வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2015 11:50 |
தமிழினி - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியற் துறை பொறுப்பாளர். 1991-ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்த அவர், தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மக்களுக் காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். 2009-ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டு வன்னியில் உள்ள புனர் வாழ்வு முகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்ட அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 18, 2015 அன்று தனது 43-ஆவது வயதில் வீர மரணமடைந்தார். இறுதி வரை தன் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த அப்போராளியின் இறுதி நிகழ்வில், இராணுவத்தின் கண்காணிப்பையும் கடந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
தலைவியை இழந்த வானம்
போருக்குப் புதல்வர்களைத் தந்த தாயக வானம் அழுகிறதென எழுதியவளுக்காய்க் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையைக் கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மெளனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியைத் தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மெளனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் ஊழித் தாண்டவத்தில் அழித்தனர் லட்சம்பேரை எஞ்சியோரை மாண்டுபோகும்படி செய்தனர் இனி? ஊழியின் ஈற்றில் சரணடையும் தன் சேனைக்கு தலைவி கூறியது இப்படித்தான் 'இத்துடன், எதுவும் முடிந்துவிடவில்லை' -
- தீபச்செல்வன்
|