1. எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை
தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தமிழே கல்விமொழி யாகவும் அரசு நிர்வாகத்தில் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை தமிழே ஆட்சிமொழியாகவும் கீழ் நீதிமன்றத் திலிருந்து உயர்நீதிமன்றம் வரை தமிழே வழக்காடும் மொழியாகவும் தமிழே வழிபாட்டு மொழியாகவும் திகழ வேண்டும் என்பவைக்காகப் போராடுதல்.
2. தமிழர் உரிமை நிலை நாட்டல்
தமிழ்நாட்டிற்குத் தன்னுரிமையைப் பெறுதல், தமிழக ஆற்றுநீர் உரிமைகளை மீட்டல், தமிழகத் தொழில், வாணிபம், வேலைவாய்ப்பு ஆகிய வற்றைத் தமிழர்கள் மீட்டெடுத்தல், தமிழ்நாட்டில் அந்நியர் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தல் ஆகியவற்றிற்காகப் போராடுதல்.
3. உலகத் தமிழர் உரிமைக்கு ஆதரவு
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையாகவும் தொடர்ந்தும் ஆதரவு தருதல், உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களையும் உரிமைகளயும் பாதுகாத்தல்.
4. அரசியலில் தூய்மை
தமிழக அரசியலில் பரவிவிட்ட தன்னலம், பதவி வெறி, பணவெறி, பொதுமக்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு ஆகியவற்றை முறியடித்துத் தொண்டு, இன்னல், ஈகம் ஆகிய உன்னத இலட்சி யங்களை நிலைநிறுத்தித் தமிழக அரசியலைத் தூய்மைப்படுத்துதல்.
5. நிர்வாகத்தில் நேர்மை
தமிழக அரசின் நிர்வாகத்தில் இலஞ்சமும் ஊழலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் புற்று நோய்போல் பரவியிருப்பதை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட உறுதி பூணுதல்.
6. இயற்கை வளம் காத்தல்
தமிழகத்தில் குவிந்துகிடக்கும் கனிமவளங்கள், காட்டு வளங்கள், நீர்வளம், ஆற்று மணல் போன்ற இயற்கை வளங்களை சூறையாடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அவற்றைப் பாதுகாத்தல். தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை, வாழ்வாதாரங்களை அழித்திடும் அணுஉலை, மீத்தேன், நியூட்ரினோ போன்ற திட்டங்களைப் போராடித் தடுத்து நிறுத்துதல்.
7. மது ஒழிப்பு
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை கள்ளுண்ணாமையை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகமெங்கும் மதுக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக மாற்றி அவர்களின் குடும்பங்களைச் சீரழித்துவரும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
8. சாதி-மதவெறி ஒழிப்பு
தமிழகத்தில் தங்களின் அரசியல் மற்றும் சுயநல வெறிக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சாதி வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்தல். தமிழகத்தில் நிலவிவரும் மதநல்லிணக் கத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் மதவெறி தூண்டிவிடப்படுவதைத் தடுத்து நிறுத்துதல்.
9. சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாவுமணி
தமிழகத்தில் அரசியல் சந்தர்ப்பவாதம் அன்றாட நடைமுறையாகி விட்டது. கொள்கை, கோட்பாடு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஆகியவை காற்றில் பறக்கவிடப்பட்டுப் பதவி களுக்காகத் தேர்தல் காலக் கூட்டணிகள் உருவாக் கப்படுகின்றன. இதன் விளைவாகப் பொது வாழ்க்கை என்பது சீரழிந்துவிட்டது. இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
10. ஜனநாயக மீட்பு
நாடெங்கும் பல கட்சிகளில் உள்கட்சி சனநாயகம் அடியோடு ஒழிக்கப்பட்டு வாரிசுரிமை அரசியல் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக சர்வாதிகாரம் படர்ந்து வருகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சர்வாதிகார ஆட் சிக்கு வழிவகுக்கும் இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்தி ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல்.
|