இந்தி மட்டுமே-இந்தியக் குரல், ஆங்கிலம் மட்டுமே - திராவிடக்குரல் தமிழ் மட்டுமே - தமிழன் குரல் சென்னையில் "எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' எழுச்சி மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2015 11:45

தமிழர் தேசிய முன்னணி நடத்திய எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எழுச்சி மாநாடு, 26-10-2015 காரிக்கிழமை அன்று சென்னை டி.என். இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ் வீழ்ந்திடத் தமிழன் வீழ்ந்தான். தமிழ் ஆண்டால் தமிழன் ஆளுவான். தமிழை ஆட்சியில் அமர்த்த அணி வகுப்போம்! - என்னும் குறிக்கோளுடன் இந்த மாநாடு கூட்டப்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் பா. இறையெழிலன் இயக்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.
உடனே நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து.

முதல் அரங்கம்

தலைமை நிலையப் பொதுச் செயலாளர் திரு. செ.ப. முத்தமிழ்மணி வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்புரையில் தமிழின் இன்றைய நிலை மிகவும் இழிவான நிலையில் உள்ளது. பல இழப்புகளையும் இழிவுகளையும் தாங்கி தொடர்ந்து தன் மொழி வளத்தினை காத்துக் கொண்டு வருகிறது எனக்கூறி அனைவரையும் வரவேற்று நிறைவு செய்தார்.

முதல் அமர்வின் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பன் அவர்கள்: தமிழ் மொழி கடந்த 2000 ஆண்டுகளாக சமற்கிருதத்தின் பல இடையூறுகளைத் தாங்கி நடைபோட்டு வருகிறது. என்றுமுள தென் தமிழாகத் தமிழ் நிமிர்ந்து நடைபோட்டு வருகிறது என்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி அவர்கள் கல்வி மொழியாகத் தமிழ் என்னும் தலைப்பில் சிறப்பான தொடக்க உரையை நிகழ்த்தினார். கல்வி அவரவர் தாய்மொழியிலேயே அமைய வேண்டும் என்று உலகம் முழுவதும் பின்பற்றப்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம் முதல் வகுப்பிலிருந்து கற்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் இந்த நிலையில் கல்வியை மேம்படுத்த பல குழுக்கள் போட்டு அந்த அறிக்கைகளின் அடிப்படையில் கல்வித் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று அறிக்கைகள் இருந்தும் எந்தக் குழுவின் அறிக்கையும் அமல்படுத்தப்படவில்லை. இங்குள்ள மக்கள் நிலை, தேவையான கல்வி முறை பற்றியும் கல்வி மொழி பற்றியும் சட்ட ஆணையம் வகுத்த நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் சிறப்பாக விளக்கி உரையாற்றினார்.

வழக்காடு மொழியாகத் தமிழ் என்னும் தலைப்பில் நீதியரசர் சந்துரு அவர்கள் சிறப்பானதொரு உரையாற்றினார். வழக்கு மன்றங்களில் தமிழில் வாதாடலாம் என்று இருந்தும் நாம் அதைப் பின்பற்றவில்லை. அதற்குக் காரணம் தேடுகிறார்கள். பலதரப்பட்ட கல்விமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சட்டப் புத்தககங்களையும், விளக்க நூல்களையும் மொழிபெயர்க்க தனியாக ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும் என்றார்.

வழிபாட்டு மொழியாகத் தமிழ் என்னும் தலைப்பில் திரு. சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றினார். அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும் சமற்கிருதம் தான் தேவ மொழி என்று பொய்யாகப் பரப்பப்பட்டுப் பின்பற்றப்படுகிறது. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்பன சிறப்பான வழிபாட்டு மொழியாக இருந்தும் அவற்றைக்கொண்டு வழிபடாமல் சமற்கிருதத்தை இன்னமும் பயன்படுத்துகின்றனர். சமற்கிருத மொழி ஓர் உயிரற்ற மொழி. யாருடைய தாய்மொழி என்பதோ, எந்த நாட்டுக்குச் சொந்தமான மொழி என்பதோ, மக்களில் எத்தனைபேர் பேசுகிறார்கள் என்பதோ தெரியாத நிலையில் ஒரு சிறு ஆதிக்கக் குழுவினர் சமற்கிருதத்தைத் நம் தலையில் திணிக்கிறார்கள்.

ஆட்சிமொழியாகத் தமிழ் என்னும் தலைப்பில் முனைவர் ந. அரணமுறுவல் உரையாற்றினார்.

இந்தியாவில் 22 மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் சமற்கிருதம் யாராலும் பேசப்படாத மொழி. உத்தரகாண்டு மாநிலத்தில் 10 ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படுவதாகப் பதிவாகியுள்ளது. யாருடைய மொழி என்பதோ, எத்தனைபேர் பேசுகிறார்கள் என்பதோ தெரியாமல் சமற்கிருத மொழியை இங்கு கொண்டுவந்து திணிக்கிறார்கள். 22 மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்குங்கள் என்பது வீண் பேச்சு. இந்தப் பட்டியலில் மேலும் 38 மொழிகள் பேசுவோர் விண்ணப்பித்துள்ளனர்.

"இந்தி ஆட்சி மொழிச் சட்டமும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டமும் ஆங்கிலத்தைத்தான் காப்பாற்றுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் ஆட்சிமொழி ஆவதற்குத் தடையாக இருப்பது ஆங்கிலம்தான்.

இந்தியை மட்டுமே ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதே ஒற்றை இந்தியக்குரல். ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரவேண்டுமென்பது திராவிடக் குரல். தமிழ்நாட்டில் தமிழே, தமிழ் மட்டுமே ஆட்சிமொழி ஆக வேண்டுமென்பது தமிழ்க்குரல்'' என்றார்.
திரு. சா. சந்திரேசன் அவர்கள் தலைமையில் நிறைவரங்கம் நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

நிறைவு நிகழ்ச்சியில் பேரா. ம.இலெ. தங்கப்பா, திரு. கா. அய்யநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

வடசென்னை மாவட்டத் தலைவர் இலாரன்சு நன்றியுரையாற்றினார்.

- பா. இறையெழிலன்

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.