எனது துணைவியார் பார்வதியின் மூத்த சகோதரர் காந்திமதிநாதன் அவர்கள் கடந்த 8-10-2013 அன்று காலமானார்.
மதுரையில் எனது தமக்கையின் இறுதி நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வீடு திரும்பிய போது இந்தத் துயரச் செய்தி எங்களை எதிர் நோக்கி இருந்தது. அன்று இரவே புறப்பட்டுச் சென்னை வந்து அவரது உயிரற்ற உடலைப் பார்த்து துயருற்றோம்.
சிறந்த பண்பாளர். இன்சொல், நேர்மை, கடமை தவறாமை, கடும் உழைப்பு ஆகியவை அவரோடு பிறந்த குண நலன்களாகும். வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்தில் தனக்குக் கீழே வேலை பார்ப்பவரிடமும் இந்த சீரிய குணங்களை கடைப்பிடித்தார். அவர்களையும் கடைப்பிடிக்க வைத்தார்.
சென்னை, விசாகப்பட்டினம், கோவா, தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் உயரதிகாரியாக பதவி வகித்தார். அவர் ஓய்வு பெற்று 20 ஆண்டுகளாகியும், அவருக்குக் கீழே வேலை பார்த்தவர்கள் இன்னமும் அவரைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார்கள்.
எங்கள் மாமனார் திரு. சி. கிருஷ்ணசாமி அவர்களின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று தனது தம்பிகள், தங்கை மற்றும் அவர்களின் குழந்தைகள் என அனைவரிடமும் அன்பு மழை பொழிந்தார். குறிப்பாக தனது ஒரே தங்கையான எனது துணைவியார் பார்வதியை மிகவும் நேசித்தார். என்னிடமும் அவர் காட்டிய அன்பு அளவிட முடியாததாகும்.
அவரின் திடீர் மறைவு அளவற்ற துயரத்தை தருகிறது. அவருடைய துணைவியார் ஜெயா, புதல்வர் கிருஷ்ணன், புதல்வி சந்தியா ஆகியோருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற முயல்வதின் மூலம் நானும் எனது துணைவியாரும் ஆறுதல் பெற விழைகிறோம்.
|