையின் சிறப்பு இதழில் மிகுந்த பரபரப்புடன் வெளியிடப்பட்ட இச்செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது. "மாசேதுங்கின் செஞ்சீனத்தில் நேதாஜி இன்னும் இருப்பதாக இந்திய அரசுக்குத் திட்டவட்டமாக தகவல் கிடைத்திருக்கிறது. பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகள் தைகோகூ விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்ட செய்தியை ஒருபோதும் நம்பவில்லை. எனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்டு கடைசியில் நான் கல்கத்தா திரும்பிய பிறகு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து சீனாவில் நேதாஜி இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. எனக்கு இவ்விதம் செய்தியைத் தெரிவித்தவர்கள் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது. நேதாஜி இப்போது எங்கு இருக்கிறார் என்பதையும் நான் சொல்ல முடியாது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல நேதாஜி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். எப்போதும் நம்பி வருகிறேன். விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்ததாகச் சொல்லப்பட்ட செய்தி வந்தபோது நான் சிறையில் இருந்தேன். இச்செய்தியைக் கேட்டு நான் மிகவும் கவலையில் ஆழ்ந்தேன். இச்செய்தி உண்மையானதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. 1945ஆம் ஆண்டில் தான் சிறையைவிட்டு வெளியே வந்தபோது கர்னல் ஹபிபுர் ரஹ்மானுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஏற்கெனவே சொன்ன கதையைத் திரும்பச் சொன்னாலும் என் மனதில் அவர் தமது தலைவனின் ஆணைக்கிணங்க இக்கதையைக் கூறுகிறார் என்றுதான் பட்டது. ஹபிபுர் ரஹ்மான் மிக உயர்ந்த மனிதர் என்ற எண்ணமும் என்னிடம் வலுப்பட்டது. விமான விபத்துப் பற்றிய செய்தியை நான் நம்பவில்லை. ஆனாலும் நம்முடைய தலைவர் மறைந்து இருக்கும் இடத்தைப் பற்றிய இரகசியத்தைக் காப்பாற்றவே ஹபிபுர் ரஹ்மான் இவ்வாறு கூறுகிறார் என்பது எனக்குத் தெரியலாயிற்று. நான் நேதாஜியின் சகோதரராக இருந்தாலும்கூட தன்னுடைய தலைவரின் ஆணையில்லாமல் அவர் எதுவும் கூறமாட்டார் என்பதும் எனக்குப் புரிந்தது. நேதாஜியின் திட்டம் என்ன என்பது ஹபிர் ரஹ்மானைத் தவிர வேறு யாருக்கும் தெரிய நியாயமில்லை. பாங்காக் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் அவரது நெருங்கிய சகா ஒருவரிடம் வடசீனா நோக்கித்தான் செல்லவிருப்பதாக நேதாஜி கூறினார் என்ற செய்தியும் எனக்குக் கிடைத்திருக்கிறது''.
தேவர்
1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நேதாஜியின் மூத்த சகோதரரான சரத் சந்திரபோசின் அவசர அழைப்பை ஏற்று தேவர் கல்கத்தா சென்றார். அதற்குப் பிறகு ஓராண்டு காலம் வரை அவரைப் பற்றிய எந்தச் செய்தியும் யாருக்கும் தெரியவில்லை. ஓராண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவின்போது 23-1-1951ல் அதே மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுஅனைவரையும் திடுக்கிட வைத்தார்.
"நேதாஜி சுபாஷ் போஸ் நலமாக இருக்கிறார். சீனாவில் திபேத் அருகேயுள்ள சிங்கியாங் என்னும் இடத்தில் அவரை நான் சந்தித்தேன். பிறகு கொரியப் போர் முனைக்குச் சென்று அங்கு நடைபெறுகிற போரை நேரில் பார்த்துவிட்டு உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன். கொரியாவில் அமெரிக்கப்படையை எதிர்த்துப் போராடுவது ஆசியச் சுதந்திர சேனையாகும். நேதாஜி அதற்கு தலைமை தாங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
சிறையில் மாண்டோர்
1995ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளன்று, பெங்களூரில் சமர்குகா "இந்து'' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்கள் வெளியிட்டார். "1945ஆம் ஆண்டு 18ஆம் நாள் நடைபெற்றதாகக் கூறப்படும் நேதாஜியின் விமான விபத்துப்பற்றிய உண்மையை அறிய அமெரிக்க இராணுவ உளவுக்குழு ஒன்றினை அமெரிக்க இராணுவ ஜெனரல் டக்ளஸ் மக்கார்தர் நியமித்தார். அந்தக்குழு கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில் இரகசிய அறிக்கையொன்றினைத் தயாரித்து அமெரிக்க அரசுக்கு மக்கார்தர் அனுப்பினார்.
மேலும் அமெரிக்க போர்முறைத் துறையினர் அளித்த ஆ:யவு அறிக்கையும் உள்ளது. அமெரிக்க அரசின் ஆவணக்களரியில் உள்ள இந்த இரு இரகசிய அறிக்கைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. அமெரிக்க அரசிடமிருந்து இந்த அறிக்கையைப் பெறுவதற்கு இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், தைவான் அரசுகள் வசம் உள்ள இரகசிய ஆவணங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் விளைவாக பல இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே நேதாஜி பற்றிய ஆவணங்களை நமது அரசு கேட்டால் கிடைக்கும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ரஷ்யாவில் நேதாஜி சிறைவைக்கப்பட்டிருக்கும் செய்தியை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் நன்றாக அறிவார்கள். நேதாஜி இந்தியா திரும்புவதை அவர்கள் விரும்பவில்லை. காங்கிரசுக் கட்சியும் நேரு அரசும் பிளவுபட்டுப் போகும் என அவர்கள் அஞ்சினார்கள்.
இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது 1945ஆம் ஆண்டில் வழக்குத் தொடுக்கப்பட்டபோது அவர்களுக்காக வாதாடிய நேரு 1946ஆம் ஆண்டீல் தளபதி மவுண்ட் பேட்டனின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சென்று திரும்பிய பிறகு அடியோடு மாறிப்போனார். பிரிட்டிஷ் அதிகாரிகளும் நேதாஜி பற்றிய முக்கியமான தகவல்களை அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லிக்குத் தெரிவித்திருந்தனர். இச்செய்திகளை பிரிட்டிஷ் அரசிடமிருந்து அறிவதற்கு இந்திய அரசு எத்தகைய முயற்சியும் செய்யவில்லை என்று கூறினார். ரஷ்யாவில் நேதாஜி சிறைவைக்கப்பட்டிருப்பது உண்மையானால் 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே. அவர் இன்னமும் உயிரோடு இரு:பபதாக நம்புகிறீர்களா? என "இந்து' நாளிதழின் செய்தியாளர் அவரிடம் கேட்டபோது "சோவியத் சிறையில் நேதாஜி மாண்டிருக்கலாம்'' எனக் கூறிய அவர் "ஹிட்லரைவிட ஜோசப் ஸ்டாலின் மிகக்கொடியவர்'' என்றார். நேதாஜி ஆய்வாளர் கருத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக தங்களிடம் எத்தகைய தகவல்களும் கிடையாது என ரஷ்யக் கூட்டாட்சி அரசு முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது ஆவணக்காப்பகத்தில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள இராணுவத் தகவல்களையும், கடிதங்களையும் ஆராய்ந்து பார்த்த பிறகே இந்தப் பதிலை தெரிவிப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. நேதாஜியின் இறுதி நாட்கள் பற்றி கடந்த 13 ஆண்டு காலத்திற்கு மேலாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் எஸ். ஜெயச்சந்திர சிங் என்பவருக்கு ரஷ்ய அரசு 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறது. 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி "அமிர்தபசார்' என்ற பத்திரிக்கையில் கீழ்க்கண்ட செய்தி வெளியாயிற்று. "பர்மாவில் முன்னாள் இந்தியத் தூதுவரும் நேதாஜியின் சகோதரர் மகனுமான அமியநாத் போஸ் "விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. சோவியத் நாட்டில் அவர் சர்வாதிகாரி ஸ்டாலினால் படுகொலை செய்யப்பட்டார். எனவே, சோவியத் நாட்டின் பாதுகாப்பில் இருந்தபோது நேதாஜிக்கு என்ன நேர்ந்தது என்பதை பற்றி முழுமையான உண்மைகளை சோவியத் அரசிடம் இருந்து பெறவேண்டும்'' என்று வற்புறுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜெயச்சந்திர சிங் தனது ஆய்வை மேற்கொண்டார். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான சித்தபாசு இவரது ஆராய்ச்சிக்கு ஊக்கமளித்து "ரஷ்ய பாதுகாப்புத்துறை, ரஷ்ய உளவுத்துறை ஆகியவற்றின் ஆவணங்களை தேடிப் பார்த்து நேதாஜி பற்றிய தகவல்களை சேகரிக்கும்படி'' கூறினார்.
நேதாஜி ரஷ்யாவில் இல்லை. ரஷ்ய தூதர் மறுப்பு
"1945ஆம் ஆண்டு உலகப்போரில் இறுதிக் கட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பழைய சோவியத் நாட்டிற்குள் நுழையவோ அல்லது அங்கு தங்கியிருக்கவோ செய்யவில்லை'' என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதுவரான அனடோமி எம். துருகேதலி திட்டவட்டமாகத் தெரிவித்தார். 22-2-97 அன்று டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியபோது "ரஷ்யாவில் உள்ள கூட்டாட்சி பாதுகாப்புத்துறையின் மத்திய ஆவணக் களஞ்சியத்திலும் நவீன வரலாற்று ஆவணங்களுக்கான ரஷ்ய மையத்திலும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னால் நாங்கள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம். 1945ஆம் ஆண்டிலோ அல்லது
அதற்குப் பிறகோ போஸ் ஒருபோதும் பழையசோவியத் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.'' இந்தியப் பத்திரிகையாளராக ஆஷிஸ் ரே என்பவர் இப்பிரச்சினை குறித்து ரஷ்ய அரசாங்கத்தை இந்திய அரசு அணுகியது என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார் இதை ரஷ்யத் தூதுவர் உறுதி செய்தார். நேதாஜி பற்றி இந்திய அரசாங்கத்தின் விசாரணைக்கு நேரடியான பதில் எதையும் ரஷ்ய அரசு தரவில்லை என்று ஆஷிஸ் ரே கூறியிருந்தார். நேதாஜி பிரச்சினையில் ரஷ்ய அரசு திட்டவட்டமான பதிலைக் கூறவேண்டும்'' என்றும் அவர் வற்புறுத்தியிருக்கிறார்.
1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி ரஷ்ய அரசுக்கு இந்திய அரசு நேதாஜி பிரச்சினை குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதே ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி ரஷ்ய அரசு எழுதிய கடிதத்தில் "நேதாஜி பழைய சோவியத் நாட்டுப் பகுதியில் தங்கி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை'' என்று பதில் அளித்தது. இந்த விவரங்களை ரஷ்ய தூதுவர் தனது பேட்டியின்போது வெளியிட்டார்.
நேதாஜி பற்றிய பிரச்சினைக்கு இவ்வளவு நாட்கள் கழித்து ரஷ்யா விளக்கம் கூறுவதற்கான காரணம் பற்றி பத்திரிக்கையாளர்கள் அவரைக் கேட்டனர். அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார். "ரஷ்யா தற்போது உள்ள வடிவத்திலும் நிலைமையிலும் முன்பு இல்லை. இப்போது நாங்கள் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.''
ஆசியக் கழகம்
கல்கத்தாவில் உள்ள ஆசியக் கழகம் நேதாஜியின் மறைவுபற்றிய உண்மைகளை எப்படியாவது கண்டறிவது என முடிவு செய்தது. மாஸ்கோவில் உள்ள சோவியத் உளவுத்துறையின் தலைமை நிலையத்தில் உள்ள பல கோப்புகளை பார்க்க வேண்டும் என்று அது விரும்பிற்று. சோவியத் நாட்டில் கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இந்த அலுவலகத்தில் இருந்த கோப்புகள் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு திறந்துவிடப்பட்டன. நேதாஜி பற்றிய உண்மையைக் கண்டறிவதில் இந்திய அரசாங்கத்திற்கு இனம் கூறமுடியாத ஒரு அச்சம் இருந்தது. கல்கத்தா பல்கலைக் கழகத்தில் உள்ள ரஷ்ய ஆய்வுத் துறையில் தலைவராக இருக்கும் வரலாற்று ஆசிரியரான ஹரி வாசுதேவன் தலைமையில் ஒரு குழுவினர் மாஸ்கோ சென்று பல மாதங்கள் அங்கு தங்கி ஆய்வு நடத்தினர். 1917ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் அண்டு வரையுள்ள அத்தனை ஆவணங்களையும் அவர்கள் பரிசோதனை செய்தபோது திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.
"மாஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத்துறையின் தலைமை நிலையத்தில் மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள இரண்டு கோப்புகளில் நேதாஜி பற்றிய உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
1945-47ஆம் ஆண்டுகளில் இருந்த சில ரஷ்ய ராஜதந்திரிகள் இந்த உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று பேராசிரியர் ஹரி வாசுதேவன் கூறினார். ஆனால் இந்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான வேண்டுகோள் கடிதம் இருந்தால் இந்த உண்மையைத் தரத் தயாராக இருப்பதாக ரஷ்ய அரசு கூறுகிறது. ஆசியக் கழகத்தின் சார்பில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டபிறகும் இந்திய வெளிநாட்டுத்துறை இப்படி ஒரு கடிதம் எழுதுவதற்குத் தயங்குகிறது. நேதாஜியைக் கண்டு அச்சம் அடைந்த பல தலைவர்கள் இப்போது உயிரோடு இல்லை.
இந்திய ரஷ்ய உறவுகளுக்கு ஊறுவிளைக்கக்கூடிய நிலையும் இப்போது இல்லை. ஆனாலும் இந்திய அரசின் தயக்கம் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகத் திகழ்கிறது. (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 21-1-1996).
ரஷ்யாவில் போஸ் இந்திய உளவுத்துறை இரகசியச் செய்தி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக பிரதமர் நேருவிலிருந்து பல பிரதமர்கள் அவரின் மறைவு குறித்த பல கோப்புகளை வெளியிட மறுத்தார்கள். கடந்த பொதுத் தேர்தலின்போது நேதாஜி பற்றிய பல இரகசியக் கோப்புகளை மன்மோகன் சிங் அரசு மறைப்பதாக பா.ஜ.க. பகிரங்கமாக குற்றம்சாட்டியது. அந்தக் கோப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என வற்புறுத்தியது.
ஆனால், இப்போது பா.ஜ.க. அரசும் அந்த இரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட மறுக்கிறது. கடந்த வாரம் அந்தக் கோப்புகளின் ஒரு பகுதியை மோடி அரசு வெளியிட்டது. அவற்றிலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பல உண்மைகளை கண்டறிந்துள்ளது. அவற்றை 7-12-14 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
"ஜப்பானிய அரசு நேதாஜி பற்றிய எத்தகைய ஆவணத்தையும் வெளிப்படுத்த முன்வரவில்லை. ஆனால் பிரிட்டிஷ் அரசு நேதாஜி உயிருடன் இருப்பதாகவும் ரஷ்யாவில் வாழ்ந்து வருவதாகவும் சந்தேகித்தது. உடனடியாக நேருவின் அரசு உளவுத்துறையைச் சேர்ந்த ஒற்றர்களை அனுப்பி விசாரணை நடத்தியது. பிரிட்டிஷ் உளவுத் துறையிடம் முன்னுக்குப்பின் முரணான பல இரகசிய தந்திச் செய்திகள் உள்ளன. இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்தவர் இலண்டனுக்குச் சென்று இந்தச் செய்திகளை பார்வையிட்ட பிறகு, போஸ் உயிருடன் இருக்கலாம் என கருதினார்.''
1897ஆம் ஆண்டு பிறந்த நேதாஜி உயிருடன் இருந்தால் இப்போது அவருக்கு வயது 117 ஆகும். எனவே அவர் தற்போது உயிருடன் இருக்க முடியாது. ஆனால், விமான விபத்து பொய்யானது என நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியானால் அவர் மரணம் எங்கு? எப்போது? நிகழ்ந்தது என்பது இன்னமும் நீங்காத மர்மமாக நீடிக்கிறது. ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான், சீனா, கொரியா மற்றும் இந்திய அரசின் கைவசம் உள்ள இரகசியக் கோப்புகள் பகிரங்கப்படுத்தப்பட்டால் அவர் மரணத்தைப் பற்றிய உண்மை வெளியாகும்.
(1998ஆம் ஆண்டு பழ. நெடுமாறன் எழுதிய "நேதாஜி எங்கே?' என்ற நூலிலிருந்து சில பகுதிகள்)
|