தமிழ்மொழி, வடமொழி கலப்பு ஏற்பட்ட போது வடமொழிப் பெயர்களை தமிழில் எழுத கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிரந்த எழுத்துக்கள் ஸ ஷ ñ ஜ ஹ என்ற ஐந்துமாகும்.
எந்த மொழியும் பிற மொழிச் சொற்களைத்தான் கடன்வாங்கவேண்டுமே தவிர எழுத்துக்களைக் கடன் வாங்குவது மொழியின் அழிவுக்கு அடித்தளம் அமைப்பதாகும். எனவேதான், தொல்காப்பியர் .
்வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” -எனக் கூறினார்.
வடஎழுத்துக்களை நீக்கி நம் எழுத்துக்களோடு இயைந்த சொற்களாக்கிக்கொள்ளவேண்டும் என்றுதான் அவர் கூறினார்.
தமிழில் வடமொழிச் சொற்கள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில் வடமொழியில் இருந்த ஆனால், தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட வரிவடிவம்தான் கிரந்த எழுத்துக்களாகும்.
தொல்காப்பியர் வகுத்த நெறியின்படியே சங்கப் புலவர்களி லிருந்து கம்பர் வரை இந்த கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழ் வடிவத்திலும், தமிழ் ஒலிப்படியும் பெயர்களை அமைத்தனர்.
கம்பர் காலம் வடமொழிக் கலப்பு மிகுந்த காலம். கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தொடங்கி தமிழகத்தில் வடமொழி ஆட்சி மொழியாக அரங்கேறியது. தொடர்ந்து இறுகிக்கொண்டே வந்து பிற்காலச் சோழர் காலத்தில் பெருகியது.
எடுத்துக்காட்டாக, சங்கக்காலச் சோழ மன்னர்களின் பெயர்கள் கரிகாலன், கிள்ளிவளவன், நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற தூயதமிழ்ப் பெயர்களாக அமைந்திருந்தன. ஆனால், பிற்காலச் சோழர்களின் பெயர்கள் விஜயாலயன், பராந்தகன், இராஜாதித்தன், கண்டராதித்தன், இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், குலோத்துங்கன் போன்ற வடமொழிப் பெயர்களாக விளங்கின.
பிற்காலச் சோழர் காலத்தில் வடமொழி ஒருபுறம் அரசு ஆதரவைப் பெற்றிருந்தாலும், மறுபுறத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சோழ மன்னர்கள் ஊக்கமும் ஆக்கமும் தந்தனர்.
வடமொழியின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலகட்டத்தில் தோன்றிய கம்பர், தூயதமிழில் இராமகாவியத்தைப் படைத்தார். வடக்கே உள்ள அயோத்தி நாட்டை வர்ணிக்கும்போது ்காவிரி நாடென்ன கழனி நாடு” என அவர் கூறுவதிலிருந்தே இது விளங்கும். அதுமட்டுமல்ல, வான்மீகத்தின் வழிநின்று இராமாவதாரத்தை கம்பர் மறுஉருவாக்கம் செய்கிறார். கம்பர் வடமொழியிலிருந்து வான்மீகத்தை மொழிபெயர்க்கவில்லை. மாறாக மொழியாக்கம் செய்கிறார். கம்பராமாயணத்தில் உள்ள 10,368 பாடல்களிலும் ஒரு இடத்தில் கூட கிரந்த எழுத்தைக் கம்பன் பயன்படுத்தவில்லை. தமிழ்ச் செய்யுளுக்கென வகுக்கப்பட்ட இலக்கணங்களை எந்தவொரு இடத்திலும் மீறாமல் வடசொல்லையும், திசைச்சொல்லையும் கம்பன் வியப்புறும் வகையில் தமிழ்ச் சொல்லாக்கியிருக்கிறார்.
இராமாயணப் பாத்திரப் பெயர்களைக் கம்பன் தமிழ்ப் படுத்தியிருக்கும் முறை எடுத்துக்காட்டானதாகும். தசரதன்-தயரதன், கெளசல்யா-கோசலை, ராமன்-இராமன், ஸீதா-சீதை, ஜானகி-சானகி, ஜனகன்-சனகன், லôமணன்-இலக்குவன், இந்திரஜித்-இந்திரசித்தன், மேகநாதன், அகஸ்தியர்-அகத்தியர், துர்வாஸர்-கசட்டுறுமுனி, வசிஷ்டர்-வசிட்டர், ருஷ்ய சிருங்கன்-கலைக்கோட்டுமுனி, அஹல்யா-அகலிகை, ஆதிசேஷன்-ஆதிசேடன், அனந்தன், ஜாம்பவான்-எண்கின்வேந்தன்-சாம்பன், ஊர்வஸி-உருப்பசி, அக்னி-எரிசுடர்க் கடவுள், வெங்கனல் கடவுள், கருடன்-கலுழன், குஹன்-குகன், கும்பகர்ணன்-கும்பகன்னன், ஜடாயு-சடாயு, ஜயந்திரன்-சயந்திரன், அம்பரிஷன்-அம்பரீடன், இñவாகு- இக்குவாகு, ஹிரண்யன்கசிபு-இரண்யகசிபு, ஹிரண்யன்-இரணியன், கனகன், பிரகஸ்பதி-பிரகற்பதி, தூம்ராட்ஷன்-புகைநிறக்கண்ணன், சுவாஷன்-ஆன்பெயர் கண்ணன், தூஷணன்-தூடணன், கவயாôன்- கவயாக்கன், பòராஜன்-பறவைக்கரசன், வஜ்ரதந்தன்- வச்சிரஎய்ற்றிவன், புண்டரிகாட்ஷன்-தாமரைக்கண்ணன், சோணி தாட்ஷன்-குருதியின்கண்ணன், பிரஹலாதன்-பிரகலாதன், மகாராட்ஷன்-மகரக்கண்ணன் மற்றும் எண்ணற்ற வடமொழிப் பெயர்களைத் தூய தமிழ்ப் பெயர்களாக்கியிருக்கிறார். விரிக்கின் பெருகும்.
வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணக் காப்பியத்தைத் தமிழாக்கம் செய்த கம்பர் அக்காப்பியத்தில் உள்ள வடமொழிப் பெயர்களைத் தமிழாக்கம் செய்தபோது கிரந்த எழுத்துக்கள் கலவாமல் மொழி மாற்றம் செய்திருப்பது சிறந்த முன்மாதிரி ஆகும். கம்பனைப் பின்பற்றி எழுதுவதே சிறப்பானது மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும் உதவும்.
நன்றி : தினமணி
|