பழநிக்குமணன் - பத்திரிகைகள் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 14 மே 2015 17:53

மருத்துவ ஊழலை அம்பலப்படுத்தினோம்... விருது கிடைத்தது !

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு' என்று தமிழனை உச்சாணிக் கொம்பில் வைத்து கொண்டாடியவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம். அதை நிரூபித்திருக்கிறார் பழநிக் குமணன்.

பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதான "புலிட்சர்' விருது இந்த ஆண்டு முதன்முறையாக தமிழரான நெ.பழனி குமணனுக்கு வழங்கப்பட உள்ளது. அவர், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்னும் பத்திரிகையின் அங்கமான "டொவ் ஜோன்ஸ்' நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் பழநிக் குமண. இப்போது, குடும்பத்தினரோடு அமெரிக்கா நியூயார்க் நகரில் வசித்து வரும் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"தமிழ்நாட்டில் நான் பெற்ற அடிப்படைக் கல்விதான் இன்றைக்கு என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. இந்த ‘புலிட்சர்’ விருதானது என் தனிப்பட்ட ஒருவனுக்காக வழங்கப்படவில்லை. நான் சார்ந்திருக்கும் குழுவின் கூட்டு முயற்சியின் விளைவால் எங்களுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது' என்று தன்னடக்கமாகப் பேச ஆரம்பித்தார்.

"கடந்த ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் "மெடிக்கேர்' என்ற இன்ஷூரன்ஸ் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும் அதனால் பயனடைந்த அமெரிக்க மருத்துவர்களைப் பற்றியும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் அம்பலப்படுத்தியது. மேலும், அந்தந்த தகவல்கள் அனைத்தும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. அந்தப் பணியை எங்களுடைய குழு முன்னின்று செய்தது. அமெரிக்காவில் உள்ள சுமார் 8,80,000 மருத்துவச் சேவையை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு செலுத்திய தொகை மட்டுமே பல இலட்சம் கோடி ரூபாய்களை தாண்டும். எங்கள் குழு அந்தப் பட்டியலைப் பெற்று பல சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி இணையத்தில் இதற்கென பிரத்யேக வலைதளத்தை வடிவமைத்தது. இதன் சிறப்பம்சம், இணையதளத்துக்குள் வருபவர்கள் தாங்கள் சிகிச்சைப் பெற்ற மருத்துவரின் பெயரை டைப் செய்து தேடினால் போதும். அந்த மருத்துவர், தான் அளிக்கும் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்திடம் எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இப்படி அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் கிளினிக்குகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதற்காக எங்களுடைய குழுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்தத் தகவல்களைக் கேட்டிருந்தோம். இது வெளிவந்தால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆட்பட்டுவிடுவோம் என்பதை அமெரிக்க அரசாங்கமும் உணர்ந்திருந்ததால் பட்டியலை வெளியிடாமல் காலதாமதம் செய்தது. இறுதியாக, உச்சநீதிமன்றம் தலையிட, வேறுவழியின்றி 2011-2012 ஆண்டுக்கான பட்டியலை மட்டும் வெளியிட்டது. மறு நிமிடமே எல்லா ஊடகங்களும் இதுதொடர்பான செய்திகளை வெளியிட்டன. நாங்கள் இதை வேறு விதமாக பொதுமக்களுக்கு தர எண்ணினோம். அதன் முயற்சியாக பட்டியலில் யார் முதல் 20 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள் என தொகுத்து இணையதளத்தை உருவாக்கி மூன்றே நாட்களில் பதிவேற்றம் செய்தோம். அதனைத் தொடர்ந்து, முழு பட்டியல்களையும் "மெடிக்கேர் அன்மாஸ்க்டு' என்ற தலைப்பில் வெளியிட்டோம். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமானால், பெரும்பாலும் உங்கள் சொந்தப் பணத்தில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். ஆனால், அமெரிக்காவில் அப்படியில்லை. இங்கு எல்லோருக்கும் இன்ஷூரன்ஸ் உள்ளது. அவர்கள் எடுக்கும் இன்ஷூரன்ஸ் திட்டத்தைப் பொறுத்து அரசாங்கமே அந்த மருத்துவருக்கோ அல்லது கிளினிக்குக்கோ சிகிச்சைக்கான தொகையைச் செலுத்திவிடும். இந்தப் பட்டியல் வெளிவந்தவுடன் நாங்கள் கண்டுபிடித்த விஷயங்கள் - நோயாளிகளின் சாதாரண பிரச்சனைகளுக்குக்கூட உயர்ரக சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து அரசாங்கத்திடம் பணம் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிப்பணம்தான் மருத்துவர்களுக்கு வைப்புத்தொகையாக வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் யுகத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். சாஃப்ட்வேர்கள் மூலம் வேலைகளை எளிதாக்கிவிட முடியும். மிக முக்கியமாக, வேலைகளைச் சுலபமாகக் கண்காணிக்க முடியும். இதன்மூலம், ஊழல்களை எளிதாகக் கண்டறிந்து அதனை வெளிக்கொண்டுவர முடியும்.

நிறைய வேலைகளும் அதற்கேற்றார்போல் சவால்களும் காத்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவிருப்பதால் எங்கள் குழு அதற்காகத் தயாராகி வருகிறது.

வேட்பாளர்களின் செலவுக் கணக்கு விவரம் எங்களுக்குக் கிடைத்தவுடன் அதைத் தொகுத்து இணையத்தில் வெளியிடுவோம். மேலும் வேட்பாளர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடம் பெறும் நன்கொடை விவரங்களையும் சேகரித்து வெளியிடுவோம்'' என்று தாங்கள் தயாராகி வருவதையும் சென்னார்.

இந்தியாவுக்கும் குமணனின் சேவை தேவை.

- நா.இள. அறவாழி
நன்றி : ஜூனியர் விகடன் 6-5-15.

புலிட்சர் விருதுபெற்ற முதல் தமிழர்

2015ஆம் ஆண்டு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருதை அமெரிக்காவில் வசிக்கும் பழநிக்குமணன் பெற்றுள்ளார். இவர் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் செய்தியியல் மற்றும் இசையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் சார்பில் ஆண்டு தோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. மிக உயரியதாக கருதப்படும் இவ்விருது, புலனாய்வுக் கட்டுரைகள் மூலம் அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு திட்ட மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வால் ஸ்ட்ரீட் இதழின் வடிவமைப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 65 வயதுக்கு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக "மெடிகேர் ' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் நடைபெற்று வரும் பல கோடி ரூபாய் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக வால்ஸ்ட்ரீட் இதழ் "மெடிகேர் அன்மாஸ்க்டு என்ற பெயரில் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டது. அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த புலனாய்வுக் கட்டுரைகள், குற்றவியல் விசாரணைக்கும் அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் கைதுகளுக்கும் இட்டுச் சென்றது.

பத்திரிகைத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தினை சிறப்பான முறையில் பயன்படுத்தி இந்த புலனாய்வுப் பணியை வால் ஸ்ட்ரீட் இதழ் குழுவினர் செய்திருப்பதாக புலிட்சர் விருதுக்குழு பாராட்டி உள்ளது. புலிட்சர் விருதை, வால்ஸ்ட்ரீட் இதழின் கிராபிக்ஸ் குழுவில் இடம்பெற்றிருந்த மார்ட்டின் புர்ச், கிரிஸ் கேன்பி, மேட்லைன் பார்ஃப்மேன். ஜோன் கீகன், ஸ்டூவர்ட் தாம்சன் ஆகிய 5 பேருடன் பழநிக்குமணனும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

விருது பெற்ற பழநிக்குமணன் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது வால் ஸ்ட்ரீட் இதழின் வடிவமைப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். மெடிகேர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 8 இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவ சேவையாளர்கள் (மருத்துவர்கள் உள்பட) பெற்ற கட்டணங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையிலான மென்செயலியை இவர்தான் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்செயலி மூலம், ஆயிரக்கணக்கான மருத்துவ ஆவணங்களைப் பொதுமக்கள் எளிதாகப் பார்க்கவும், விபரங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.

இந்த விருது அறிவிப்பு குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள வால் ஸ்ட்ரீட் இதழின் ஆசிரியர் ஜெரார்ட் பேக்கர், "அமெரிக்க அரசாங்கம் மக்களிடமிருந்து எதை மறைக்க முயற்சி செய்ததோ, அவற்றையே இக்கட்டுரைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. பெரும் நிதி புழங்கும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் எப்படியெல்லாம் மோசடியாலும், வீண் விரயத்தாலும் பாழ்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை இந்த புலனாய்வுக் கட்டுரைகள் நன்கு உணர்த்துகின்றன' என்றார்.
1917 முதல், ஆண்டுதோறும் வழங்கப்படும் "புலிட்சர்' விருது அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் பெறுவது முதல் முறையல்ல. இதற்கு முன் 5 பேர் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விருதைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பழநிக்குமணன் பெறுகிறார்.

- ஆரூர் சலீம்,
-புதிய வாழ்வியல் 1-5-2015

பத்திரிகை என்பது படிக்க மட்டுமா? "புலிட்ஸர் வென்ற தமிழர்!'

நோபல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படுவது "புலிட்சர்' விருது!

அமெரிக்காவில் பத்திரிகைத் துறை, இலக்கியம், இசையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது இது.

இந்த ஆண்டின் பத்திரிகைத் துறைக்கான "புலிட்சர்' விருதுக்கு, "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையின் கிராபிக்ஸ் குழு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஒரு தமிழரும் இடம் பிடித்திருப்பது, ஆச்சரியமான சந்தோசம்!

அவர், அமெரிக்காவாசியான பழநிக்குமணன்.

"தமிழர் தேசிய இயக்க'த் தலைவர் பழ.நெடுமாறனின் மகன்தான் இந்த பழநிக்குமணன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

"வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை சமீபத்தில் "மெடிகேர் அன்மாஸ்க்ட்' என்ற பெயரில் புலனாய்வுக் கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அமெரிக்க மருத்துவத் துறைகளில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அமைந்தது இந்தக் கட்டுரைத் தொடர்.

கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கூட்டி, அதிகமான பேரைச் சென்று சேரவைக்க உதவியவை, கட்டுரைகளோடு வெளியான வரைபடங்கள். இந்த கிராபிக்ஸ், தகவல் தொகுப்புகளை வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் மென்பொருள் குழு உருவாக்கியது. அந்தக் குழுவில் முக்கிய இடம் வகித்தவர், பழநிக்குமணன். பத்திரிகைத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உதவியதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகத்தான் இந்த ஆண்டுக்கான "புலிட்சர்' விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் பழநிக்குமணனை வாழ்த்துக்களுடன் தொடர்புகொண்டோம்.. அலைபேசி வழியாக அவர் பேசியதில் இருந்து...
"ஒரு இந்தியனாக, தமிழனாக இந்த விருதைப் பகிர்ந்துகொள்வது ரொம்பப் பெருமையாக இருக்கு. நான் மதுரைக்காரன். பழங்காநத்தத்தில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில்தான் +2வரை படித்தேன். அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். அப்புறம் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தேன். தாத்தா, அம்மா, அப்பா மற்றும் என் சகோதரிதான் எனக்கு ரோல் மாடல்.

அப்பா பழ.நெடுமாறன் எப்போது பார்த்தாலும் வாசித்துக்கொண்டே இருப்பார். அந்தப் பழக்கம் அவரிடம் இருந்து எனக்கும் தொற்றிக்கொண்டது. பள்ளிப் பருவத்திலேயே, கம்ப்யூட்டர் துறையில் பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று இலட்சியம் உருவாகிவிட்டது. 1988ஆம் ஆண்டு எம்.சி.ஏ. முடித்துவிட்டு சென்னையிலும் பெங்களூருவிலும் பணிபுரிந்தேன். 1992ஆம் ஆண்டு அமெரிக்காவில் மென்பொருள் ஆராய்ச்சிப் பிரிவில் வேலை கிடைத்தது. பிறகு, "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வாய்ப்பு. இங்கு கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதோடு நின்றுவிடுவது இல்லை. தகவல் அறியும் சட்டத்தின் மூலம், மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்டங்கள், மானியங்கள் என பல்வேறு விஷயங்களை வெளிக்கொணரும் பணியையும் சேர்த்தே செய்கின்றன. அப்படி ஒரு கட்டுரைக்கான மென்பொருளுக்காகத்தான் இப்போது "புலிட்சர்' கிடைத்திருக்கிறது. எங்கள் குழு 31 நாட்கள் கடினமாக உழைத்து இந்த மென்பொருளை உருவாக்கியது''- மகிழ்ச்சியுடன் முடித்தார் பழநிக்குமணன்.

ஹேட்ஸ் ஆஃப் தமிழா!'

- "ஜன்னல்' மே 1-14, 2015
புலிட்சர் விருது பெற்ற குழுவில்

நம்ம ஊர்க்காரர்!

காய்ச்சல், வயிற்றுவலி என்றால் நாம் உடனே பக்கத்துத் தெருவில் உள்ள மருத்துவரிடம சென்று பார்க்க முடிகிறது. கேட்கும் ஃபீஸைக் கொடுத்துவிட்டு எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வர முடிகிறது.

ஆனால் அமெரிக்காவில் தலைவலி என்றால் கூட டாக்டரைப் பார்க்க முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். அப்படியே அனுமதி வாங்கினாலும், ஃபீஸ் எல்லாம் கொடுக்க முடியாது. மருத்துவக் காப்பீடு செய்திருந்தால்தான் அங்கே மருத்துவம் பார்ப்பார்கள். காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டுத்தான் மருத்துவம் பார்ப்பார்கள். அதற்கு மேலும் மருத்துவம் பார்க்கத் தேவையிருந்தால்... வேறு வழியில்லை. புதிய காப்பீடு செய்துதான் ஆக வேண்டும். ஏதோ வேலையில் இருப்பவர்கள், வசதியானவர்கள் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள முடியும். முதியவர்கள்... மாற்றுத் திறனாளிகளின் நிலை? அதற்காக அமெரிக்க அரசு கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தான் மெடிகேர்.

இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா?

இந்த மெடிகேர் காப்பீட்டுத் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை சமீபத்தில் வெளிக்கொண்டு வந்தது அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்'. இதில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டு இதற்காக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் சார்பில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விருதுக்குரியவர்களில் ஒருவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பழநிக்குமணன். பழ.நெடுமாறனின் மகன். அவரிடம் பேசியதிலிருந்து...

எந்தப் பணிக்காக புலிட்சர் விருது உங்கள் நாளிதழில் பணிபுரிபவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது?

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அமெரிக்க அரசு கொண்டுவந்த மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம்தான் மெடிகேர். முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மருத்துவர்கள், மருத்துவமனைகள் அரசு தரும் பணத்துக்கு உரிய மருத்துவ சேவையை நோயாளிகளுக்கு வழங்குகிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. தேவையில்லாத உடற் பரிசோதனைகளை எடுக்கச் சொல்வது, தேவையில்லாத மருத்துவம் செய்வது என மெடிகேர் இன்சூரன்ஸ் திட்டத்தின் பணத்தை முறைகேடாகப் பெறுவதில் மட்டுமே பல மருத்துவ நிறுவனங்கள், டாக்டர்கள் குறியாக இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே மெடிகேர் திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வோராண்டும் எவ்வளவு பணத்தை, எந்தெந்த மருத்துவ நிறுவனங்களுக்கு, மருத்துவர்களுக்குத் தந்தது என்ற விவரத்தை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று எங்களுடைய நாளிதழ் கேட்டது.
இதற்கு அரசு மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பல நீதிமன்றங்களைத் தாண்டி உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு 8,80,000 மருத்துவ நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு மெடிகேர் திட்டத்தின் கீழ் கொடுத்த பணத்தைப் பற்றிய விவரங்களை வெளியிட்டது.

ஆனால் அந்த விவரங்கள் வெறும் எண்களாகவே இருந்தன. எந்த மாநிலத்தில், எந்தப் பகுதியில், எந்த நகரத்தில், எந்த மருத்துவ நிறுவனம் அல்லது மருத்துவர், எந்த வகையான சிகிச்சைக்காக எவ்வளவு பணத்தைப் பெற்றார் என்பது போன்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு மருத்துவர் ஒரு நோயாளியிடம் மெடிகேர் திட்டத்தின் கீழ் பெற்ற பணத்தைப் பற்றி மட்டுமே தகவல் இருந்தது. அதே நோயாளியிடம் மெடிகேர் திட்டத்துக்கு அப்பால் மருத்துவம் செய்ததற்காகப் பெற்ற தொகை பற்றிய விவரங்கள் எதுவுமில்லை.

நான் இந்த நாளிதழில் கிராபிக்ஸ் குழுவில் இருப்பதால், இந்த 8,80,000 மருத்துவ நிறுவனங்கள், மருத்துவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய மருத்துவத் தகவல் தொகுப்பு மென்பொருளை உருவாக்கினேன். இது தொடர்பான கட்டுரைகளையும் எங்கள் நாளிதழ் வெளியிட்டது.

அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரு நோய்க்காக மருத்துவம் பார்க்கச் செல்வதற்கு முன்பு, எங்கள் இணையதளத்துக்கு வந்து மருத்துவர் அல்லது மருத்துவ நிறுவனத்தின் பெயர், எந்தப் பகுதி, எந்த ஊர், எந்த நோய்க்கு சிறப்பு மருத்துவர் என்பன போன்ற விவரங்களைத் தெரிவித்தால் அந்த மருத்துவ நிறுவனம் அல்லது மருத்துவர் பற்றிய எல்லாத் தகவல்களையும் தந்துவிடும். உண்மையிலேயே அந்த மருத்துவ நிறுவனம் அல்லது மருத்துவர் சிறப்பானவராக இருந்தால், அவரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால் அந்த மருத்துவ நிறுவனத்தை மருத்துவரைத் தவிர்த்துவிடலாம். எந்த மருத்துவ நிறுவனம், மருத்துவர் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த விழிப்புணர்வுச் சேவைக்காக எங்கள் நாளிதழில் பணிபுரியும் நான், மார்ட்டின் புர்ச், கிரிஸ் கேன்பி, மேட்லைன் ஃபார்ப்மேன், ஜோன் கீகன், ஸ்டூவர்ட் தாம்சன் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மருத்துவத் தகவல் மென்பொருளை நீங்கள் உருவாக்க என்ன படித்திருக்கிறீர்கள்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். மதுரை டிவிஎஸ் லzமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். படித்தேன். கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ.படித்தேன். அந்தக் கல்லூரியில் படிக்கும்போது எனது ஆசிரியர்களாக கிருஷ்ணா ரெட்டி, நடராசன், வெங்கடசுப்பிரமணியன், விஜயலட்சுமி பாய் ஆகியோர் இருந்தனர். அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றின் அடிப்படையில்தான் இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கும் திறமை எனக்கு ஏற்பட்டது என்பதை நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் இந்தப் பணியால் என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் செனட்டர் ஒருவர் தனக்கு வேண்டிய மருத்துவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கினார் என்பது தெரிய வந்துள்ளது.

மக்கள் சரியான மருத்துவ நிறுவனத்தை, மருத்துவரைத் தேர்வு செய்ய முடிகிறது.

முதலில் இதுபற்றிய தகவல்களைத் தரமுடியாது என்று மறுத்த அரசு, எங்களுடைய நாளிதழ் வழக்குத் தொடுத்ததால். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தகவல்களை வழங்க முன்வந்தது. எல்லாவற்றையும் விட மக்கள் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

"தினமணி' ஞாயிறு கொண்டாட்டம் 3-5-2015

அமெரிக்காவாழ் தமிழருக்கு-புலிட்சர் விருது!

புலனாய்வு இதழியல் பிரிவுக்கான இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது, "வால்ஸ்ட்ரீட்' இதழில் பணிபுரியும் கிராபிக்ஸ் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஒருவர் அமெரிக்கவாழ் தமிழர் பழநிக்குமணன். தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி செய்தி அளிப்பது குறித்து அவர்களது பணிக்காக இந்த விருது கிடைத்துளளது. தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான பழநிக்குமணன், தமிழர்தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன்.

-"புதிய தலைமுறை' 7-5-2015

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.