நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் சனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆகும். இந்த நான்கில் ஏதாவது ஒன்று சரிந்தால் சனநாயக மாளிகையே சரிந்துபோகும்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளு மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டு 20 சட்டப் பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டமாகும்.
இவ்விரு சட்டங்களும் அரசியல் சட்டத்திற்கு எதிரானவை என்றும் கடந்த 20 ஆண்டு காலமாக நீதிபதிகளை தேர்ந்தெடுத்த கொலிஜியம் முறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அக்டோபர் 16ஆம் தேதி நீதியரசர் ஜே.எஸ். கேஹர் தலைமையில் கூடிய உச்சநீதிமன்ற ஆயம் 1039 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை அளித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் கூடிய மேற்கண்ட நீதிஆயம் "தீர்ப்புக் குறித்து எங்களுக்கு ஏராளமான ஆலோசனைகள் வந்துள்ளன. இந்நிலையில் இரு தரப்பு கருத்தக்களைக் குறித்து ஆராய்ந்து எங்களுக்கு ஆலோசனைகள் வழங்க நீதியரசர் ஜே.சலமஸ்வா, எம்.வி. லோகு, குரியன் ஜோசப், மற்றும் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், மூத்த வழக்கறிஞர் அரவிந் தத்தா ஆகியோரை நியமிப்பதாக அறிவித்தது.
பிரதமர் இந்திரா அரசின் பல சட்டங்களை அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித்துறையை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி நியமனத்தில் பதவி மூப்பு வழக் கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் நியமித்தார். இதனை எதிர்த்து மூத்த நீதிபதிகள் மூவர் பதவி விலகினர். அத்துடன் நில்லாது அதுவரை பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் முறையை மாற்றியதோடு பிற மாநிலங்களைச் சேர்ந்தவரை தலைமை நீதிபதியாகவும் மேலும் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளை பிற மாநிலத்தவராகவும் நியமிக்கும் முறையைக் கொண்டு வந்தார். மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநில மொழியை அறியாத ஒருவர் தலைமை நீதிபதியாகவும் நீதிபதிகளாகவும் விளங்கும் நிலை உருவாகி அம்மாநில மொழி நீதிமன்ற மொழியாக என்றைக்கும் ஆக முடியாத நிலை இன்றளவும் நீடிக்கிறது.
அப்போது முதல் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்குமான மோதல் தொடங்கியது. 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவிவந்தது. 1993இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நீதிபதி ஜே.எஸ். வர்மா "அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைக் "கலந்தாலோசித்து' என்பதை மாற்றி "கருத்தொரு மித்து' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அது முதல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலிஜியம் முறை தொடங்கியது.
அரசிலமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட எம்.என். வெங்கடாசலய்யா ஆணையத் தின் முன் வாதாடியபோது பாலி. எஸ். நரிமன் "தேசிய நீதி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' என வேண்டிக்கொண்டார். அவ்வாறே வெங்கடாசலய்யா கமிசன் அளித்த அறிக்கையில் அது அமைக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் அரசு தரப்பு, நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதாக இது அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
கடந்த ஆறு மாத காலத்தில் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம், பொருட்கள் மற்றும் சேவை பெறும் சட்டம், ஆதார் அட்டையின் அடிப்படையில் பணச் சலுகைகள் அளிக்கும் திட்டம் ஆகியவை உச்சநீதிமன்றத்தால் செல்லாததாக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தேசிய நீதிபதிகளின் நியமன ஆணையச் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதைப் பார்க்க வேண்டும்.
அன்று நீதித்துறையுடன் எந்த காரணத்திற்காக பிரதமர் இந்திரா மோதினாரோ அதே காரணத்திற்காக பிரதமர் மோடி நீதித்துறையுடன் இன்று மோதுகிற போக்கு உருவாகியிருக்கிறது. இந்த மோதல் மேலும் தொடர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இத்தகையச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்னால் இது குறித்து பல தரப்பினருடன் விரிவாக கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். அவசர அவசரமாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளித்துவிட்டது.
இந்த மோதல் குறித்து முன்னாள் நீதியரசர்கள் பலர் கவலையுடன் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் மூத்த வழக்கறிஞர்களும், அரசியல் சட்ட அறிஞர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கொலிஜியம் முறை கொண்டுவருவதற்கு காரணமான ஜே.எஸ்.வர்மா , பாலி எஸ். நரிமன் ஆகியோர் இப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் விளைவாக பல கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டு இருபதுக்கு மேற்பட்ட சட்டமன்றங்களினாலும் ஏற்கப்பட்ட ஒரு சட்டத்தை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா?
அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அல்லது அரசியல் சட்டத்திற்குப் பொருந்தாத வகையில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுமானால் அதை பரிசீலித்துத் தீர்ப்புக் கூற உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
அதைப்போல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அவை மெய்ப்பிக்கப் பட்ட நீதிபதிகளின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அவர்களை பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்யும் முடிவை தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தள்ளுபடி செய்ய முடியுமா? என நிதியமைச்சர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதைச் செய்தாலும் தேர்ந் தெடுக்கப்படாதவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் அவர்கள் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான் அவர் கூறியுள்ளதற்குப் பொருளாகும். இந்தக் கேள்வியை அருண்ஜேட்லி தனக்குள்ளேயே கேட்டிருக்க வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசிய வேளையில்கூட சண்டிகர் தொகுதியில் போட்டியிட்ட அருண்ஜேட்லி தோற்றுப்போனார். பிறகு நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகியிருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஒருவர் இத்தகைய கேள்வியை எழுப்புவது எப்படி?
அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் ஆணைய சட்டத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் உட்பட மூன்று நீதியரசர்களும், சட்ட அமைச்சரும் மேலும் சிறந்த குடிமக்கள் இருவரும் நியமிக்கப்படுவார்கள். தலைமை நீதியரசர், ஆளுங்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர், முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு குடிமக்கள் இருவரைத் தேர்ந்தெடுக்கும். நீதி ஆணையம் செய்த முடிவை யாரேனும் இரு உறுப்பினர்கள் எதிர்த்தால் அந்த முடிவு செல்லாது.
சிறந்த குடிமக்கள் என்பதற்குரிய தகுதி என்ன? என்பது இச்சட்டத்தில் கூறப்படவில்லை. இரத்து அதிகாரம் எத்தகைய கட்டங்களில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமும் இச்சட்டத்தில் கூறப்படவில்லை. எதிர்காலத்தில் இது பல தவறுகளுக்கு வழி வகுத்துவிடும். சட்ட அமைச்சரும் யாரேனும் ஒரு உறுப்பினரும் இணைந்து கொண்டால் ஆணையம் செய்கிற முடிவை தடுத்து நிறுத்திவிட முடியும். இது நீதிபதிகள் நியமன முறையில் அரசுக்கு மறைமுகமாக அதிகாரம் அளிப்பதாகும். அல்லது நீதியரசர்களும் அரசும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு நீதிபதிகளை நியமிக்கும் தவறான போக்கிற்கு வழிவகுத்துவிடும் அல்லது முட்டுக்கட்டை போடப்பட்டு நீதிபதிகளின் நியமனம் தாமதமாகி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
கல்வித்துறை, வரலாற்றுத்துறை, ஆய்வுத்துறை போன்றவற்றில் பொறுப்பான பதவிகளில் ஆளுங்கட்சியின் தத்துவத்தில் ஊறியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது திரிபுவாதத்தைத் திணித்துவிடும். நீதித்துறையிலும் இதுபோல் நடக்காது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நீதித்துறையைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகளின் தலையீடு கூடவேகூடாது என்பது சரியல்ல. கடந்த காலத்தில் அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்த பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியில் அமைச்சராக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், கருநாடகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.ஹெக்டே, தமிழ்நாட்டில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருந்த இரத்தினவேல் பாண்டியன், கம்யூனிஸ்டுக் கட்சியில் மாணவர் அமைப்பாளராக இருந்த கே. சந்துரு போன்ற பலர் நீதிபதிகளாகப் பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், எந்தக் கணம் நீதிபதிகளாகப் பதவியேற்றார்களோ அந்தக் கணம் முதல் அரசியலைத் துறந்து "சமன் செய்து சீர்தூக்கும் கோல்' என வள்ளுவர் கூறியதற்கிணங்க நடுநிலையுடன் மிகச்சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள் என்பது சகல தரப்பினரும் ஒப்புக்கொண்டு பாராட்டிய உண்மையாகும்.
நாடாளுமன்ற இறைமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக இத்தீர்ப்பை அரசு கருதுகிறது.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்க அரசு மறைமுகமாக முயற்சி செய்வதாக நீதித்துறை கருதுகிறது. இந்தப் போக்கு சனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்துவிடும்.
1. இவை போன்ற வேண்டாத சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டுமானால் கொலிஜியம் ஒருவரை நீதிபதியாக தேர்ந் தெடுக்கும்போது அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
2. நீதிபதியாக நியமிக்கப்பட இருப்பவருக்கு குறைந்த அளவு தகுதிகள் என்னனென்ன வேண்டும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
3. நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளவர்களின் பட்டியலைத் தலைமை நீதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
4. யார் மீதேனும் புகார்கள் எழுந்தால் அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதை கொலிஜியம் பரிசீலனைசெய்து அதன் முடிவுகளைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
5. கொலிஜியத்திற்கு ஆலோசனை கூற பார் கவுன்சில் தலைவர்கள், கொலிஜியத்தில் அங்கம் வகிக்காத நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
6. கொலிஜியத்திற்கு நிரந்தரமான செயலகம் அமைக்கப்படவேண்டும். கொலிஜிய உறுப்பினர்கள் முழுநேரமும் அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். மூத்த நீதிபதிகள் மட்டுமல்ல இளைய நீதிபதிகளுக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும்.
7. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியனத்தில் சமூக நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
8. மாவட்டங்களில் பணியாற்றும் சிறந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இம்முறை மாற்றப்படவேண்டும்.
9. நீதிபதிகள் தேர்வு திறந்த மனதுடன் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இந்திய இராணுவத்தில் குவார்ட்டர் மாஸ்டர்- ஜெனரல் என்னும் பதவிக்கு தேர்வுக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் நியமித்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவத் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் திம்மையா பதவி விலகல் கடிதத்தை அளித்தார். நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்திற்று. உடனடியாக பிரதமர் நேரு தலையிட்டு இருவரையும் அழைத்துப்பேசி திம்மையாவின் பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப்பெற வைத்தார்.
தற்போது எழுந்துள்ள இந்தச் சிக்கலில் தலையிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு சட்டப்பூர்வமான அதிகாரங்கள் இல்லையென்றாலும் அவர் பிரதமரையும் தலைமை நீதிபதியையும் அழைத்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசி இப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண முயல வேண்டும்.
நன்றி : தினமணி 16-11-15
|