டில்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊழலுக்கு எதிராக மக்கள் அளித்தத் தீர்ப்பாகக் கருதவேண்டும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 11:59

டில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 67 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க. 3 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக்கூட பெற
முடியாமல் மக்களால் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும், அதனுடைய தலைவர் கெஜ்ரிவால் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்ட உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பா.ஜ.க. பிடித்தது., தலைநகரத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தீவிரப் பிரச்சாரம் செய்து:ம கூட மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது. டில்லி மாநகரம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் குடியேறியுள்ள மாநிலமாகும். இந்தப் பின்னணியில் பார்த்தால் அந்த மக்கள் அளித்துள்ள தீர்ப்பு இந்திய மக்களின் தீர்ப்பாகக் கருதப்படவேண்டும்.

ஊழலை ஒழிப்பதை முன்வைத்துக் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள பெரு வெற்றியை ஊழலுக்கு எதிராக மக்கள் அளித்தத் தீர்ப்பாகக் கருதவேண்டும். ஆம் ஆத்மி கட்சி பேரளவுக்கு அகில இந்தியக் கட்சியாக இருந்தாலும், உண்மையில் அது டில்லி மாநிலக் கட்சியே ஆகும். எனவே, எதிர்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் உண்மையில் போராடும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற உண்மையை டில்லி தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி உள்ளன.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.