(1982 - பிப்ரவரி 19 ஆம் நாள் பிற்பகல் 1 மணிக்கு தமிழக சட்டமன்றத்தில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)
திரு. பழ. நெடுமாறன்- மதிப்பற்குரிய துணைத் தலைவர் அவர்களே, இந்த மின் திட்ட அறிக்கை குறித்து எங்கள் கட்சியின் சார்பிலே சில கருத்துக்களை எடுத்து வைக்க முன் வந்திருக்கிறேன். தமிழகத்திலே என்றைக்கும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தித் துறையிலே ஒரு பெரிய நெருக்கடியை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஆண்டல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. நம்முடைய மின் உற்பத்தித் திறனை எந்த, எந்த வகையிலே அதிகரிக்கலாம் என்பதற்கு, நம்முடைய பொறியியல் வல்லுநர்களும், மின்சார வாரியமும் திட்டமிட்டு, எத்தனையோ செய்தாலுங்கூட, பல வகைகளிலே முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு, அதன் விளைவாக நாம் எதிர்பார்த்த திட்டங்களை நிறைவேற்றமுடியாத நிலைமையிலே இருந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக, ஒகேனக்கல் திட்டம். அந்தத் திட்டத்தைப் பற்றி ஆளுநர் உரை விவாதத்திலே கூட நான் குறிப்பிட்டேன். அந்தத் திட்டத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது. அந்தத் திட்டம் இனி எந்தக் காலத்திலேயும் நிறைவேற முடியாத திட்டமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழக மக்களுக்கு வந்திருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முதலமைச்சர் குண்டுராவ் மேகதாது திட்டத்தை அந்த மாநில அரசு நிறைவேற்றப் போகிறது, உலக வங்கியின் உதவியுடன் என்று அறிவித்திருப்பதை ஆளுநர் உரை விவாதத்தில் சுட்டிக்காட்டி அதன் விளைவாக, ஒகேனக்கல் திட்டம் என்ன ஆகும் என்று நான் கேட்டேன். நம்முடைய மதிப்பற்குரிய முதலமைச்சர் அவர்கள் அதற்கு விடை அளிக்கும்போது, நாம் நம்முடைய ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறோம் மத்திய அரசுக்கு என்று சொன்னார்கள். ஆட்சேபனையைத் தெரிவித்த பின்னாலுங்கூட கர்நாடக அரசு தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. காரணம், இதற்கு முன்னால் இதே காவிரியின் துணை நதிகளாகிய ஹேமாவதி, கபினி போன்ற நதிகளிலே அணைகள் கட்டுவதென கர்நாடக அரசு முனைந்தபொழுது நாம் ஆட்சேபித்தோம். இந்தியாவின் திட்டக்குழு அதற்கு அனுமதி தர மறுத்தது, மத்திய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக அந்த இரண்டு அணைகளைக் கட்டி முடித்து, அதன் விளைவாக, நாம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறோம். அதே போல், இந்த மேகதாது திட்டத்தையும் மத்திய அரசு உத்தரவை மீறி அவர்கள் கட்டினால் நாம் என்ன செய்வது என்பதுதான் கேள்வி.
ஒகேனக்கல் திட்டத்தைப் பொறுத்தவரையிலே, இன்று, நேற்றல்ல, 1961-ஆம் ஆண்டிலேயே அந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. சென்ட்ரல் வாட்டர் அன்ட் பவர் கமிஷனுக்கு இந்தத் திட்டத்தின் நகலை அன்றைக்கிருந்த தமிழக அரசு அனுப்பி வைத்தது. 25-8-1961-லே இந்தத் திட்ட நகல் சென்ட்ரல் வாட்டர் அன்ட் பவர் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அதிலே சில சந்தேகங்களைக் கேட்டு, தமிழக அரசுக்கு எழுதினார்கள். அதற்கும் தமிழக அரசு விரிவான பதிலை, இரண்டு மாதங்களிலேயே அனுப்பியிருக்கிறது. இவ்வளவு செய்ததோடுகூட, தொடர்ந்து தமிழகத்தின் சார்பிலே, அப்பொழுது எந்த ஆட்சியிருந்தாலும், அந்த ஆட்சியாளர்களாலே வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலுங்கூட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து நமக்கு அனுமதி வரவில்லை. காரணம், கர்நாடகம் ஆட்சேபனை செய்கிறது என்பதால் 1961-லேயே ஒகேனக்கல் திட்டம் வகுக்கப்பட்ட நேரத்திலே, அதைப்பற்றி, தமிழக அரசு, மத்திய அரசிடமும், சென்ட்ரல் வாட்டர் போர்ட் கமிஷனிடமும் வற்புறுத்திய காலத்திலே, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றிய பேச்சே இல்லை. பின்னாலே, அவர்களுக்கு அந்தச் சிந்தனை வந்து, இன்றைக்கு அதை நிறைவேற்ற முற்படுகிறார்கள். அந்த வகையிலே நம்முடைய அரசு ஒரு படி விட்டுக் கொடுத்து, கர்நாடக அரசும், தமிழக அரசும் சேர்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று நம்முடைய அரசு கூறியது. அதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. "இரண்டு அரசுகளுக்கும் வேண்டாம். மத்திய அரசே அந்த ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றட்டும். அதனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை, இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வோம். இரண்டு மாநில மக்களின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துவோம்' என்று நம்முடைய அரசு கூறியது. அதையும் அவர்கள் ஏற்கவில்லை.
ஒகேனக்கல் எங்கேயிருக்கிறது? தமிழக - கர்நாடக எல்லையில். இந்தப் பக்கம் நம்முடைய பகுதியிலே 15-ஆவது கிலோமீட்டரிலே இருக்கிறது. எல்லைக்கு அந்தப் பக்கத்திலே மேகதாது திட்டம் இருக்கிறது. காவிரி ஆற்றுக்கு அந்தப் பக்கம் கர்நாடகக் கரை, இந்தப் பக்கம் தமிழகக் கரை. ஆகவே, இரண்டு பக்கங்களுக்கும் பொதுவாக, எல்லையாக, காவிரி ஆறு ஓடிக்கொண்டிருக்கிற பகுதியிலே அணையைக் கட்டி அதன்மூலம் கிட்டத்தட்ட ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிட்டு, அதற்கான வேலைகளை நாம் ஆரம்பிக்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிற வேளையிலே கர்நாடகத்தின் பிடிவாதத்தின் காரணமாக, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 20 ஆண்டு காலமாக நம்மாலே எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் இப்போது போட்டியாக ஒகேனக்கல்லில் இருந்து சற்றுத் தொலைவில் அவர்கள் எல்லைக்குள்ளே இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்றிவிடுவார்களேயானால், அதற்குப் பின்னர் எந்தக் காலத்திலேயும் நாம் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிடக் கூடிய அபாயம் இருப்பதை நான் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
ஏற்கெனவே காவிரி நீர் பிரச்சினையிலே நம்முடைய தமிழகம் 100 டி.எம்.சி. தண்ணீரை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்திக் கொண்டிருக்கிறது. 100 டி.எம்.சியை நாம் விட்டுக் கொடுப்பதனால் ஏற்படக்கூடிய அந்த நீர் இழப்புக்கு, அதன் விளைவாக ஏற்படக்கூடிய மின் உற்பத்தி இழப்பிற்கு மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டுமா, வேண்டாமா? அதற்கு ஈடு செய்யும் வகையிலாவது ஒகேனக்கல் திட்டத்திற்கு அனுமதி தரவேண்டுமா, வேண்டாமா? நம்முடைய நீரைப் படுங்கி அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். நாம் போடுகிற திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதே நேரத்தில் கர்நாடக அரசு அந்தத் திட்டத்தை அவர்களாகவே, தன்னிச்சையாக அமைக்கின்ற நேரத்தில் மத்திய அரசு தடுக்காமல் இருக்குமேயானால், தமிழகத்தின் எதிர்காலம், மின் துறையில் இருள் சூழ்ந்ததாக ஆகிவிடும் என்று நான் இந்த அவையிலே எச்சரிக்க விரும்புகிறேன். அந்த அபாயம் இன்றைக்கு வந்தாகிவிட்டது. ஹேமாவதி, கபினி அணைகள் மத்திய அரசாங்கத்தை மீறி, கர்நாடக அரசு கட்டி முடித்து 2 லட்சம் ஏக்கருக்குப் புதிதாக பாசன வசதிகளை கர்நாடக அரசும் ஏற்படுத்திக் கொண்டது. அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டாலும்கூட, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல மேகதாது திட்டத்திலே நீங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் மட்டும் போதாது. மத்திய அரசு அவர்களுக்குப் புத்திமதிகளை சொல்லி இருக்கின்றது என்று சொன்னாலும் போதாது. அதையும் மீறி அவர்கள் செய்வார்களானால் உங்களுடைய நிலை என்ன? ஒகேனக்கல் திட்டத்தை நம்முடைய அரசு, மத்திய அரசு அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் செயல்படுத்துவதற்கு முன் வருமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
மேகதாது திட்டத்தைப் பற்றி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் குண்டுராவ் அவர்கள் அண்மையிலே சொல்லி இருக்கிறார்கள். மேகதாது திட்டம் தமிழக நலனுக்குப் பாதகமானது என்றால், ஒகேனக்கல் திட்டம் கர்நாடக மாநிலத்திற்குப் பாதகமானது. ஆகவே நாங்கள் அதை அனுமதிக்கமாட்டோம் என்றும் பகிரங்கமாக அவர்கள் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதை இந்த அவையின் முன் கொண்டுவர விரும்புகிறேன். நெய்வேலியில் இருக்கக்கூடிய அனல்மின் திட்டத்தைப் பற்றியும் நான் இங்கே சில வார்த்தைகளை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். நெய்வேலியில் இருக்கக்கூடிய அந்த நிலையத்தைப் பற்றி நம்முடைய மின் துறை அமைச்சர் அவர்கள் மத்திய மின் துறை மாநாட்டிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 1980-ஆம் ஆண்டு சூன் மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற அந்த மத்திய மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் அவர்கள் அதை வற்புறுத்திச் சொன்னார்கள். ஏஞு ஞிடிtஞுஞீ tடச்t ணீணிதீஞுணூ-ட்ச்ணச்ஞ்ஞுட்ஞுணt டிண tடஞு குtச்tஞு டச்ண் ஞஞுஞிணிட்ஞு ஞீடிஞூஞூடிஞிதடூt ஞஞுஞிச்தண்ஞு Nஞுதூதிஞுடூடி தீடடிஞிட ண்தணீணீடூடிஞுஞீ 2676 ட்டிடூடூடிணிண தணடிtண் டிண 1976-77 தீச்ண் ச்ஞடூஞு tணி ஞ்டிதிஞு ணிணடூதூ 1768 ட்டிடூடூடிணிண தணடிtண் டிண 1979-80). கூடடிண் டச்ண் ணூஞுண்தடூtஞுஞீ டிண ச் ண்ஞுணூடிணிதண் ஞிணூடிண்டிண் 2676 மில்லியன் யூனிட்டுகள் 1976-77-இல் உற்பத்தியானது. ஆனால் 1979-80-இல் 1768 மில்லியன் யூனிட்டுகள்தான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆகவே, உற்பத்தி குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது என்பதை நம்முடைய மதிப்பற்குரிய மின்துறை அமைச்சர் அவர்கள் அந்த மாநாட்டிலே எடுத்துக் கூறினார்கள். அப்படி எடுத்துக் கூறிவிட்டு, இன்னொரு யோசனையையும் சொன்னார்கள். ஆகவே, நெய்வேலி மின் உற்பத்தி திட்டம் முற்றிலும் நிறைவேற்றப்பட்டவுடன், தமிழக அரசின் கையில் ஒப்படைக்கவேண்டும். அப்போது தான் முழுமையான மின் உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த மாநாட்டிலே அவர் விடுத்த கோரிக்கையை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதிலே இந்த மன்றத்திலே உள்ள சகல கட்சிகளும் நம்முடைய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
நெய்வேலி மின் திட்டம் தமிழக அரசின் கையில் ஒப்படைக்கப்பட்டால், அது முழுமையான உற்பத்தியை, திறமையான நிர்வாகத்தைச் செய்யும் நிலைமை ஏற்படும். இந்தக் கோரிக்கையை நம்முடைய அமைச்சர் அவர்கள் 1980-லே சொன்னார்கள். இன்றைக்கும் அதைத் தொடர்ந்து வற்புறுத்தி அதைப்பெறவேண்டும் என்று நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்லிக்கொள்கிறேன். தற்போதைய மின் வாரியச் சட்டங்களும், பணி முறைகளும், அதிகாரங்களும் எப்படி இருக்கின்றன என்பதை அவையின் கவனத்திற்கு வைக்க விரும்புகிறேன். 1948-ஆம் ஆண்டிலே மத்திய அரசாங்கம் வகுத்த ஒரு சட்டத்தின் கீழ் மின் கழகங்கள் இயங்கி வருகின்றன. அந்தச் சட்டத்தின் அடிப்படையிலேதான் நாம் இந்த மின் நிதி நிலை அறிக்கையை விவாதிக்கிறோம். இந்த சட்டமன்றத்தில் மின்சார வாரியத்தின் நிதிநிலை பற்றி விவாதிக்கிறோமே தவிர, மின்சார வாரியத்தின் நிர்வாக ரீதியில் ஏற்பட்டிருக்கிற தாமதத்தைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. காரணம், அவை மத்தியச் சட்டத்தினால் கட்டுப்பாடு செய்யப்படுகின்றன. இந்த நிலை நீடிப்பது சரியல்ல. இந்த பழைய சட்டத்தில் இருக்கிற ஓட்டை உடைசல்களை கவனிப்பதற்கு இந்தச் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால், நம்முடைய மாநில அரசு நிதியிலிருந்துதான் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்குமேல் மின்சார வாரியத்திற்கு வாரிக்கொட்டிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பணத்தைத்தான் கொடுக்கிறோமே தவிர மத்திய நிதி அல்ல. அப்படி இருந்தாலும் அதனுடைய நிர்வாகத் துறையிலே சீர்திருத்தம் செய்வதற்கு இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் அதற்கு நாம் ஏன் நம்முடைய பணத்தை வாரிக் கொடுக்கவேண்டும்? யார் இந்த மின்சார வாரியத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ அந்த மத்திய அரசு கொடுக்கவேண்டுமே தவிர நாம் கொடுக்க வேண்டியதில்லை. நாம் கொடுப்பது எந்த வகையிலும் சரியல்ல. அது மட்டுமல்ல, பழைய சட்டத்தைத் திருத்துவதற்காக மாநில அரசு சர்க்கார் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டுமென்று நான் வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னொன்று, தமிழ்நாட்டில் நம்முடைய அரசு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஒன்றை தொடங்க முன்வர வேண்டும். கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் தனியாக மாநில அரசின் சார்பிலே எலக்ட்ரானிக் கார்ப்பரேஷனை அமைத்திருக்கிறார்கள். மத்திய அரசிலே கூட எலக்ட்ரானிக் கார்ப்பரேஷனுக்கு என்று தனியாக ஒரு துறையை அமைத்துவிட்டார்கள். ஆகவே, தமிழ்நாட்டிலேயும் ஒரு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷனை அமைக்கவேண்டும் என்று நான் நம்முடைய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அதுபற்றி பரிசீலனை செய்ய வேண்டுமென்று வற்புறுத்துகிறேன்.
அதைப்போலவே, மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரில் இருந்த அனல்மின் நிலையம் மூடப்பட்டுவிட்டது. இயந்திரங்கள் எல்லாம் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் கட்டிடம், தளவாடங்கள் இருக்கின்றன. ஆகவே, அந்த இடத்திலே மீண்டும் ஒரு அனல் மின் நிலையத்தை அமைக்கவேண்டும். அல்லது அந்த இடத்திலே பல்புகள், ட்ரான்ஸ்பார்மர்கள், மீட்டர்கள் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு தொழிற்சாலையை அமைக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக ஒன்றைக் குறிப்பட விரும்புகிறேன். இன்றைக்கு கிராமங்களில் சிறு கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இருக்கின்றன. அவைகளுக்கும் அரசு வணிக மின் கட்டணம் போட்டிருக்கிறது. இது சரியல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவ்வாறு போடவில்லை. குறைந்த அளவு போட்டார்கள். அதை மாற்றி, 1979லே வணிக மின் கட்டணம் போட்டார்கள். சிறு கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை அதிகக் கட்டணம் செலுத்தவேண்டிய காரணத்தால் சிரமப்படுகின்றன. அவைகளுக்கு அந்த வசதி இல்லை. அதை எண்ணிப்பார்த்து இப்போது இருக்கின்ற கட்டண முறையை மாற்றி குறைந்த கட்டணம் போட வேண்டுமென்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
|