"தமிழக மீனவர்கள் தங்கம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை கடத்துகின்றனர். எல்லை தாண்டிச் சென்று பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். இலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது.
இந்திய எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பது தவறானது. எனவே தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தியக் கடலோரக் காவல்படை ஏற்க முடியாது.'' மேற்கண்டவாறு மத்தியக் கடலோரக் காவல்படைத் துணை இயக்குநர் - ஜெனரல் கே.ஆர்.நாட்டியால் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் எஸ்.ஆம்.ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும் முறையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வர்கள் அங்ககீனமாக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான அவர்களது படகுகளும், வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகி அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் முடிவில்லாத துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ, அவர்களைக் காப்பாற்றவோ முன்வராத இந்திய அரசின் கடலோரக் காவல்படை அவர்கள் மீது அவதூறு சேற்றை வாரி வீசுகிறது.
சிங்களக் கடற்படையோ அல்லது சிங்கள அரசோ கூட தமிழக மீனவர்கள் மீது கூறாத குற்றச்சாட்டுக்களை கடலோரக் காவல்படையின் அதிகாரி கூறியுள்ளார். தமிழகக் கடற்கரை நெடுகிலும் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரையோரமாக கடலோரக் காவல்படையின் தீவிரமான கண்காணிப்பு உள்ளது. அதைத் தாண்டி இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு உள்ளது. இந்த மூவகை கண்காணிப்புகளை மீறி தமிழக மீனவர்கள் தங்கம் மற்றும் போதைப் பொருட்களை கடத்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கானப் பொறுப்பை மேலே கண்ட மூவகை அமைப்புகளின் அதிகாரிகள் ஏற்கவேண்டும். இவர்களை மீறி கடத்தல் நடக்கிறது என்று சொன்னால் கண்காணிப்பு வேலையை இவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதுதான் உண்மையாகும். அதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சிங்களக் கடற்படையால் கொலைசெய்யப்பட்ட 600க்கும் மேற்பட்டத் தமிழக மீனவர்கள் அனைவருமே கடத்தல்காரர்களா? உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடத்தல்காரர்களா? தமிழக மீனவர்களில் பெரும்பாலோர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களா? என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. தன்மானம் உள்ள எந்தத் தமிழனும் இவற்றை ஒருபோதும் ஏற்கமாட்டான். இது தமிழினத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும்.
சிங்களக் கடற்படை எல்லைத் தாண்டி ஒருபோதும் வரவில்லை என கூசாமல் ஒரு பெரும் பொய்யை இந்த அதிகாரி கூறியுள்ளார். கடந்த காலத்தில் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மட்டுமல்ல. நமது நாட்டிற்குள்ளேயே புகுந்து சிங்களக் கடற்படை இருவரை சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியை யாரும் மறந்துவிட முடியாது.
6-10-1998 அன்று தனுக்கோடியில் உள்ள ஓலைக்குடா என்ற மீனவர் கிராமத்தில் சிங்களக் கடற்படையினர் வந்து இறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். அங்குள்ள பனைமரத்தில் குண்டுகள் பாய்ந்த வடுக்கள் இன்னமும் உள்ளன. அதுமட்டுமல்ல, மீனவர்கள் குடிசைகளையும், படகுகளையும் கொளுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்ற நிகழ்ச்சியை அப்போது வெளிவந்த அத்தனை பத்திரிகைகளும் பரபரப்பாக வெளியிட்டுள்ளன.
இலங்கையின் நட்புறவை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கச்சத்தீவை பரிசாக இந்திய அரசு கொடுத்தது. 1974ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை-இந்திய உடன்பாட்டிற்கிணங்க கச்சத்தீவை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக அத்தீவைத் தாண்டிய கடற்பகுதியை இந்திய கடற்பகுதியாக அன்றையப் பிரதமர் பெற்றார் என்பதுதான் உண்மை. இந்த உடன்பாட்டின்படி கச்சத்தீவிற்கு செல்லவும் அங்குள்ள அந்தோணியார் கோவிலில் வழிபாடு செய்யவும் தமிழக மீனவர்களுக்கு எப்போதும் உரிமை உண்டு என இந்த உடன்பாடு கூறுகிறது. பாக் நீர்ச்சந்தியில் கச்சத்தீவுப் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தொன்று தொட்டு இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன்பிடிக்கும் உரிமை தொடரும் என்றும் இந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது.
இந்திய--இலங்கை 1974ஆம் ஆண்டு உடன்பாடு, 1976ஆம் ஆண்டு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் செய்துகொண்ட உடன்பாடு, அதையொட்டி இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் இலங்கையின் வெளியுறவுச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகிய அனைத்தும் பாக் நீர்ச் சந்தியை கச்சத்தீவுப் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு என்பதையும் இருநாடுகளின் மேலாண்மையில் கச்சத்தீவு வைக்கப்பட்டுள்ளதை என்பதையும் உணர்த்துகின்றன. எனவே தமிழக மீனவர்களைப் பாதுகாப்புக் கொடுக்கும் கடமையும் இலங்கை கடற்படையை கட்டுப்பாட்டில் வைக்கும் கடமையும் இந்தியக் கடலோர கடற்படைக்கு உண்டு. அதை அவர்கள் மறுப்பது கடமை தவறிய செயலாகும்.
இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களை தொடர்ந்து 32 ஆண்டுகாலமாக படுகொலை செய்கிறது. இதைத் தட்டிக்கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ இந்திய அரசு முன்வரவில்லை. இலங்கையைத் திருப்தி செய்வதற்காக, தமிழக மீனவர்கள் பலிகடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
கடலோரக் காவல்படையின் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக மீனவர்கள் மீது அடுக்கடுக்காகச் சாடிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சிங்களக் கடற்படைக்கு மேலும் ஊக்கமூட்டும். தமிழக மீனவர்களை வேட்டையாட தூண்டும். தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங் களில் 590 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 1000 கி.மீ. நீளமுள்ள இந்த நெடிய கடற்கரையில்
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக கடல் மட்டுமே திகழ்கிறது. இந்தியாவின் மீன் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 21% ஆகும். ஆனால் 32 ஆண்டு காலமாக இவர்கள் கடலில் தங்கள் தொழிலை செய்ய முடியவில்லை.
இவர்களை வேட்டையாடும் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவோ மீனவர்களைக் காப்பாற்றவோ இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல்படை எதுவும் செய்யவில்லை. ஒரு தடவைகூட சிங்களக் கடற்படையினரைச் சுட்டும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதில்லை.
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோமாலிலாந்து நாட்டின் கடற்பகுதியில் கடற்கொள்ளைக்காரர்களின் அட்டுழியத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இந்தியக் கடற்படை சென்று அவர்களை ஒடுக்கியுள்ளது. இது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளில் ஒருவர் பின்வருமாறு பெருமையடித்துக்கொண்டார்.
"நமது கடற்படை புதிய வடிவமெடுத்து ஆழ்கடல் கடற்படையாக மாறிவிட்டது'' என்றார்.
தொலைதூரத்தில் உள்ள சோமலிலாந்தில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடி ஒழித்துக்கட்டிய இந்தியக் கடற்படையால் சிங்கள கொலைகாரக் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையிலும் தமிழக மீனவர்கள் மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை கூறியும். கடலோரக் காவல்படையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு இந்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.
கடலோரக் காவல்படையின் உயர் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கு முன்பாக இந்திய அரசின் உயர் பதவியில் உள்ளவர்களை கலந்தாலோசித்த பிறகே மேற்கண்ட மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராசன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலர் எச். இராஜா ஆகியோருடன் தமிழக மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஏப்ரல் 29-ஆம் தேதி சந்தித்துப் பேசியபோது தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கப் போகக்கூடாது என அவர் கூறினார்.
இவரது கூற்றிலிருந்து உயர்நீதிமன்றத்தில் கடலோரக் காவல்படையினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இந்திய அரசின் ஒப்புதடலுனேயே செய்யப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதே நாளில் சென்னைக்கு வருகை தந்த இலங்கை அமைச்சர் சாமிநாதன், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி எங்கள் பகுதிக்குள் வந்தால் எங்கள் இராணுவம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எங்கள் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் சுடுவார்கள் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நிலைப்பாட்டின் விளைவாகத்தான் சென்னையிலேயே இலங்கை அமைச்சரால் இவ்வாறு கூறமுடிந்துள்ளது.
இலங்கையைத் திருப்திசெய்வதே இந்திய அரசின் கொள்கை அதற்காக ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் பலிகொடுக்கவும் இந்திய அரசு தயங்கப் போவதில்லை என்பது திரும்பத் திரும்ப உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது
-நன்றி தினமணி 01-05-2015
|