சட்டமன்றத் தீர்மானம் - குப்பைக் காகிதமா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:05

"இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் சர்வதேசச் சட்டங்களையும், ஜெனீவா உடன்பாட்டின் போர் விதிமுறைகளையும் முற்றிலுமாக மீறி போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகள், பாலியல் வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நிகழ்த்தியவர்கள் மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தை இந்தியாவே ஐ.நா. பேரவை, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் கொண்டு வரவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலை எடுத்தால் அதை மாற்ற இராசதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பேரரசை தமிழக சட்டமன்றப் பேரவை வேண்டிக்கொள்கிறது.'' என்ற தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது முதன்முறை அல்ல.

"2011ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க இலங்கை அரசு முன்வராவிட்டால் அந்நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்'' என்ற தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவே முன்மொழிந்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் "இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தறிந்து முடிவெடுக்க வேண்டும்'' என இந்திய அரசை வேண்டிக்கொள்ளும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி "இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறும், காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய அரசை வற்புறுத்தும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்து சட்டமன்றத்தில் அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றினார்.

தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 234 உறுப்பினர்களும் நாலரைக் கோடிக்கு மேற்பட்ட தமிழக வாக்களர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். இவர்கள் செய்யும் முடிவு என்பது அனைத்துத் தமிழ் மக்களின் விருப்பமாகவும் முடிவாகவும் கருதப்படவேண்டும். ஆனால், தமிழக சட்டமன்ற தீர்மானங்களை இந்திய அரசு கொஞ்சமும் மதிப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் டில்லிக்கு வந்திருந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்தியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தவற்றில் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை என்பதே இடம்பெறவில்லை. அது மட்டுமல்ல, இரணில் விக்கிரமசிங்கே தனது நாடு திரும்பிய பிறகு "சர்வதேச விசாரணையை தனது அரசு ஒருபோதும் ஏற்காது எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். எனவே பிரதமர் மோடி இக்கருத்தை அவரிடம் வலியுறுத்தவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தமிழக மீனவர் பிரச்சினை என்பது கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுடுகிறது, விரட்டியடிக்கிறது, கைது செய்து சித்திரவதை செய்கிறது என்பதுதான். ஆனால், சிங்களக் கடற்படை இனிமேல் அத்துமீறிச் செயல்படாது என்ற வாக்குறுதியை இரணில் விக்கிரமசிங்கே அளிக்கவில்லை. அவர் பதவியேற்றபோது எல்லை தாண்டி வரும் மீனவர்களைச் சுடத்தான் செய்வோம் என அச்சுறுத்தியவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதால் பிரச்சினை தீராது. கடற்படை சுட்டு 600க்கு மேற்பட்டத் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்க்ள் என்பதையே மறைத்து திசைதிருப்பும் விதமாக இருநாட்டு மீனவர்களிடையே பிரச்சினை இருப்பதுபோலவும் அவர்கள் பேசினால் தீர்ந்துபோகும் என்பது போலவும் இரு பிரதமர்களும் சொல்லியிருப்பது தமிழக மக்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் பல தீர்மானங்களை கடந்த கால காங்கிரஸ் அரசும் இப்போதைய பா.ஜ.க. அரசும் அலட்சியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த கால வரலாறு வேறுவிதமாக உள்ளது.

1960ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சென்னையில் தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் "தமிழகம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களுக்கு எதிராகக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னையில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம்வரை ஆங்கிலமே இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை மீறும் வகையில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி திகழும் என குடியரசுத் தலைவர் கூறியதைக் கண்டிக்கவே இத்தகையப் போராட்டத்தை தி.மு.க. அறிவித்தது.

போராட்டக்குழுத் தலைவரான ஈ.வே.கி. சம்பத் 03.08.1960ஆம் ஆண்டு இப்போராட்டம் குறித்து பிரதமர் நேருவிற்கு ஒரு கடிதம் எழுதினார். உடனடியாக பிரதமர் நேரு டில்லியில் இருந்த அவரை அழைத்துப் பேசினார். இதன் விளைவாக நேரு அவர்கள் 4 மணி நேரத்திற்குள் பதில் கடிதம் அனுப்பி தான் அளித்த வாக்குறுதியை மீண்டும் உறுதி செய்தார். தி.மு.க. செயற்குழு உடனடியாகக் கூடி பிரதமர் நேருவின் கடிதத்தின் அடிப்படையில் போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்தது.

இவ்வளவிற்கும் தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களே அங்கம் வகித்தார்கள். ஆனாலும் எண்ணிக்கையைப் பார்க்காமல் ஈ.வே.கி. சம்பத் அவர்களை நேரு அழைத்துப் பேசி பதில் கடிதத்தை உடனடியாகக் கொடுத்தது அவரின் சனநாயக உணர்வுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டப் பிறகு 18-07-1967 அன்று சட்டமன்றத்தில் சென்னை மாகாணம் என்றப் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்றத் தீர்மானத்தை முதல்வர் அண்ணா அவர்கள் கொண்டுவந்து அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேற்றினார். பிரதமர் இந்திரா தலைமையிலிருந்த இந்திய அரசு அத்தீர்மானத்தை மதித்து அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு என்ற பெயரை உறுதி செய்தது.

பிரதமர் நேரு காலத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த பி.சி.ராய் தனது மாநில மக்களின் நலனுக்காக பிரான்சு நாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். டில்லியின் அதிகார வர்க்கம் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தப்போதிலும் அரசமைப்பு சட்ட விதிகளைவிட மக்களின் நலன்தான் முதன்மையானது என துணிவுமிக்க முடிவினை முதல்வர் பிசி. ராய் எடுத்தார். அதை பிரதமர் நேருவும் ஏற்றுக்கொண்டார்.

மேற்கு வங்கத்திற்கும் வங்காள தேசத்திற்கும் இடையில் உள்ள கங்கை நதிநீரைப் பகிர்ந்துகொள்ளும் பிரச்சினைக் குறித்து மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள் வங்கதேச பிரதமரை சந்தித்துப் பேசி இருவரும் அவற்றிற்குத் தீர்வு கண்டனர். முதலமைச்சருக்கு வெளிநாட்டுடன் உடன்பாடு செய்துகொள்ளும் அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கவில்லை. ஆனாலும் மேற்கு வங்கத்தின் நலனுக்காக இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு ஜோதிபாசு டில்லியை அதிர்ச்சிக் குள்ளாக்கினார். அப்போதைய பிரதமர் தேவகவுடா இதை ஏற்றுக்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பஞ்சாப் முதலமைச்சரும் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப் முதலமைச்சரும் சந்தித்துப்பேசி பலப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டனர். அதை இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், தமிழக முதலமைச்சர் எழுதும் கடிதங்களையும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் மதிக்காதப் போக்கில் மத்திய அரசு தொடர்ந்து நடந்துகொள்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களுடன் மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள். இலங்கைத் தமிழர்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னால் இந்திய அரசு தமிழக முதலமைச்சரை அழைத்துப்பேசி அவர் கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை மதிப்பதற்கு முன்வரவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்படும் முறை குறித்து மறு ஆய்வுசெய்வதற்காக நீதியரசர் வெங்கடாசலய்யா தலைமையில் 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய ஆணையம் அளித்தப் பரிந்துரைகளில் கீழ்க்கண்ட ஒன்று மிக முக்கியமானதாகும்.

"மாநிலப் பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு பொருள் குறித்து மத்திய அரசு சர்வதேச உடன்பாடு ஏதாவது செய்துகொள்வதற்கு முன்னால் மாநிலங்களுக்கு இடையேயான மன்றத்துடனும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுடனும் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும்''.

இந்திய அரசு நியமித்த தேசிய ஆணையம் அளித்தப் பரிந்துரையை இந்திய அரசே மீறுவதும், "தமிழக சட்டமன்ற தீர்மானங்களை தமிழக மக்களின் முடிவுகளாகக் கருதி செயல்படாமல் அவற்றை குப்பைக் காகிதங்களாகக் கருதி அலட்சியப்படுத்து வதும் வேண்டாத விளைவுகளுக்கு வித்திடும் என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்.

நன்றி : தினமணி 22-09-2015

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.