"அவசர நிலை என்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகும். அந்தக் காலக்கட்டத்தில் நாட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியானது இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைய வழிவகுத்தது. தற்போது அரசியலில் உள்ள பல்வேறு தலைவர்களும் அவசரநிலைக்கு எதிரான போராட்டம், ஜெயப் பிரகாசு நாராயணின் இயக்கம் ஆகியவற்றோடு தொடர்புடைய வர்களாக இருப்பார்கள். சனநாயகம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை கட்டிக்காக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்காக அவசர நிலைக் காலத்தை நினைவில் கொண்டிருக்க விரும்புகிறோம்'' என பிரதமர் மோடி தில்லியில் நடைபெற்ற ஜெயப்பிரகாஷ் நாராயணின் 113வது பிறந்த தினத்தையொட்டிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
கடந்த 1975ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் முதன் முதலாக நெருக்கடி நிலையை அப்போதையப் பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார். கொடிய மிசா சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக் கானவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். நாடே சிறைக்கூடமானது. சர்வாதிகாரம் தலைதூக்கியது. இந்தக் காலக்கட்டத்தில் ஜனநாயகத் தைக் காப்பாற்ற உறுதிபூண்டு களமிறங்கினார் ஜெயப்பிரகாசு நாராயண். ஆனால், மிசாவின் கொடிய கரங்கள் அவரையும் பிடித்துச் சிறையில் அடைத்தன.
இதன் விளைவாக மக்கள் போராட்டங்கள் வெடித்ததும், வேறுவழி யில்லாமல் இந்திராகாந்தி தேர்தல் நடத்த முன்வந்ததும், தேர்தலில் இந்திரா காந்தி உட்பட காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும்.. மறக்க முடியாத வரலாறு ஆகும்.
நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள் ளப் பட்டிருக்கும் திருத்தங்கள் வலுவானவையாகும்.
உள்நாட்டுக் குழப்பங்களைக் காரணமாகக் காட்டி இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். ஆயுதப்புரட்சி ஏற்பட்டால்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவர முடியும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டு விட்டது. எனவே நெருக்கடி நிலை மீண்டும் வரும் சூழ்நிலையே இல்லை என்று சிலர் கருதுகின்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 1919ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் பிரிட்டிசு அரசு ரவுலட் சட்டம் என்ற பெயரில் ஆள்தூக்கிச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இச் சட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 6ஆம் தேதியன்று இந்தியா பூராவும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்துமாறு காந்தியடிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் உட்பட பல தலைவர்களை வெள்ளை அரசு கைது செய்தது. ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கவும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் திடலில் மக்கள் திரளாகக் கூடினார்கள். அக்கூட்டத்தில் வெள்ளை இராணுவத் தளபதியான ஜெனரல் டயர் எவ்வித முன்னறிவிப்பு மின்றி மக்களைச் சுட்டார். 379 பேர் கொல் லப்பட்டனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.
ரவுலட் சட்டத்திற்கு எதிராகத்தான் காந்தியடிகள் தனது முதல் அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அந்த அறப்போராட்டத்தில் மோதிலால் நேரு அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றார்.
ஆனால், சுதந்திர இந்தியாவில் மோதிலால் நேருவின் பேத்தி இந்திரா ரவுலட் சட்டத்திற்கு புது வடிவம் கொடுத்து மிசா சட்டத்தைக் கொண்டுவந்தார். மோதிலாலின் கொள்ளுப்பேரன் இராஜீவ்காந்தி தடாச் சட்டத்தைக் கொண்டுவந்தார். ரவுலட் சட்டம் பெயர் மாற்றம் பெற்றதே தவிர அச்சட்டத்தில் இருந்த மிகக்கொடிய அம்சங்கள் பலவற்றை மிசா, தடா ஆகிய சட்டங்கள் உள்ளடக்கியதாகவே இருந்தன.
இச்சட்டத்திற்கு எதிராக அன்றைக்கு போராடிய எதிர்கட்சித் தலைவர் களுடன் பா.ஜ.க. தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரும் போராடினார்கள். மிசாச் சட்டத்தைவிட கொடிய சட்டமாக இதை வருணித்தார்கள்.
மிசாச் சட்டத்தின் கொடுமைகளை நேரில் அனுபவித்த வாஜ்பாய் பிரதமராகவும் அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருக்கும்போதுதான் தடாச் சட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து பொடாச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தடாச் சட்டத்தைவிட பொடாச் சட்டம் கொடூரமானது. சனநாயக உரிமைகளை முற்றிலுமாக ஒடுக்கியது.
எனவேதான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வீ.ஆர். கிருஷ்ணய்யர் "பொடாச் சட்டம் ரவுலட் சட்டத்திற்கு முடிசூட்டும் சட்டம் என மிகக்கடுமையாகக் கண்டித்தார்.
தடா, பொடா ஆகிய சட்டங்களின் கொடுமைகளை நேரில் அனுபவித்த பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் நானும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டோம். மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக பொடாச் சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும். அதன் கொடிய விதிகள் கிரிமினல் குற்ற சட்ட விதிகளோடு சேர்க்கப்பட்டுவிட்டன என்பது மறைமுகமாகப் பொடாச் சட்டத்தை நிரந்தரமாக்கிவிட்டது.
ஏற்கெனவே நடைமுறையில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடுப்புக் காவல் சட்டம் ஆகியவை இருக்கின்றன. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குப் போதுமானவை ஆகும்.
ஆனால், காஷ்மீர், வட-கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் எல்லையற்ற அதிகாரத்தை இப்படைகளுக்கு வழங்கியிருக்கிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தித்தான் கடந்த 15 ஆண்டு காலமாக தொடர் உண்ணா விரதத்தில் இரோம் சர்மிளா என்னும் பெண்மணி ஈடுபட்டிருக்கிறார். 2004ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்த நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி ஆணையம், அம்னெஸ்ட்டி இன்டர்நேசனல் என்னும் உலகளாவிய மனித உரிமை அமைப்பு, இந்திய அரசால் அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான ஆணையம், மணிப்பூரில் போலி மோதல் சாவுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் ஆகியவை ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை அடக்கு முறையின் சின்னம் எனத் தெரிவித்து இச்சட்டத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளன.
குறிப்பாக காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆயுதப்படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டு சொல்லொண்ணாத சித்திரவதைகளுக்கு ஆளாகியிருக் கிறார்கள் என பல மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், பிரதமர் மோடி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலமாக்க வேண்டும்'' என கூறி பிரச்சினையைத் திசை திருப்ப முயல்கிறார்.
உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டுக்கறி சமைத்ததாகக் குற்றம்சாட்டி முகமது அக்லாக் என்ற முதியவரை பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். கொடூர மான இந்தக் கொலையைக் கண்டிப்பதற்குப் பதில் விசுவ இந்து பரிசத்தின் மூத்தத் தலைவரான சுரேந்தர் ஜெயின் "சவுதி அரேபியாவிற்குச் சென்று பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா? அப்படிக் கேட்டு உயிருடன் திரும்ப முடியுமா?'' என ஏளனமாக பேசி இருக்கிறார்.
கருநாடகத்தில் மூடப்பழக்கங்களை கண்டனம் செய்த கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்க்கி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரா, நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஏராளமான எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளனர். ஆனால், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா "தைரியம் இருந்தால் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தட்டும்'' என கிண்டல் செய்துள்ளார்.
ஆனால், தனது அமைச்சர்கள் இவ்வாறு நனி நாகரீகம் இன்றி எழுத்தாளர்களை அவமதிப்பதைக் கண்டிக்க பிரதமர் மோடி முன்வரவில்லை. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷி முகமது கசூரி எழுதிய புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மையைப் பூசிய சிவசேனையின் செயல் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடைபெறவிடாமல் சிவசேனை தடுத்து விட்டது. இந்திய மொழி விழாக் குழுவினால் பாஷா பரிஷத் என்ற விருது வழங்கப்பட்டுள்ள "மாதொரு பாகன்' நாவலை எழுதிய பெருமாள் முருகனுக்கு எதிராக சாதி-மத வெறியர்கள் நடத்திய வன்முறைக் கலவரங்கள் தமிழகத்தையே தலைகுனிய வைத்தன.
சுதந்திர சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு இனி நாட்டில் இடம் இல்லை. தாங்கள் வகுத்த எல்லைக்குள் நின்று மட்டுமே சிந்திக்க வேண்டும், எழுத வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
வரலாற்றை அடியோடு மாற்றி எழுதும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. சனநாயகம், மதச் சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது ஃபாசிச சர்வாதிகாரம் போர் தொடுத்துள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிகின்றன.
பல மொழிகளைப் பேசும் மக்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள் கொண்ட பன்முக சமுதாயத்தை தமது நோக்கு, போக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமுக சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளின் விளைவே மேற்கண்டவையாகும்.
அவசர கால நிலை அறிவிக்கப்படவில்லை. மிசா, தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை. ஆனாலும் சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதைகள், மதவெறியைத் தூண்டும் வெறித்தனமான பேச்சுக்கள், செயல்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
சனநாயகத்திற்குப் பதில் தடிநாயகமே தலைதூக்கித் தாண்டவம் ஆடுகிறது. அதிகாரம் முழுமையாக தங்கள் கைக்குக் கிடைத்தவுடன் ஃபாசிச சுயஉருவத்தை வெளிக்காட்டுகின்றனர். இந்த பேரபாயத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கவும், காக்கவும் மற்றொரு ஜெ.பி. தேவை. அவர் இனி பிறந்து வரவேண்டியதில்லை. இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஜெ.பி. இருக்கிறார். நீங்கள் கிளர்ந்து எழுவீர்களேயானால் ஃபாசிச சர்வதிகாரப் போக்கை வீழ்த்தி சனநாயகத்தை மறுபடியும் நிலைநிறுத்த முடியும்.
நன்றி : "தினமணி' 19-10-2015
|