சென்ற 02.08.15 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இரண்டாம் ஆண்டு கலைப்பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்கவிழா நடந்தது. முதலில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவிற்கு தமிழ்த்தேசியத் தந்தை ஐயா. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். முன்னதாக உலகத் தமிழ்ப் பண் ஒலித்த பின், இலக்கிய முற்றத்தின் பொருளாளர் செந்தமிழ்த்திரு தியாக. சுந்தரமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
ஐயா. பழ. நெடுமாறன் அவர்கள் தம் தலைமையுரையில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற நிகழ்வுகள் உண்மையில், தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக குறிப்பிட்டார்கள். இசை, நாட்டியம், ஓவியம், ஓகம் போன்ற தமிழர் கலைகளை முற்றத்தைச் சுற்றியுள்ள ஏழை, எளிய தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், இலக்கிய முற்றத்தினருக்கும் தம் வாழ்த்துகளைத் தெரிவித்து பயிற்சி வகுப்புகளைத் தொடக்கி வைத்தார்கள்.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் தமிழர்தான் முன்னோடி என்பதை விளக்கும், தமிழில் கிடைத்த முழுமுதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு வழிபாடு செய்து, இசை, நாட்டியம், ஓக ஆசிரியர்கள் முறையே திருமதி. விசயலெட்சுமி அவர்களும், திருமதி இரா. அபிராமி அவர்களும், திரு. சக்தி. முருகேசன் அவர்களும், தாம்தாம் பயிற்றுவிக்கும் கலைகளை மாணவர்கள் மூலமும், தாங்களும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். சென்ற ஆண்டு இலக்கிய முற்றத்தில் பயின்ற மாணவிகள் 5 பாடல்களைப் பாடினர். ஓகப்பயிற்சி ஆசிரியர் சில ஓகங்களைச் செய்து காட்டினார்.
சென்ற ஆண்டு இடைவிடாமல் தொடர்ந்து வந்த மாணவர்களுக்கு ஐயா அவர்கள் நூல்களைப் பரிசாக அளித்தார்கள்.
இளங்கோவடிகளின் சிலை ஏன் வழிபடப்பட்டது என்பது பற்றியும், முற்றத்தின் நிகழ்வுகள் பற்றியும், வகுப்புகளுக்கான காலம், சீருடை ஆகியன பற்றியும் திங்கள்தோறும் இரண்டாம் ஞாயிறு நடைபெறும் இலக்கிய மற்றும் குமுகச் சிக்கல்கள் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெறுவது பற்றியும், இலக்கிய முற்றத்தின் தலைவர் செந்தமிழ்த் திரு பேராசிரியர் பெ. இராமலிங்கம் அவர்கள் விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சிகளை இலக்கிய முற்றத்தின் செயலாளர் மணிமேகலை அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இலக்கிய முற்றத்தின் துணைத் தலைவர் ந. வெற்றியழகன் அவர்களும், செயலாளர் திரு. சே. அரசு அவர்களும் முன்னின்று சிறப்புற கவனித்துக் கொண்டனர்.
சென்னையிலிருந்து தமிழர் வீரக்கலைகளின் செயல் விளக்கத்தை செய்துகாட்ட திரு. மனோகரன் அவர்கள் வருகைபுரிந்தார்கள். அவர் 50-க்கும் மேற்பட்ட தம் குழுவினருடன் வருகைபுரிந்து தமிழர் வீரக்கலைகளை செயல்படுத்திக் காட்டினார்கள். இவர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை ஐயா அவர்களும், தமிழர் தேசிய முன்னணியின் பொருளாளர் திரு. சாத்தப்பன் அவர்களும் செய்திருந்தனர். இறுதியாக ஓக ஆசிரியர் திரு. சக்தி. முருகேசன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
|