தமிழ் இதழியல் குறித்து அதிகமாக ஆய்வுசெய்து புத்தகங்கள் எழுதியவர் ஆய்வாளர் பெ.சு.மணி. பாரதி ஆய்வாளராக அறியப்படும் தமிழ்க் கருவூலமான பெ.சு. மணிக்கு தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் வழங்குகிற "கலைஞர் பொற்கிழி விருது' இந்த ஆண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது.
பெ.சு.மணி என்கிற பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி, இலக்கிய முன்னோடியான வெ.சாமிநாத சர்மாவுடன் நெருங்கிப் பழகியவர். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். சென்னை விமான அஞ்சல் பிரிப்பகத்தில் அஞ்சல் பகுப்பாளராகப் பணிபுரிந்துகொண்டே பல முக்கிய ஆய்வுகளைச் செய்து ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது 82 வயதாகும் பெ.சு.மணி, தனது பணி ஓய்வுக்குப் பிறகும், ஆய்வுப்பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார். அவரைச் சந்தித்தோம்.
"இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுகளில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?''
"திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் நான் பிறந்த ஊர். அங்கு பள்ளியில் படிக்கும்போது, அந்தப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ராமசாமி என்பவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் எனக்கு நிறைய கம்யூனிஸ்ட் பிரசுரங்களைக் கொடுப்பார். "சிட்டகாங் வீரர்கள்' போன்ற புத்தகங்களைப் படித்தபோது, கம்யூனிஸ்ட் போராளிகளின் தியாகங்கள், வீரதீரச் செயல்கள், போர்க்குணம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் என்னை ஈர்த்தது. அதில் இருந்தே இலக்கியம், அரசியல் பக்கமாக வந்தேன்.''
"தமிழ் தேசியம் மீது உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது? ம.பொ.சி-யுடனான தொடர்பு எப்போது ஏற்பட்டது?
"என்னுடைய படிப்பு எஸ்.எஸ்.எல்.சி. வரையில்தான். அதன் பிறகு 1952-இல் சென்னைக்கு வந்து விட்டேன். அப்போதுதான் ம.பொ.சி.யின் பேச்சுக்களைக் கேட்க ஆரம்பித்தேன். சுதந்திர, சுயநிர்ணய, சோசலிச தமிழ் குடியரசு என்று ம.பொ.சி. முன்வைத்த முழக்கம் என்னை சிக்கென பிடித்துக் கொண்டது. ம.பொ.சி.யுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவருடைய தமிழரசுக் கழகத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தேன். அரசியயுைம், இலக்கியத்தையும் இணைத் துப் பார்க்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் ம.பொ.சி. "இலக்கியங் களில் இன உணர்ச்சி' "தமிழகத்தில் பிறமொழியினர்' என்ற ம.பொ.சி.யின் நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் போல. அதன் தாக்கத்தில் இருந்துதான் ஆய்வுப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.''
"திராவிடமா? தமிழ்த் தேசியமா? என்று இப்போது நடந்துகொண்டிருக்கும் சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
"இப்படியொரு விவாதம் நடப்பது நல்லது. ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியம் அல்லது தமிழர் தேசியம் ஆகியவற்றுக்கு எதிராகப் பேசுவது விரும்பத்தக்கது அல்ல. திராவிடம் என்ற சொல் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ இல்லை. திராவிடன் என்பதை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. அதை இங்கு மட்டும் ஏன் சுமக்க வேண்டும்?
இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழ்த் தேசியம் என்பதைத்தாண்டி, தமிழர் தேசியம் என்கிற ஒன்றை பழ.நெடுமாறன் முன்வைத்து வருகிறார். அது எனக்கு உடன்பாடான ஒன்று. தமிழ்த் தேசியம், தமிழர் தேசியம் ஆகிய இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. தமிழ் சார்பில்லாதவர்கள்கூட தமிழ் தேசியத்துக்குள் நுழைந்துவிடலாம். ஆனால் தமிழர்தேசியம் என்பது குறிப்பிட்ட இனத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதால், அங்கு அனைவரும் நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவு. தமிழர் தேசியம் என்பது தமிழ்த் தேசியத்துக்கான வளர்ச்சியின் அடுத்த கட்டம். தமிழ்த் தேசியத்தின் இன்னொரு வளர்ச்சி, இன்னொரு தெளிவுதான் தமிழர் தேசியம்.''
"இப்போது எந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறீர்கள்?''
தலித்தியம், பெண்ணியம் ஆகிய இரண்டிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். தலித்தியம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளும் உரிமைகளும் இன்னும் கிடைக்கவில்லை. நிறைய கெளரவக் கொலைகள் நடக்கின்றன. அதில், தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கீழ்வெண்மணி சம்பவம் எவ்வளவு கொடூரமானது. 44 மனித உயிர்களை குடிசைக்குள் போட்டு கொளுத்தினார்களே! அதன் பிறகு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்க வேண்டாமா? ஏன் ஏற்படவில்லை? அதை ஏன் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றவில்லை? தர்மபுரி வன்முறைச் சம்பவம் ஏன் இந்தச் சமூகத்தை உலுக்கவில்லை? இந்தக் கேள்விகளை ஆதங்கத்துடன் கேட்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் ரீதியான பலம் கிடைத்தால்தான், முன்னேற்றம் ஏற்படும். ஆனால், தலித், அரசியல் இயக்கங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. உள்ஒதுக்கீடு கூடாது என்ற பிரச்னை எல்லாம் வருகிறது. இது தலித் இயக்கத்துக்கு மிகப்பெரிய சாபக்கேடு, இங்கு தலித் இயக்கங்களுக்கு வலிமையான பொதுத் தலைமை வரவேண்டும்.'
நன்றி : ஜூனியர் விகடன் 5-4-15
|