பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டிய இடத்தில் வாய் மூடி மவுனியாகவும், செயல் பட வேண்டிய நேரத்தில் செயலற்றவராகவும் இருந்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இப்போது பேசுகிறார். சூளுரைக்கிறார். எச்சரிக்கிறார்.
2009-ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட போது சிங்கள அரசுக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற இந்திய அரசில் முக்கிய அமைச்சராகத் திகழ்ந்தவர் சிதம்பரம்.
ஆனால் இப்போது சிதம்பரம் சென்னையில் கோபக்கனல் வீச கொந்தளித்திருக்கிறார். “இலங்கை இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்கும்வரை இந்திய அரசு ஓயாது என இராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைத்திருக்கிறார்.
இலங்கையில் போர்க் குற்றச்சாட்டின் பெயரில் இராஜபக்சே மற்றும் அவரைச் சார்ந்தவர்களை மட்டும் தண்டிக்க முடியாது. இராஜபக்சேக்கு எல்லா வகையிலும் துணை நின்ற இந்திய அரசையும் சேர்த்துதான் தண்டிக்க வேண்டி நேரிடும். ஏனென்றால் போர் முடிந்த பிறகு 2009ஆம் ஆண்டு சூன் 1ஆம் தேதி இராஜபக்சே பின் வருமாறு அறிவித்தார். "போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒரு போதும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.'' என பகிரங்கமாக இந்திய பத்திரிகை ஒன்றிற்கே பேட்டி அளித்தார். இது வரை அதை மறுக்கும் துணிவு இந்திய அரசில் அங்கம் வகிக்கும் சிதம்பரம் உட்பட யாருக்கும் இல்லை.
“தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான 13-ஆவது சட்டத்திருத்தத்தைச் சீர் குலைக்க இலங்கை செய்யும் முயற்சிகளை முறியடிப்போம் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கிறார். 13ஆவது சட்டத்திருத்தத்தை சிறிது சிறிதாகச் சாகடிக்கும் வேலை கடந்த 26 ஆண்டுகாலமாக நடந்து முடிந்து விட்ட நேரத்தில் சிதம்பரம் விழித்துக் கொண்டிருக்கிறார்.
இராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாட்டை ஒட்டி தமிழர்களுக்குத் தனி மாநிலம் அமைக்க ஒப்புக் கொண்ட ஜெயவர்த்தனா அவ்வாறு செய்யாமல் சிங்களப் பகுதிகளுக்கே எட்டு மாநிலங்களையும் உருவாக்கினார். சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் மத்திய அரசே சிங்களர் கையில் இருக்கும் போது சிங்களருக்குத் தனியாக எட்டு மாநிலங்கள் தேவையில்லை. சிறுபான்மையினரான தமிழர்களுக்குத் தனி மாநிலம் இன்றியமையாதது. வட-கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழர்களுக்கு என தனியானதொரு தீர்வினை வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை என்பதையே இது காட்டியது. தமிழ் மாகாண அரசுக்கு நிலம், காவல்துறை மற்றும் நிதி ஆகியவை உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசுகள் தொடர்ந்து ஏற்க மறுத்து வருகின்றன.
இராஜபக்சே குடியரசுத் தலைவரான பிறகு அவரின் மறைமுகத் தூண்டுதலின் பேரில் வடக்கு-கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு இணைப்புச் சட்டப்படி செய்யப்பட்டதல்ல. இது குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி உச்ச நீதிமன்றம் இணைப்பு செல்லாது என தீர்ப்பளித்தது. இதை இராஜபக்சே பயன்படுத்திக் கொண்டு உடனடியாக வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்தார். இத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கை ஒரே நாடு. இங்கு மாவட்டப் பிரிவினைகள் மட்டுமே இருக்கும். வேறு பிரிவினைகளுக்கு இடமில்லை என்பதை தனது அரசின் கொள்கையாக அறிவித்தார். மேலும் சிங்கள பவுத்த நாடாக இலங்கை விளங்கும் என்றும் பிரகடனம் செய்தார்.
இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி தமிழும் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டது. ஆனால் இது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இதற்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை இராஜபக்சே அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுப்பூர்வமான தாயகம் என இந்திய-இலங்கை உடன்பாடு குறிப்பிடுகிறது. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றன.
13-ஆவது சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைகளைத் தமிழர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் எனக் கூறிய இராஜபக்சே அதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றினை அமைத்தார். இராஜபக்சேயின் இந்த சூழ்ச்சிக்கு இரையாக விரும்பாத சிங்கள எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இக்குழுவில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டன.
ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் அங்கம் வகிக்காத இந்தத் தெரிவுக் குழு கடந்த இரண்டாண்டு காலமாக செயலற்றுக் கிடக்கிறது. ஆனால் இத்தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அய். நா. மனித உரிமை கமிசனில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானமும் இனப்படுகொலை விசாரணைகளும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டால் அதைக் காட்டித் தப்பி விடலாமென இராஜபக்சே நினைக்கிறார். அவரின் சூழ்ச்சிக்கு இந்திய அரசு துணை போகிறது.
இந்திய-இலங்கை உடன்பாட்டில் கூறப்பட்ட அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், அடையாளம் தெரியாமல் உடன்பாடு உருக்குலைந்து விட்டது. இந்த உடன்பாடு செயல்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளித்து கையொப்பமிட்டிருந்த இந்திய அரசு மேலே கண்ட அத்துமீறல்கள் அனைத்தையும் பார்த்தும் பாராதது போல் இருந்துவிட்டது. இராஜீவ் காலத்திலிருந்து மன்மோகன்சிங் காலம் வரை இடையில் பா.ஜ. க. ஆட்சிக் காலம் தவிர மத்திய அமைச்சரவையில் சிதம்பரம் தொடர்ந்து பதவி வகித்து வந்திருக்கிறார். 13-ஆவது சட்டத்திருத்தத்தை சீர்குலைக்க இலங்கை அரசு செய்யும் முயற்சிகளை முறியடிக்கப் போவதாக இப்போது சூளுரைக்கும் சிதம்பரம் இந்த உடன்பாடு சிறிது சிறிதாகச் சாகடிக்கப்பட்டபோது வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்?
“இடம் பெயர்ந்த தமிழர்களுக்கும் வீடிழந்தவர்களுக்கும் மீண்டும் பழைய இடங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதை இந்தியா உறுதியாக நிறைவேற்றும் என சிதம்பரம் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை என்ன?
அய். நா. மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை இலங்கை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு மனித உரிமைக் குழுவுக்கு அளித்த அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிட்டார்: "இலங்கை இராணுவ தளபதிகளும் அரசு அதிகாரிகளும் போரின் கடைசி மாதங்களில் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்த பாகுபாடற்ற விசாரணை நடத்துவதற்கு இராஜபக்சே அரசு பெரும் தடையாக இருந்து வருகிறது. இந்தப் போரில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள் என அய். நா. மதிப்பிட்டுள்ளது. இதற்கு ஆதரவாக புகைப்படங்கள், வீடியோ படங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளனர். வருகிற மார்ச் மாதத்திற்குள் இது குறித்த சுதந்திரமான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், மனித உரிமைக் குழு தனியாக விசாரணை நடத்த வேண்டி வருமென எச்சரிக்கிறேன். போர்க் குற்றங்கள் மட்டுமல்ல, இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மீதெல்லாம் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறு வாழ்வு என்பது மெதுவாகவும் அரைகுறையாகவும் நடைபெறுகிறது. வடக்குப் பகுதியை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. வடக்கு மாநிலத்தில் ஏராளமான சிங்களக் குடியேற்றங்களின் மூலம் அங்கு மக்கள் தொகையில் மாற்றம் உருவாக்கத் திட்டமிட்டு இலங்கை அரசு செயல்படுகிறது. வடக்கு மாநிலம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.'' என மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.
டப்ளின் விசாரணை ஆணையத்தில் அங்கம் வகித்த பத்துப் பேரில் தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிநாயகம் இராஜேந்திர சச்சாரும் ஒருவராவார். அந்த ஆணையம் அளித்த அறிக்கையிலும் மேலே கண்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் பெயரில் இந்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? பெயருக்குக் கூட தனது கண்டனத்தைத் தெரிவிக்க இந்திய அரசு முன்வரவில்லை.
ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழ்நாட்டிற்கு வந்து இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிடமாட்டோம் என இராஜீவின் பெயரால் சூளுரைப்பதால் எந்தப் பயனும் இல்லை.
கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியும் கொடுத்து இராணுவ ரீதியான உதவிகளையும் அள்ளித் தந்து ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு துணை நின்ற இந்திய அரசு இன்னமும் அதைத் தொடர்ந்து செய்கிறது. அண்மையில் இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி ஜோஷி இலங்கைக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இலங்கை அரசியல் தலைவர்களையும் இராணுவ உயர் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தே இவர் பேசி வருகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கடந்த வாரம் இந்தியாவுக்கு இரகசியமாக வந்து ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு இங்குள்ள இராணுவக் கல்லூரிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சராக இருக்கும் சிதம்பரம் அவர்கள் இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் சென்னையிலே வந்து நீட்டி முழக்குவது எந்த வகையில் சரியானது? தமிழர் நலனில் அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அவரது எதிர்ப்பை மதிக்காமல் போனால் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
1956-ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பம்பாய் நகரம் மராட்டிய மாநிலத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் பொதுத் தலைநகரமாக இருக்கட்டும் என பிரதமர் நேரு அறிவித்ததைக் கண்டித்து மராட்டியர்கள் பெரும் போராட்டம் நடத்தியபோது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த சி. டி. தேஷ்முக் தனது இன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து அமைச்சர் பதவியைத் துறந்து வெளியேறினார். அவரது பதவி விலகலால் அதிர்ந்து போன பிரதமர் நேரு உடனடியாகத் தனது நிலையை மாற்றிக் கொண்டு பம்பாய் நகரம் மராட்டியர்களுக்கே உரியது என அறிவித்தார். அன்றைய நிதியமைச்சருக்கு இருந்த பதவி விலகும் துணிவும் தன்மானமும் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு இல்லாமல் போனது ஏன்?
|