நாமும் நமது மொழிக் கொள்கையும் - பேரா. ச. முத்துக்குமரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:34

முன்னாள் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம்

கல்வியின் வழி பொது அறிவையும் தொழில் அறிவையும் பெறுவதுடன் வாழும் நெறியையும் நாம்அறிந்து கொள்கிறோம். அத்தகைய கல்வியைப் பெற ஒரு மொழி தேவை. அம்மொழி நமது நாட்டு மொழியாக இருப்பதே இயற்கை. நமது மொழி இலக்கியம் நமது பண்பாட்டை. நமக்கு அறிவிக்கிறது என்பதால் நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் புரிந்துகொள்ள நாம் நமது மொழி இலக்கியங்களைக் கற்க வேண்டும். மற்ற வட்டாரங்களில் உள்ளவர்கள் மற்ற நாட்டில் வாழ்பவர்கள் குறித்தும் அவர்களைப் பற்றிய நம் மொழி நூல்களைக் கற்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

அரசுடைய கடமைகளில் முக்கியமான ஒன்று, நன்னடை நல்கள், நன்னடை நல்க ஒரு மொழி தேவை அம்மொழி நம் நாட்டு மொழியாகவே இருக்க முடியும்.
அரசு அதன் மக்களுடன் தொடர்பு கொள்ள மக்கள் மொழியையே பயன்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவ வாய்ப்பில்லை. ஆட்சியாளருடன் தொடர்பு கொள்ள நமது மொழி தவிர வேறு மொழி தேவை இல்லாத நிலைமை 1947 வரை இருந்தது.

1947ல் நாம் சுதந்திரம் பெற்றோம். நமது மொழி சுதந்திரம் பெற்றதா? இல்லையே, அது சுதந்திரம் பெற்றால்தான் நமது சுதந்திரம் முழுமை அடையும்.

நமது மொழியை நம் மக்கள் நன்றாகப் படிக்காததால் நமது பண்பாடு குலைகிறது. நம் மக்கள் சீரழிகிறார்கள் என்பதை நமது இளைஞர்களையும், செய்தித்தாள்களையும், திரைப்படங்களையும் கண்டால் தெரியும். நாம் நம் சமுதாயம் சீரழியும்போது ஏதும் செய்யாது பார்த்துக்கொண்டு இருக்கலாமா?

அறிவைப் பெற ஒரு மொழி மட்டுமே படித்தால் போதுமானது. அம்மொழி நம் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சுதந்திர நாட்டில் அரசு மக்களுக்கு நல்லதைக் கற்பிக்கும் மொழி, ஆட்சி மொழி, மக்கள் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. நாம் சுதந்திரத்தின் பயனை முழுமையாக அடைய நம் ஆட்சி நம் மொழியிலும், நம் கல்வி நம் மொழியிலும் இருக்க வேண்டும். அதற்காகவே நாம் சுதந்திரப் போராட்டம் நடத்தினோம். மொழிவழியில் மாநிலங்களைப் பிரித்தோம். சுதந்திரப் போரின் முழுப் பலனையும் பெற நமது நாட்டு ஆட்சி அது ஊராட்சி, மாநில ஆட்சி, கூட்டாட்சி எந்த ஆட்சியாக இருந்தாலும் நமது மொழியில்தான் இருக்க வேண்டும்.

நாம் முழுச் சுதந்திரம் பெற்ற நிலையில் நம் குழந்தைகள் யாவரும் நம் மொழியையும், நம் மொழி இலக்கியங்களையும் படித்தாலே போதுமானது. வேறு இரு மொழிகளை நம் குழந்தைகள் யாவர் மீதும் திணிக்க வேண்டியதில்லை. யாருக்கு மற்ற மாநிலங்களுக்கோ மற்ற நாடுகளுக்கோ போக வேண்டியுள்ளதோ அவர்கள் மட்டுமே தேவையான மொழியைத் தேவையான போது கற்றுக் கொள்ளலாம். நம் மொழியை நேராகக் கற்றிருப்பதால் அடுத்த மொழியை எளி தாகக் கற்க முடியும். ஆகவே, எப்போது தேவையோ அப்போது கற்றுக் கொள்ள லாம். இத்தகைய மொழிக் கொள்கையே நம் மக்கள் யாவரும் கல்வி கற்கவும் நம் நாட்டு முன்னேற்றத்திற்கும் தேவை. அந்த நிலையில் நம் மக்கள் நம் மொழியை உயர்வாகவும் நம் முன்னோர் எய்தியவற்றை மேன்மையாகவும் கருதுவர். சுதந்திர மனிதர்களாக நிமிர்ந்த நன்னடை பயில்வர். மக்கள் யாவரும் முன்னேறுவார்கள். நாடும் முன்னேறும் அத்தகைய நிலை எய்த இறைவன் துணை நிற்பானாக.
(தமிழ் மொழிக் கொள்கை ஆவணம் பக்கம் - 21-22)

தேக்க நிலைக்கான காரணங்கள்

1. இத்திட்டம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கப்பெறாத நிலை.
2. பல அலுவலகங்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டம் என்னும் கருத்து இருந்ததாகத் தெரியவில்லை.
3. சில அலுவலகங்களில், தமிழ் வளர்ச்சித் திட்டம் முடக்கப்பட்டு ஆங்கில ஆட்சி மொழித் திட்டம் மறுபடியும் முழுமையாக இடம் பெற்றுவிட்டது.
4. தமிழ்த் தட்டச்சுகள் போதிய அளவு இன்மை.
5. படிவங்கள் போன்றவை ஆங்கிலத்தில் இருப்பன.

இவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டியவையாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:

1. இத்திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டதால் அதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை.
2. அலுவலர், பணியாளர் ஆகியோரின் ஈடுபாடின்மையைப் போக்க மூவாண்டு முனைப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம், பல நிலை அலுவலர்களுடன் கவர்ந்து உருவாக்கப்பட்டது.
3. இந்திய ஆட்சிப் பணி, இந்தியன் காவல் பணி போன்ற பணிகளில் ஈடுபடும் தமிழ் தெரியாத அலுவலர்களுக்கு அவர்களின் பயிற்சிக் காலத்திலேயே போதிய அளவு தமிழ் கற்பிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. பணியிலுள்ள தமிழ் தெரியாத அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது.
4. ஆங்கிலத் தட்டச்சுக்குப் பதிலாகத் தமிழ்த் தட்டச்சுகளை வழங்கும் திட்டம் அமைக்கப்பட்டது.
5. படிவம் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்குத் தமிழ் வளர்ச்சி இயக்கத்திலுள்ள பிரிவை விரிவாக்கும் திட்டம் ஆயப்பட்டது.

(தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும் பக்கம் 12, 127)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.