ஈழத் தமிழரிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முன் வருக! ஐ.நா. கருத்தரங்கில் பூங்குழலி முழக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:53

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 28-ஆவது கூட்டம் நடைபெறுவதையொட்டி அதற்கு முன்னதாக "இலங்கையில் மனித உரிமையின் நிலைமை'' என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கனடா மானிடோபா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஞ்சன் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார்.

இலங்கை வடக்கு மாகாணக் குழு உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடக்கு வலிகாமம் ஊராட்சியின் தலைவர் சஜ்ஜீவன், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான பூங்குழலிநெடுமாறன், கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் இளமாறன், சுதன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Umamaran

இக்கூட்டத்தில் பூங்குழலிநெடுமாறன் பேசும்போது இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். இலங்கையிலிருந்து 20 கடல் மைல்கள் தொலைவில் தமிழ்நாடு அமைந்துள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும், இனரீதியான உணர்வின் அடிப்படையிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். ஏனெனில், அங்கு நடப்பதைப் பற்றி எங்களுக்கு மிக அதிகமான உண்மைகள் தெரியும்.

கடந்த 30 ஆண்டுக் காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒன்றுக்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுடன் நெருக்கமான உறவு பூண்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் துயரம், அவர்களின் வாழ்க்கை, வரலாறு, போராட்டம் ஆகியவை குறித்து நேரில் கேட்டறிந்திருக்கிறோம். அவர்களின் துன்பம் தோய்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரச்சுமை குறித்தும் பத்திரிகைகளின் வாயிலாக அல்ல, நேரிடையாக அவர்களிடமே கேட்டறிந்துள்ளோம். தன்மானத்துடன் கூடிய தன்னுரிமையைத் தங்கள் தாயகத்திற்கு பெறுவதற்காக அவர்கள் நடத்திய போராட்டம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களின் போராட்டம் என்பது சுதந்திரத்திற்கான போராட்டமே தவிர, அது பயங்கரவாதமல்ல என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

1981-ஆம் ஆண்டிலிருந்து ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக நடத்தும் போராட்டம் குறித்து தமிழ் நாட்டின் சகல பகுதி மக்களும் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறோம். 2007-ஆம் ஆண்டில் கடுமையான போர் மூண்டபோது தமிழக மக்கள் போர் நிறுத்தத்தைக் கோரி குரல் எழுப்பினோம். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், திரைப்படத் தொழிலைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், செய்தித் தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து அங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு இணைந்து போராடினார்கள். இந்தப் பிரச்சனையில் ஒவ்வொரு தமிழரும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள். எந்தெந்த வகையில் போராட முடியுமோ அந்தந்த வகையில் போராடினார்கள். போர் நிறுத்தத்தை உடனடியாக செய்யுமாறு வற்புறுத்தி தமிழக சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒருமனதாக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினர். ஆனால், எங்களின் குரலுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. சில மாதங்களில் ஒரு இலட்சத்திற்கு மேலான எங்கள் மக்களை நாங்கள் இழந்தோம்.

இந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னமும் மீளவில்லை. மாளாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறோம். இலங்கையில் உள்ள எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை நாங்கள் நினைக்கும்போது மொத்த உலகமும் எங்களை கைவிட்டதாகக் கருதுகிறோம். பண்பாடு, மொழி ஆகியவற்றால் ஒன்றுபட்ட எட்டுக் கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்ந்தும், 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற படுகொலைகளை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்தக் குற்ற உணர்வு எங்களை இன்னமும் வாட்டி வதைக்கிறது. நாங்கள் ஏதாவது செய்வதற்குத் துடிக்கிறோம். இன்னமும் அங்கு உயிரோடு உள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு அல்ல. மாறாக, அவர்களின் விடுதலைக்காக, தன்மானத்திற்காக, தன்மதிப்பிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம்.

அவ்வப்போது இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுவது வழக்கம். 80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், நடுவிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்போது இங்கே வந்தவர்கள் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு அமைத்துள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் பெரும்பாலோர் வாழ்கிறார்கள். சிலர் மட்டுமே முகாம்களுக்கு வெளியே தங்கள் சொந்த முயற்சியில் வாழ்கிறார்கள்.

2009-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகள் இதற்கு முன் வந்தவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்களில் பலர் போரில் படுகாயமடைந்து உடனடியான மருத்துவ சிகிச்சையை தேடிவந்தவர்கள். அவர்களில் பலரின் கை, கால் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. தங்கள் கணவர்களை இழந்தவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோரின் மனைவிகள் தங்கள் குழந்தைகளோடு தப்பிவந்தார்கள். இளைஞர்களும், இளம்பெண்களும் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட நிலைமையில் வந்தார்கள். தமிழ்நாட்டில் மக்கள் அவர்களை அரவணைத்துப் பாதுகாத்தார்கள்.

அவ்வாறு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் தமிழகப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடர்ந்தார்கள். இவ்வாறு வந்தவர்களுக்கு தமிழக மருத்துவர்கள் பலர் இலவச மருத்துவ உதவி செய்தார்கள்.

Uma-conf

மனிதநேய அடிப்படையில் தமிழக மக்கள் இத்தகைய உதவிகளை செய்ததோடு நிறுத்தவில்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்காக அரசியல் முனையில் தங்கள் குரலை உயர்த்திப் போராடினார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர்களுக்கு நீதி வழங்கவேண்டுமென இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் வற்புறுத்தும் வகையில் தமிழக மாணவர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதியன்று தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு அமைக்கவேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக முதலமைச்சர் இந்த தீர்மானத்தை முன்மொழிய அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரேமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இலங்கையிலும் மற்றும் உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடையேயும் அவர்களின் எதிர்காலம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. பாதுகாப்புக் குழு முன்வரவேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்றும் இத்தீர்மானம் வேண்டிக்கொண்டது.

இத் தீர்மானத்தையொட்டி பேசிய தமிழக முதல்வர், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகத் தமிழக மாணவர்கள் போராடுவதைப் பாராட்டினார். அதே நேரத்தில் தமிழக அரசே இப்பிரச்சினையை தனது கரத்தில் எடுத்துக் கொண்டதால் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தி வகுப்புகளுக்குத் திரும்புமாறு அவர் வேண்டிக்கொண்டார்.

இவற்றைத் தொடர்ந்து, எட்டுக்கோடி தமிழ் மக்களின் சார்பாக உங்கள் முன்னால் நின்று நான் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும்படி சர்வதேச சமுதாயத்தை வேண்டிக்கொள்கிறேன். மனித இனத்திற்கு எதிரான வகையில் போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் குறித்து விசாரணை நடத்துவதன் மூலம், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு, தன்மதிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய முடியாது. சமுதாய ரீதியிலும், உளவியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இவை போதுமானவையல்ல.

இங்கு கூடியுள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்கள் இந்த சூழ்நிலையை உணர்ந்து ஈழத் தமிழர்களின் இறையாண்மைக்கும், தன்னுரிமைக்கும் அங்கீகாரம் அளிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் மற்றும் இந்தியாவிலும் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களிடம் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழம் அமைப்பது குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வரும்படி சர்வதேச சமுதாயத்தை வற்புறுத்தி என் உரையை நிறைவு செய்கிறேன்.

திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 13:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.